9.பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க நிபந்தனையா?



இன்னும் சிலர் மேற்கண்ட ஹதீஸின் லாதஸூமூ ஹத்தா தரவுல் ஹிலால் வலா தப்ஃதிரு ஹத்தா தரவ்ஹூ- என்ற வாக்கியத்தை மட்டும் வைத்துக் கொண்டு ரமழானுக்காக பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது ஷரத்து (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன். எனவே பிறந்த பிறையை பார்ப்பது என்பது ஒரு வஸீலா வழிமுறை அல்ல என்று மக்கள் மத்தியில் தவறான செய்தியை பிரச்சாரமாக வைக்கின்றார்கள். மேலும் பிறந்த பிறையை கண்ணால் பார்ப்பது என்பது கட்டாயம் அதனால்தான் லா - ஹத்தா என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. பஸ் டிக்கட் எடுக்காமல் பஸ்ஸில் பிரயாணம் செய்யக்கூடாது. இது நடக்காமல் அது நடக்கக்கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதில் நாம் என்ன கேட்கிறோம் என்றால் மேகமூட்டத்தைக் காரணம்காட்டி 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 நாட்களாக ஆக்கும்போது இதே பஸ் டிக்கட் கதையின் நிலை என்ன? அப்போது மட்டும் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பது என்பது 'ஷரத்து' (நிபந்தனை), கண்ணால் பார்ப்பது என்பது ஒரு 'கண்டிஸன்' என்ற பிடிவாதங்கள் தளர்ந்து விடுவதேன்?. 30-வது நாள் பிறைப்பார்க்கத் தேவையில்லை என்று எந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதை இவர்கள் மக்கள் மன்றத்தில் காட்டுவார்களா? பயணச்சீட்டு எடுக்காமல் பேருந்தில் பிரயாணம் செய்யக்கூடாது என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். அது பேருந்து பயணத்திற்கும், பயணச்சீட்டிற்கும் இந்த உதாரணம் ஒத்துப்போகும். ஆனால் பிறந்த பிறையை அறிந்து கொள்வதற்கு இந்த உதாரணம் பொருந்தாது என்கிறோம்.

காரணம் ரமழான் மற்றும் பெருநாட்களை தீர்மானிப்பது என்பது மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம். எனவே மார்க்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்துதான் தெளிவான ஆதாரத்தைத் தரவேண்டும். பஸ் டிக்கட் உதாரணங்கள் எங்களுக்குத் தேவையில்லை என்கிறோம்.

மேலும் மேற்படி ஆலிம்கள் எனப்படுவோர் பிறந்த பிறையை மேற்குத்திசையில் மஃரிபு நேரத்தில் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒரு நாள் மட்டும் புறக்கண்ணால் (அல்லது தொலை நோக்கியால்) பார்த்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர். மாற்றுக் கருத்துடையோரின் இந்த நம்பிக்கையின்படி புறக்கண்ணால் பிறை பார்த்தல் என்பது ஷரத்து (நிபந்தனை) என்பதும், புறக்கண்ணால் பார்ப்பது என்பது ஒரு கண்டிஸன் என்பதும் மார்க்கம் என்றிருந்தால்...

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 29-வது நாள் பின்னேரம் என்ற அந்த ஒருநாள் மட்டும் பிறையை பார்த்திருக்க வேண்டும்.
அதுவும் மேற்குத் திசையில் மஃரிபு நேரத்தில் புறக்கண்களால் பிறையை பார்க்குமாறு இந்த உம்மத்திற்குக் கட்டளையிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் தானும் பார்த்து, பிறரையும் தவறாது பார்த்து வரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி இருக்க வேண்டும்.
இன்னும் பிறந்த பிறையைப் பார்த்து வருவது முஸ்லிமான ஒவ்வொரு ஆண் பெண் மீதும் கடமையான விதியாக ஆக்கி இருக்க வேண்டும்.
இதில் ஒன்றைக்கூட நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லையே ஏன்? நபி (ஸல்) அவர்களே செய்யாத போது மார்க்கத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை மார்க்கத்தின் பெயரால் புகுத்தி முஸ்லிம்களை கட்டாயப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறோம்.

حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال عروة بن الزبير قالت عائشة رضي الله عنها ............... ثم قام النبي صلى الله عليه و سلم من العشي فأثنى على الله بما هو أهله ثم قال ( ما بال أناس يشترطون شروطا ليس في كتاب الله من اشترط شرطا ليس في كتاب الله فهو باطل وإن اشترط مائة شرط شرط الله أحق وأوثق ) صحيح البخاري - (2 ஃ 756) 2047 - ஸ

பின்னர் இஷாவில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, 'சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை எல்லாம் விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீர்ப்பே பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப்படுத்தக் கூடியதும்) ஆகும். வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும்' என்று கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி 2047, 2729.

குர்ஆனுக்கு எதிராகவும், நபிவழிக்கு எதிராகவும், நூறு நிபந்தனைகளைக் கூறி மக்களை பிறை விஷயத்தில் குழப்பும் இயக்கங்கள், ஜமாஅத்துகள், அரசாங்கங்கள் மற்றும் தலைவர்கள் மேலே சுட்டிக்காட்டியுள்ள நபிமொழியை ஒன்றுக்கு பலமுறை படித்துப்பார்த்து தங்களை திருத்திக் கொள்ளுமாறு உபதேசிக்கிறோம். பிறையை பார்க்கச் சொல்லி மக்களுக்குக் கட்டளையிடுபவர்கள் இவ்வாறு பிறருக்கு உபதேசிக்கும் முன்னர் முதலில் அவர்கள் பிறைகளை பார்த்து வருவதற்கோ, அதற்காக முயற்சி எடுப்பதற்கோ முன் வராதது ஏனோ?

எனவே பிறைகளை பார்ப்பது என்பது இறைவனின் நாட்காட்டியான பிறையின் படித்தரங்களை அவதானித்து அறிந்துகொள்ளும் ஒருவழிமுறைதானே தவிர அது கட்டாயக் கடமையல்ல என்பதை மக்களே நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று பேசும் அறிஞர்களில் எத்தனை பேர் அவ்வாறு பிறைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்? அல்லாஹ்விற்காக அவர்கள் நெஞ்சத்தில் கைவைத்து சொல்லட்டும்.

இன்னும் சில அறிஞர்களோ, அரபு மொழியின் அகராதிப்படியும் அதன் இலக்கணத்தின் படியும். ரஆ, ரஅய்தும், தரவ்ன போன்ற சொற்கள் எந்த இடத்தில் வந்தாலும் நேரடி அர்த்தமான கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும் தான் கொள்ள வேண்டும். மேலும் கருவியின் துணைகொண்டு பார்த்தாலும் கண்ணால்தான் பார்க்கிறோம் என்றும் கூறுகிறார்கள். மேலும் ரஆ என்ற வார்த்தை செயல்பாட்டு வினையைக் குறிக்கிறது. பார்த்தான் என்றால் எதைப் பார்த்தான் என்ற கேள்விக்கு அவன் பார்த்த பொருளின் பெயர் விடையாக வரும். இத்தகைய ஒரேயொரு செயல்பாட்டுவினை மட்டும் ஒரு வாக்கியத்தில் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள். ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை ஒரு வாக்கியத்தில் இருந்தால்தான் பார்த்தல் என்ற விதியோடு மற்ற பொருளும் வரும் என்று தங்களது அரபுப் புலமையை மக்களிடத்தில் வெளிப்படுத்துகின்றனர்.

முதலில் வினை என்றால் என்ன? செயல்பாட்டுவினை என்றால் என்ன என்பதைக்கூட அறியாத இவர்களின் பேச்சைக் கேட்கும் அரபுமொழி தெரியாத மக்களும் நமது ஆலிம் அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றனர். மேலும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக என்ற அத்தியாயாத்தில் யானைக் கூட்டத்தை அல்லாஹ் என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா? என்று அல்லாஹ் கேட்கிறான். இதில் யானைக்கூட்டம் என்பது ஒரு பெயர்ச்சொல், இங்கு அல்லாஹ் என்ன செய்தான் என்பது VERB(வினை), எனவே அரபு அகராதியின் விதிப்படி இரண்டு வினைகளைப் பார்த்தல் (தரா) என்று கூறப்பட்டால் அதை சிந்தனையால், கற்பனையால் பார்த்தல் என்ற பொருளைக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு, இதா ரஅய்துமுல் ஹிலால்...ஸூமு லி ருஃயத்திஹி...லாத ஸூமு ஹத்தா தரவுல் ஹிலால் போன்ற ஹதீஸ் சொற்றொடர்களில் பிறந்த பிறையைப் பார்த்தல் என்ற ஒரு செயல்பாட்டு வினைதான் வருகிறது எனவே பிறந்த பிறையைப் புறக்கண்களால்தான் பார்க்கவேண்டும் என்று தங்களது தவறான வாதத்தை நிலைநாட்ட முற்படுகிறார்கள்.

மக்களே சற்று சிந்தியுங்கள்! மேற்கண்ட வாதத்தின்படி அல்ஃபீல் அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅல ரப்புக்க' என்ற வசனங்களில் 'யானைக் காரர்கள்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்'தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.

இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅல ரப்புக்க' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.

அதுபோல வானங்கள் படைக்கப்பட்ட முறையைப் பற்றி சிந்திக்குமாறு வல்ல அல்லாஹ் கூறுகிறான். ''ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?'' (71:15) என்று குறிப்பிடுகிறான். மேற்கண்ட வசனம் தூண்களின்றி படைக்கப்பட்டுள்ள வானம் அடுக்கடுக்காவும் இருக்கின்றன என்ற அற்புதத்தைப் பற்றி சிந்திக்கவே தூண்டுகிறது. இந்த வசனத்தில் இடம்பெறும் 'பார்க்கவில்லையா' என்ற சொல்லை வைத்துக் கொண்டு ''நான் வானத்தைப் பார்த்தேன், எந்த அடுக்குகளும் என் கண்களுக்குத் தெரியவில்லை, வெறும் நீலநிறமாகத்தான் தெரிகிறது'' என்று எவரும் கூறினால் அவரை என்னவென்று சொல்வோம்?.

இன்னும் ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்றும், ஒன்றுக்கு அதிகமான செயல்பாட்டு வினை அவ்வாக்கியத்தில் இருந்தால்தான் சிந்தனையுடன் பார்த்தல் என்றும் இத்தகைய இலக்கண விதியை இவர்களுக்கு சொன்னது யார்? இந்த இலக்கண விதி எங்கே உள்ளது? எந்த இலக்கணப் புத்தகத்திலும் காணக்கிடைக்காத இந்த இலக்கண விதிக்கு மார்க்க ஆதாரம் அல்லது அங்கீகாரம்தான் என்ன? என்பதை முதலில் சொல்லட்டும். அதன்பிறகு தங்களின் தவறான இந்த வாதங்களை பிரச்சாரம் செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படி ஒரு விதிமுறை அரபு இலக்கணத்தில் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை நிலை. ஒரு வாதத்திற்காக அரபு இலக்கணத்தில் இப்படி ஒரு கருத்து இருப்பதாகவே வைத்துக் கொள்வோம், அப்படி இருந்தால் மனிதன் தனது கரங்களால் இயற்றிய அரபு இலக்கணம் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகுமா? என்பதை அவர்கள் முதலில் விளக்க வேண்டும். இது சமத்பந்தமாக லிஸானுல் அரப் எனும் அகராதி நூலில் இடம்பெற்றுள்ள கருத்தின் விளக்கத்தை விமர்சனம் பகுதியில் காண்பீர்கள்.

மாற்றுக் கருத்தினரின் தற்போதைய வாதப்படி பார்த்தாலும் வினைச் சொல் வரும்பொழுது தான் கண்ணால் பார்;ப்பதா? அறிவால் பார்ப்பதா? என்ற வாதப்பிரதிவாதங்கள் ஏற்படும். ஆனால் வினைச்சொல் அல்லாத பிற சொற்களோ, 'ருஃயத்' (மஸ்தர்) போன்ற பெயர்ச் சொல்லோ பிறைதொடர்பான ஹதீஸ்களில் வரும்போதும் இதே சர்ச்சையை ஏன் கிளப்புகின்றார்கள்? இதிலிருந்து இவர்களது அரபுப் புலமையின் நிலைமையை நாம் அறிந்து கொள்ளலாம். 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு அல்குர்ஆன் மூலம் வல்ல அல்லாஹ் 'ரஃஅய்யல் அய்ன்' என்ற பதத்தை பயன்படுத்தி விளக்கிவிட்டதை ஒன்று சேர்ந்து மறைப்பதேன்?

மக்களே! நபி (ஸல்) அவர்கள் மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமான 'தாருந்நத்வா' அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துச் சொன்னார்கள். அப்போது 'தாருந்நத்வா'வின் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும் அவனது கூட்டாளிகளும் இதே அரபுமொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததற்காக இறுதியில் இறைச்சாபம் பெற்று அவர்கள் அனைவரும் அழிந்தே போயினர் என்பது முஸ்லிம்கள் எவரும் மறக்கவியலாத வரலாறு.

இன்றைய ஆலிம்களில் சிலர் நபிமார்களின் வாரிசுகளாக தங்களை நம்புகின்றனர். தங்களின் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து ஆதாரத்தைத் தராமல் இல்லாத இலக்கணத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாமிய மார்க்கத்திற்கு அடிப்படை ஆதாரமாகாத அகராதி வியாக்கியானங்களையும், யூத தயாரிப்பில் வெளியான 'முன்ஜித்' போன்ற அரபுமொழி அகராதியை கூட கையில் எடுத்துக் கொண்டு, பிறந்த பிறையைப் புறக்கண்ணால்தான் பார்க்கவேண்டும், அதுதான் மார்க்கம் என்று பிடிவாதமாக பேசுகின்றனர். இது அழகல்ல, மாறாக அது 'தாருந்நத்வா' குரைஷிகளின் வாதமேயாகும்.

ஆக்கத்தின் இப்பகுதி இலக்கணமா? அல்லது குறைஷிகளின் தலைக்கனமா? என்று ரீதியில் அமைந்திருப்பது தங்களுக்கு நெருடலாக இருக்கலாம். மாற்றுக் கருத்துடைய உலமாக்களை தலைக்கனம் பிடித்தவர்கள் என்று வசைபாடுவது நமது நோக்கம் அல்ல. அல்லது அவர்களை மக்கத்து குறைஷிகளோடு ஒப்பிட்டுக் கூறவேண்டும் என்ற எண்ணமும் நமக்கில்லை. நமது உள்ளத்தை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆலிம்களை குறை காண்பதற்காக இப்படி ஒரு தலைப்பை நாம் இதற்கு சூட்டவில்லை. குடும்பம், பொருளாதாரம் என்று பல நெருக்கடிகளுக்கும் மத்தியிலும் சத்திய மார்க்கத்தை நிலைநாட்டும் இலட்சியப் பாதையில் தூய மனதுடன் பயணித்துக் கொண்டிருக்கும் கனிசமாக ஆலிம்கள் இன்றும் இருக்கின்றனர். அவர்களை நன்றியுடன் இத்தருனத்தில் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும் இப்பிறை விஷயத்தில் ஆலிம்கள் என்று அறிப்படும் மாற்றுக் கருத்துடைய ஒருசிலர் செய்யும் பிரச்சாரங்கள் ஒட்டுமொத்த ஆலிம்களின் கண்ணியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. எனவே அகராதி விளக்கம், இலக்கண இலக்கியம் என்று பெருமை பேசித் திரியும் அப்படிப்பட்;ட ஆலிம்களின் கருத்துக்களுக்குத்தான் இப்பகுதியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் தற்போதைய யூத, கிருஸ்துவர்கள்கூட திருமறைக் குர்ஆனை தவறாக விமர்சனம் செய்யும்போது, இதே அரபு இலக்கணத்தை மேற்கோள்காட்டியே விமர்சிக்கின்றனர் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இப்படி எழுதியுள்ளதை வைத்துக் கொண்டு அரபு இலக்கண, இலக்கியத்தையும், அரபுமொழி அகராதியையும் ஹிஜ்ரி கமிட்டி எதிர்க்கிறது என்றும் எண்ணிவிட வேண்டாம். நமது மார்க்க விஷயமாக ஒரு சட்டத்தைச் சொல்வதற்கு அவை அடிப்படை ஆதாரமாகாது என்கிறோம். குர்ஆன், சுன்னாவிலிருந்து ஆதாரத்தைத் தாருங்கள், இவ்விரண்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்று சொல்வதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இப்பிறை குழப்பத்தை தீர்ப்பதற்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிவழியில் இருந்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறோம். இந்நிலையில் நமது கருத்திற்கு நேரடியான பதிலை அளிக்காமல் அகராதி விளக்கம், இலக்கண இலக்கியம் என்று மாற்றுக் கருத்துடையோர் விஷயத்தை திசை திருப்புவது சரியான செயல் அல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.