26.விமர்சனங்கள் - விளக்கங்கள்



விமர்சனம் 1: ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை, மார்க்கமும் தெரியவில்லை. 'ஹிலால்' என்ற பதம் குறித்து அரபி அகராதியான காமூஸில் 'ஸின்னான்' என்று எழுதப்பட்டுள்ளதற்கு 'இரண்டு பற்கள்' என்று மொழி பெயர்த்துள்ளார்கள். மேலும் ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர். இவை ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி ஞானம் கொஞ்சம்கூட இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

விளக்கம் :

மேற்படி வாதம் ஒரு நேர்மையற்ற வாதம் ஆகும். இஸ்லாமிய சமுதாயம் கண்ட மாபெரும் இமாம்களான இமாம் புகாரி (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்), இமாம் திர்மிதி (ரஹ்), இமாம் அபூதாவூது (ரஹ்), இமாம் இப்னு மாஜா (ரஹ்), இமாம் நஸாஈ (ரஹ்), இமாம் தபரானி (ரஹ்), இமாம் பைஹகீ (ரஹ்) உட்பட அறிஞர்களில் பலர் அரபு மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லர். அதில் பலர் அரபு தேசத்தில் பிறந்தவர்களும் அல்லர்.

அரபி, அஜமி என மொழியின் மீதிருக்கும் மோகத்தையும், பாகுபாட்டையும் இஸ்லாமிய மார்க்கத்தின் மூலம் வல்ல அல்லாஹ் குழி தோண்டி புதைத்து விட்டான்;. 'மொழியின் மீது மோகம் கொள்ளாமை' என்ற நிலை முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அளித்துள்ள மாபெரும் பரிசாகும். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த மகத்துவத்தைக்கூட விளங்காத இவர்களின் அரபுப் புலமையின் லட்சனத்தையும் நம் மக்கள் அறிந்தே வைத்துள்ளார்கள்.

இங்கு 'ஸின்' என்ற அரபுச் சொல்லுக்கு நேரடி பொருள் ஒரேயொரு 'பல்' என்பதாகும். இதன் இருமைச் சொல்லான 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள். அதன் பன்மைச் சொல்லான 'அஸ்னான்' என்றால் பல பற்கள் என்று பொருள்படும்.

மேற்படி விமர்சனத்தில் இடம்பெறும் 'ஸின்னான்' என்ற பதம் நேரடி மொழி பெயர்ப்பின்படி 'இரண்டு பற்கள்' என்றுதான் பொருள்படும். السنان الذي له شعبتان يصاد به الوحش என்ற முழுமையான வாக்கியத்தில் 'ஸின்னான்' என்ற பதம் கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது என்பதை நாமும் அறிவோம்.

உதாரணமாக ஒருவருடைய பற்கள் சுத்தமாக வெண்மையாக இருப்பதை சிலாகித்துச் சொல்லும் போது Shining Teeth, Lightning Teath என்று புகழ்வர். மேற்படி உவமையின் பொருள் பற்கள் சுத்தமாக வெண்மையானதாக இருப்பதைக் கூறுகிறது என்பதை பாமரரும் புரிந்து கொள்வர். இதே உவமைதான் அனைத்து மொழிக்கும் பொருந்தும். இருந்தாலும் Shining என்ற சொல்லுக்கு நேரடி பொருள் 'பிரகாசிக்கும் என்று பொருள். அதுபோல Lightning என்ற சொல்லுக்கு 'மின்னல்' என்பதே நேரடி பொருளாகும். இந்த உவமையான சொல்லாடலை வைத்து ' மின்னும் பற்கள் ' என்றோ, ' பிரகாசிக்கும் பற்கள் ' என்றோ யாரும் கூறினால் அவருக்கு ஆங்கில மொழிப் புலமை இல்லை என்று யாராவது கூறுவார்களா? - அப்படி கூற மாட்டார்கள். காரணம் பற்கள் மின்னலைப் போல மின்னுவதுமில்லை, பிரகாசமாக ஒளிர்வதும் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் வெண்மையான நிறத்தைத்தான் இவ்வாறு சிலாகித்துக் கூறப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்வோம். அதுபோல நேரடிப் பொருளை கையாண்டு 'வெண்ணிறப் பற்கள்' என்று கூறினாலும் அதன் பொருள் மாறுபடுவதில்லை. அப்படி நேரடியாகக் கூறுபவர்களை நோக்கி பார்த்தீர்களா ' மின்னும் பற்கள் ' என்றோ, ' பிரகாசிக்கும் பற்கள் ' என்று உவமையாகக் கூறத் தெரியவில்லை, இவருக்கு தமிழ் மொழியறிவுகூட இல்லை என்று எவரும் வாதம் வைத்தால் அவரை பற்றி நாம் எப்படி புரிந்து கொள்வோம்?. இதுபோன்ற ஒரு விமர்சனம்தான் இந்த ஸின்னான் பற்றிய மாற்றுக் கருத்துடையோரின் விமர்சனம்.

ஒரு சொல்லுக்கு நேரடி அர்த்தத்தையும், உவமையான அர்த்தத்தையும் கொள்ள முடியும் நிலையில் மொழி பெயர்ப்பாளர் ஏதேனும் ஒரு பொருளை கையாண்டால் அவருக்கு அந்த மொழியே தெரியவில்லை என்று பேசித்திரிவது நியாயமாகுமா? இது காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறென்ன?. அரபு மொழி அகராதிகள் மார்க்க ஆதாரங்கள் போன்றும், அது அல்லாஹ்விடமிருந்து வஹியாக இறங்கியதைப் போன்றும் நினைத்துக் கொண்டு 'அரபி அரபி ' என்று இவர்கள் புலம்பித் திரிவதைப் பார்த்தால் நமக்கு பரிதாபமாகத்தான் உள்ளது. அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் ஒரு சொல்லை பயன்படுத்தி இருக்கையில், அதை மனிதன் இயற்றிய இலக்கணத்தோடு உரசிப் பார்க்கும் அளவிற்கு இவர்களின் அரபு மொழி அகந்தை சென்று விட்டதைப் பார்க்கிறோம். இவர்களுக்கு அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.

பிறையும் புறக்கண்ணும் என்ற தலைப்பில் அமைந்த சுமார் 350 பக்கங்களைத் தாண்டிய இந்த ஆய்வு நூலில் பிறைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாம் ஆய்வு செய்து தெரிவித்துள்ளோம். இந்நிலையில் 'ஸின்னான்' என்ற சொல்லுக்கு பொருள் வைக்கும் விஷயம்தான் பெரிய பிரச்சனையாக மேற்படி மௌலவிகளுக்கு தெரிந்துள்ளது. இவர்களுக்கு பல் விஷயம்தான் பெரிதாகத் தெரிந்துள்ளது போலும். ஏற்கனவே பிறைகள் விஷயத்தில் பல அபத்தக் கருத்துக்களை முன்வைத்ததிலும், பலஹீனமான செய்திகளை ஹதீஸ் என்று மக்களிடம் போதித்ததிலும் மூக்கறுபட்டவர்கள் இப்போது பற்கள் பற்றி இழுத்துள்ளார்கள். இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி பற்றியும் பிறைகள் குறித்தும் நாம் எடுத்து வைத்துள்ள தெளிவான ஆதாரங்களையும், ஆணித்தரமான வாதங்களையும் அவர்களால் மறுக்க முடியவில்லை. அவர்களின் புறக்கண் பிறை நிலைப்பாடுகள் மீண்டும் மீண்டும் தோல்வியுற்றதை ஒப்புக் கொண்டதைத்தான் இவர்களின் மேற்படி 'ஸின்னான்' வாதம் தெளிவாகக் காட்டுகிறது.

ஆக 'ஸின்னான்' என்ற சொல்லை அதன் நேரடியாக மொழி பெயர்ப்பான 'இரண்டு பற்கள்' என்று எவரும் கூறினால் அவருக்கு அரபுமொழி தெரியவில்லை என்று ஆகிவிடாது. அதுபோல 'ஸின்னான்' என்ற சொல்லை இருமுனைகள் கொண்ட கூர்மையான ஆயுதத்திற்கு உவமையாக மொழிபெயர்த்தால், அவர் அரபு மொழியை கரைத்துக் குடித்தவர் என்றும் ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

'ஸின்னான்' என்ற சொல்லைப் பிடித்துக் கொண்டு அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக ஆர்ப்பரிக்கும் மேற்படி மௌலவிகள் இதுவரை பிறைகள் பற்றிய தங்களின் நிலைப்பாடுகளை தலைப்பு வாரியாக மக்களுக்கு சமர்ப்பிக்க வில்லையே அது ஏன்?. ஹிஜ்ரி கமிட்டியினருக்கு 'அரபி தெரியவில்லை', 'அரபி தெரியவில்லை' என்று கூச்சலிடுகின்றனர். 'அரபி' என்றால் 'அரபு நாட்டைச் சார்ந்தவர்' என்று பொருள். அரபு நாட்டுக்காரரை எங்களுக்கு ஏன் தெரிய வேண்டும்? மார்க்கத்தைச் சொல்வதற்காக அரபிகளிடம் கூலி வாங்குபவர்கள் நாங்கள் இல்லையே!. அரபுக்கும், அரபிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் நம்மை நைய்யாண்டி செய்வது மிகப் பெரிய வேடிக்கையாக இல்லையா?

அடுத்ததாக 'ஸூமூலி ருஃயத்திஹி என்று துவங்கும் ஹதீஸிலுள்ள 'ஹி' என்ற சொல் 'அஹில்லாஹ்' என்ற (பிறைகள் அனைத்தையும் குறிக்கும்) பன்மைச் சொல் என்றும் எழுதியுள்ளனர், இவர்களுக்கு ஆண்பால் பெண்பால் என்ற வித்தியாசம் கூட தெரியவில்லை ' என்று வாதம் வைத்துள்ளதையும் பார்ப்போம். முதலில் 'ஸூமூலி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் ஹதீஸை இவர்கள் முழுமையாக படித்துவிட்டு பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டுகிறோம். அந்த ஹதீஸ் பின்வருமாறு

عبد الرزاق عن عبد العزيز بن أبي رواد عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه و سلم إن الله جعل الأهلة مواقيت للناس فصوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فعدوا له ثلاثين يوما . مصنف عبد الرزاق - (4 / 156) 7306 -)

''நிச்சயமாக அல்லாஹ் பிறை(யின் படித்தரங்)களை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான். எனவே அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பு வையுங்கள். அவற்றின் காட்சியை அடிப்படையாகக் கொண்டே நோன்பை நிறைவு செய்யுங்கள். எனவே அவை உங்கள் மீது மறைக்கப்படும்போது முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.'' அறிவித்தவர் இப்னு உமர் (ரழி). நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306)



தற்போது ' ஹி ' என்ற சொல் இடம் பெறும் நிலையில் பிறையின் படித்தரங்கள் என்று பன்மைப் பொருளை அது எவ்வாறு அது குறிக்கும், பன்மைப் பொருளைக்கு ' ஹா ' அல்லவா வரும் என்பதே அவர்களின் கேள்வி. ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடர் குறிப்பது என்ன என்பதை சற்று நிதானமாக அவர்கள் சிந்தித்திருந்தால் இந்த அளவிற்கு தடுமாற்றங்கள் அவர்களுக்கு வந்திருக்காது.



முதலில் இந்த ஹதீஸை ரிவாயத்து செய்தது யார்? ஸூமூலி ருஃயத்திஹி என்று சொன்னது யார்? ஹிஜ்ரி கமிட்டியினரா? இல்லையே!. நபி (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள் என்றால் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற இலக்கணப் பிழைகளோடு பேசுவார்களா? என்று இவர்கள் சிந்திக்க மறந்தது ஏன்?

தமிழ் மொழியில்கூட ஒருமை, பன்மை, உயர்தினை, அஃரினை, நேரடி பேச்சு, மறைமுகப் பேச்சு, உவமானம், உவமேயம், உவம உறுபு போன்ற தமிழ் இலக்கணங்களை இவர்கள் இன்னும் அறியாமல் இருப்பதை இவர்களின் மேடைப் பேச்சிலிருந்தே தெரிந்து நாம் கொள்ளலாம். இந்நிலையில் அரபு இலக்கணத்தைப் பற்றி இவர்கள் வாதிப்பது நகைப்புக்குரியதே. ஒருவேளை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களும் இலக்கண விஷயத்தில் இவர்களைப் போலத்தான் இருந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும். அப்படி அல்ல நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அதாவது மேற்கண்ட ஹதீஸில் 'பிறைகள்', அல்லது 'பிறையின் படித்தரங்கள்' என்று பொருள்படும் 'அஹில்லாஹ்' என்ற அரபுச் சொல் பெண்பால் ஆகும். மேலும் அது பன்மைச் சொல்லுமாகும். இருப்பினும் பிறையின் படித்தரங்கள் என்று அழைக்கப்படுகின்ற அஹில்லாஹ்வானது சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் ஸூமூலி ருஃயத்திஹி - ('ஹி') என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

'கமர்' என்று அரபுமொழியில் அழைக்கப்படும் அந்த சந்திரன், அரபு மொழி இலக்கியத்தின் படி ஆண்பால் ஆகும். மேலும் அது ஒருமையான சொல்லுமாகும். ஆண்பாலைக் குறிப்பதற்கு ' ஹி ' என்ற சொல்லும், பெண்பாலைக் குறிப்பதற்கு ' ஹா ' என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவது அரபு மொழி இலக்கணத்தின் ஆரம்ப அடிப்படை என்பதை அனைவரும் அறிவர். எனவேதான் நபி (ஸல்) அவர்கள், சந்திரன் (கமர்) என்ற ஒருமையான ஒரு கோளின் பல வடிவ நிலைகளின் காட்சிகளை கவனித்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். மேலும் அந்த வடிவநிலை மாதத்தின் இறுதிநாள் மறைக்கப்படுவதைப் பற்றியும் ரத்தினச் சுறுக்கமாக விளக்கியுள்ளார்கள். எனவே ஸூமூலி ருஃயத்திஹி என்ற சொற்றொடரில் இடம்பெறும் 'ஹி ' என்ற எழுத்து அதற்கு முன்னதாக இடம்பெறும் ''இன்னல்லாஹ ஜஅல்லல் அஹில்லத மவாகீத்து லின்னாஸ்..'' என்ற வாக்கியத்திலுள்ள 'அஹில்லாஹ்' என்பதைக் குறிக்கும் என்று ஹிஜ்ரி கமிட்டி சொன்னதுதான் சரியான என்பதை புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

இன்னும் நாம் முன்னர் குறிப்பிட்டுள்ள இப்னு ஹூசைமாவில் 1789-வது ஹதீஸாக இடம்பெறும் ''ஃபஇதாரய்துமூஹூ'' என்ற சொற்றொடரிலுள்ள 'ஹூ' என்ற ஓரெழுத்துச் சொல்லும் இதுபோன்றுதான் பொருள்படும். மேற்படி 'ஹி ' என்ற சொல் 'ஹிலால்' என்று ஒருமையைத்தான் குறிக்கும் என்றும் அதை புறக்கண்களால் பார்ப்பதற்குத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் நாக்கூசாமல் பேசியுள்ளார்கள். ஒரு வாதத்திற்காக 'ஹிலால்' என்றே வைத்துக் கொள்வோம். ஒருரேயொறு நாளில் தென்படும் சந்திரனின் படித்தரத்தையா இந்த 'ஹிலால்' என்ற சொல் குறிக்கிறது? ஹிலால் என்பது ஒரு சந்திர மாதத்தின் சுமார் 14 படித்தரங்கள் வரை குறிக்கும் என்பதை காமூஸுல் முஹீத், தாஜுல் உருஸ், லிஸானுல் அரப், ஸிஹ்ஹா ஃபில் லுஹா போன்ற அரபு இலக்கண, இலக்கிய அகராதிகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.

இதை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்வதற்கு மேற்படி அதே 'அஹில்லாஹ்' என்ற சொல் இடம்பெறும் குர்ஆன் வசனத்தை படியுங்கள்

يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ [البقرة : 189]

பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்குக் காலம் காட்டியாகவும், இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)

மேற்படி குர்ஆன் வசனத்தில் இடம்பெறும் 'ஹிய' என்ற சொல், பெண்பால் ஒருமைக்கும், பெண்பால் பன்மைக்கு பொருந்தும் பொதுவான ஒரு சொல்லாகும். சந்திரன் (கமர்) என்ற சொல் ஆண்பாலாகவும், ஒருமையாகவும் உள்ள நிலையில், அதிலிருந்து பிறந்த சந்திரனின் வடிவநிலைக்கு (அஹில்லாஹ்) பெண்பாலில் குறிப்பது சரியாகுமா? என்ற மேற்படி மௌலவிகள் இந்த குர்ஆன் ஆயத்திற்கும் கேள்வி கேட்கலாம். ''யஸ் அ லூனக அனில் அஹில்லாஹ் குல் ஹிய...'' என்று வரும் இந்த குர்ஆன் ஆயத்திற்கு விளக்கமாகத்தான் முஸன்னஃப் அப்துர்ரஸாக் கிரந்தத்தின் 7306-வது ஹதீஸ் உள்ளது. ஆக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கு அரபு மொழி இலக்கணம் தெரியவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும் (நவ்வூதுபில்லாஹ்) - அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கட்டும்.

அரபு மொழிப் புலமை இல்லாத தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களிடம் பேசும்போது, ஆடையிலும் பேச்சு வழக்கிலும் அரபு நாட்டவரைப் போல இவர்கள் காட்சியளிக்கின்றனர். மேற்படி மௌலவிமார்களே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற அரபுமொழிப் புலமையைக் காட்டிவிட்டால், பிறை விஷயத்தில் நீங்கள் விட்டு அடிக்கும் அனைத்தும் மார்க்கம் என்று ஆகிவிடாது. உங்கள் தற்பெருமை இறுதியில் அல்லாஹ்வுக்கு, தூதருக்கு எதிரான ஒரு நிலையை உங்களைக் கொண்டு சேர்க்கும். பொதுமக்களும் உங்கள் அரபு மொழி அகம்பாவத்தை அறிந்து அதை குப்பையில் வீசி எறிந்துவிட்டு குர்ஆன் சுன்னா வலியுறுத்தும் பிறை கணக்கீட்டு கொள்கைக்கு அணி திரள்வார்கள் என்பதை சொல்லி வைக்கிறோம்.

மக்களே! மேலும் அரபுப் புலமை தங்களுக்கே உள்ளதாக தம்பட்டம் அடிக்கும் மேற்படி மௌலவிகள் பிறைகள் பற்றி இதுவரை கூறியுள்ளது என்ன தெரியுமா?

• ஒரு மாதத்தின் 29-வது நாள் மேற்கு திசையில் நோக்கி மஃரிபு வேளையில் பிறை பார்க்க வேண்டும் என்கின்றனர்.

• பிறை மேக மூட்டத்தினால் மறைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டுதான் இஸ்லாமிய மாதங்கள் துவங்குவதுபோல பிரச்சாரம் செய்கின்றனர்.

• நாம் பார்ப்பது மூன்றாம் பிறைதான் ஆனால் அதுதான் முதல் பிறை என்று கூறுகின்றனர். • பிறந்த பிறையைப் பார்த்த தகவல் எவ்வளவு தூரத்திலிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வது போன்ற கற்பனை சட்டத்திலேயே காலம் கழித்து வருகின்றனர்.

• பிறை பார்த்தத் தகவல் எவ்வளவு தாமதமாக வந்தாலும் அந்த அடிப்படையில் செயல்படலாம் என்று இல்லாத வாகனக்கூட்ட அறிவிப்பை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

• பெருநாள் தினத்தை விட்டுவிட்டு அடுத்த நாளிலும் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

• எங்கு பிறை பார்த்தீர்களோ அங்கு போய் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் மீது இட்டுக்கட்டுகின்றனர்.

இவ்வாறு பிறைகள் விஷயத்தில் அரபுப் புலமை வாதம் பேசுவோரின் நிலை இந்த அளவிற்கு படுபாதாளத்தில் உள்ளது. இவற்றில் ஒவ்வொரு மௌலவிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதும் தெரிகிறது. ஆக மொத்தத்தில் நாம் அறிந்தவரை பிறைகள் பற்றிய உருப்படியான ஆய்வுகளை ஹிஜ்ரி கமிட்டியினரைத் தவிர வேறு எவரும் செய்ததாகத் தெரியவில்லை. இதுதான் உண்மையும் கூட.

ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் அரபு மொழிக்கு எதிரானவர்கள் அல்லர். அரபு மொழியை நன்றாகப் படித்தவர்களிலும் மார்க்கத்தை விளங்காதவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாத ஒன்றுமல்ல. அதுபோல அரபு மொழி தெரியாத முஸ்லிம்களில் சிறந்த சிந்தனையாளர்கள் கணிசமாக இருக்கின்றனர் என்பதையும் ஒப்புக் கொள்ளுங்கள் என்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள், மக்கத்து குறைஷி ஆலிம்களின் தலைமைப்பீடமாக இருந்த தாருந்நத்வா அறிஞர்களிடம் இஸ்லாம் என்னும் இறைச்செய்தியை எடுத்துரைத்தபோது அதன் ஆலிம்களாக வீற்றிருந்த அபூஜஹிலும், அவனுடைய கூட்டாளிகளும் நபி (ஸல்) அவர்களுக்கு சவால் விட்டு இதே அரபு மொழி இலக்கணப் பெருமையைத்தான் பேசினார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். உண்மையை மறைத்து பல பொய்களை இட்டுக்கட்டி சத்தியத்தை எதிர்த்ததால் அவர்கள் அனைவரும் அழிந்தொழிந்தனர் என்பது மறக்கவியலாத வரலாறு. மொழிவாதம் பேசும் இவர்களின் வாதத்திற்கு இதையே பதிலாக அளிக்கிறோம்.

விமர்சனம் 2: நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம்.

விளக்கம்:

உலக முஸ்லிம்கள் மூன்று வௌ;வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வௌ;வேறு நாட்களில் தனித் தனியாக பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கி குர்ஆன் சுன்னா ஒளியில் சரியான தினத்தில் நமது அமல்களை அமைத்துக் கொள்ள துல்லியமான சந்திர நாட்காட்டி மூலம் சரியானத் தீர்வைச் சொல்கிறோம். இதன் முக்கியத்துவத்தை விளங்காதவர்கள் எழுப்பும் கேள்வியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு வாரகாலம் மழை பெய்தது சம்பந்தமாக வரும் ஹதீஸை தவறாக இவர்கள் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட கேள்வியே இது. நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தொடர் மழை பொழிந்தபோது சூரியனை அந்த ஒருவார காலம் மேகம் மறைத்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழகை நேரத்தைக் 'கணக்கிட்டார்கள்' என்று அந்த ஹதீஸில் எங்கே வந்துள்ளது?.

ஒரு வாரம் மழை பெய்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை அறிவதற்கு செய்தவை என்ன என்பதை இவர்கள் சிந்திக்கக் கூடாதா?. சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து தானே நேரங்களை முடிவு செய்திருப்பார்கள்.

இவர்களின் வியாக்கியானத்தின் படி மழை பெய்துகொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும். அதாவது மழை பெய்து கொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் 'அவ்காத்துஸ்ஸலாத்' என்னும் தொழுகை நேரப் பட்டியலை பின்பற்ற வேண்டும். அப்படியானால் தொழுகை கால அட்டவணை என்று ஒரு நேரக் கணக்கை பள்ளிவாயில்களில் வருட முழுவதும் தொங்க விட்டு அதைப் பார்த்து பின்பற்றுவது ஏன்? இவர்களின் வாதத்திற்கு இவர்களே முரண்படுவதை மக்களே நீங்கள் தெளிவாகக் காணுங்கள்.

ஒரு வார காலம் மழை பெய்ததில் சூரியனை மேகம் மறைத்தது என்பது உண்மை. அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைத்தால் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தந்தது யார்? என்பதை அவர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும். மேகமூட்டத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் அந்த ஹதீஸில் இல்லையே!

அடுத்ததாக பிறை சம்பந்தமாக வரும் ரிவாயத்துகளில் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற சொற்களில் கும்ம என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்று அரபு மொழி அறிஞர்கள் என தங்களை கூறிக் கொள்பவர்கள் மொழி பெயர்க்கிறார்கள். இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். மேகமூட்டத்தைக் குறிக்கும் 'கமாம்' என்ற சொல்லோ, 'ஸஹாப்' என்ற சொல்லோ இல்லாத நிலையில், மேகமூட்டம் என்று எப்படி மொழி பெயர்த்தார்கள்?

ஒரு வாதத்திற்காக சர்வதேசப்பிறை நிலைபாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் தயாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது? ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா? - யாமறியோம். இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் இவர்கள் இயக்கத்தின் சார்பில் குத்துமதிப்பாக, தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா?

ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் அதுதான். இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குதிசையில் தெரியும் என்று மேற்படி அரபு மொழி பயின்ற அறிஞர்களுக்கு சொன்னது யார்? எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள்? என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துடைய அவ்வரபு மொழியறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.

இன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது? அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா? அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா? உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது? போன்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

நாங்கள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப் பார்ப்போம் என்று ஒரு பதிலை அவர்கள் சொல்லலாம். அப்படி சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போது என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்தச் சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும் என்பதையும் அறியத் தருகிறோம்.

விமர்சனம் 3: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும், பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும், மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது. இது தவிர்த்து நான்காவது நிலை என்று ஒன்றுமில்லை.

விளக்கம்:

மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தாம் மார்க்கம் என்பதற்கும், அவற்றைத் தவிர்த்து நான்காவது நிலைபாடு ஏதும் இல்லை என்பதற்கும் குர்ஆன் சுன்னாவிலிருந்து நேரடி ஆதாரங்களைத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். இன்றுவரை நமது கேள்வி கிணற்றில் போட்ட கல்லாகத்தான் கிடக்கிறது.

ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறந்த பிறையை மஃரிபில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் அமல் செய்ய வேண்டும் என்பது மார்க்கத்தின் பெயரால் மக்களிடையே போதிக்கப்பட்டுள்ள தவறான சிந்தனை என்பதை நாம் பலமுறை விளக்கி விட்டோம்.

ஒரு கிழமைக்கான தேதியை மாற்றும் சக்தியை அல்லாஹ் மேகமூட்டத்திற்கு வழங்கவில்லை. மேலும் 'ஃபஇன்கும்ம' என்ற அரபுப் பதத்திற்கு 'மேக மூட்டம்' என்றும் பொருளில்லை. இவற்றை திரும்பத் திரும்ப நாம் விளக்கியும் இவர்கள் அடம் பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்படியானால் மேகமூட்டம்தான் பிறையையும், மாதத்தையும் தீர்மானிக்கிறது என்றால் தமிழகப்பிறை, தேசியப்பிறை மற்றும் சர்வதேசப்பிறை என்ற பெயர்களில் அவரவர்கள் தங்களின் நிலைப்பாட்டை அடையாளப்படுத்தக் கூடாது. மாறாக 'மேகமூட்டப் பிறை' அல்லது 'மேகப்பிறை நிலைப்பாடு' என்றுதான் அவர்கள் கூறவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தைச் சரியாகத் துவங்குவதற்காக, ஷஃஅபானுடைய நாட்களை மனனமிடும் அளவிற்கு கவனிப்பார்கள் என்பது யாரும் மறுக்கவியலாத ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும் (அபூதாவூது 1993). ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை ஒரு வாரத்திற்கு முன்னரே நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் அறிந்து வைத்திருந்தனர் (பைஹகீ-8018, இப்னு குஜைமாஹ்-2024). இவ்வாறு துல்லியமாக மாதங்களைத் துவங்கி சரியான தினத்தில் மாதத்தை முடிக்கும் பழக்கத்தில் நபி (ஸல்) அவர்களும், அன்றைய ஸஹாபாக்களும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் தங்கள் நடைமுறைக்கு மாற்றமாக மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா? என்பதை சிந்தியுங்கள்.

'மேகமூட்டம் ஏற்பட்டால் அந்த மாதத்தில் ஒருநாளைக் கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ளுங்கள்' என்பதே நபி (ஸல்) அவர்களின் கட்டளை என்று இன்றைய மௌலவிகள் கூறித்திரிவது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொந்த நடைமுறைக்கு முரணாக கட்டளை இட்டார்கள் என்று அவர்கள்மீது அவதூறு சுமத்துவதாகும்.

மேற்கண்ட மூன்று நிலைபாடுகளைத் தவிர்த்து நான்காவது நிலைப்பாடு இல்லை என்றால், சவுதி தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து அவர்களின் பிறை அறிவிப்புக்காக காத்திருப்பது என்ன நிலைபாடு? நபி (ஸல்) அவர்கள் பிறைத் தகவலை சவுதி தொலைக்காட்சி மூலம் பெறுவதற்கு ஏதும் சிறப்பு அனுமதி அளித்துள்ளார்களா?

மேற்கண்ட மூன்று நிலைபாடுகள்தான் மார்க்கம் என்றால் அதை பிரச்சாரம் செய்யும் மேற்படி இயக்கத் தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கும், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளுக்கும் ரமழான் துவக்கம், முடிவு பற்றி கடிதம் எழுதுவதேன்? இது என்ன நிலைபாடு என்று விளக்குவார்களா?

இன்று உலகில் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு கிழமைக்கு மூன்று தேதிகளும், ஒரு தேதிக்கு மூன்று கிழமைகளும் ஏற்படுத்தப்பட்டு நாட்காட்டியின் அடிப்படையே தகர்க்கப்பட்டு விட்டது. இதனால் இஸ்லாமிய ஹிஜ்ரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட நாளை சுட்டிக்காட்டி மேற்படி நாளில் வருகை தாருங்கள் என்று யாரையும் அழைக்கக்கூட இயலாத துர்பாக்கிய நிலை உலக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாம் கேட்பது என்னவெனில் இத்தகைய அவல நிலையைப் போக்கிட முரண்பாடற்ற, துல்லியமான, குர்ஆன் சுன்னா அடிப்படையில் அமைந்த ஒரு இஸ்லாமிய சந்திர நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமான ஒன்றா இல்லையா?

அவ்வாறு துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசர அவசியம்தான் என்றால், மஃரிபு வேளையில் மறையும் பிறையை புறக்கண்களால் பார்த்து விட்டு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் பிறை நிலைபாடுகளை வைத்துக் கொண்டு அத்தகைய நாட்காட்டியை ஏற்படுத்திட இயலுமா?

துல்லியமான இஸ்லாமிய நாட்காட்டியை ஏற்படுத்துவது அவசியமில்லை என்று கருதினால், நாட்காட்டியையும், அதை கணக்கிடுவதையும் வலியுறுத்தும் 2:189, 10:5, 55:5, 17:12, 9:36,37, 36:39,40, 6:96 போன்ற பல இறை வசனங்கள் வலியுறுத்துவது என்ன? பதில் சொல்வார்களா? இஸ்லாம் பரிபூரண மார்க்கம் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அத்தகைய பரிபூரண மார்க்கத்தில் நாட்காட்டி என்பதும் உள்ளடங்கியதா இல்லையா? அல்லது நாட்காட்டியைப் பற்றிய இஸ்லாம் ஒன்றும் தெளிவுபடுத்திட வில்லை என்று கூற வருகிறார்களா?

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல்படி பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதையும், பிறைகளைத் துல்லியமாகக் கணக்கிட்டு இஸ்லாமிய நாட்காட்டியை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கிடவும் வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம். இதற்கு குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நேரடி ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துப் பிரச்சாரம் செய்கிறோம். அவற்றை மறுத்து வாதங்களை வைக்க முடியாதவர்கள் 'மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றது' என்கின்றனர். இன்னும் 'மேகமூட்டம் மறைத்தால் அந்த மாதத்தில் ஒரு நாளைக்கூட்டி முப்பதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறித்திரிவது பிறை விஷயத்தில் அவர்களின் நிலைபாடுகள் தோல்வியைத் தழுவியதைத் தெளிவாக பறை சாற்றுகின்றன.

விமர்சனம் 4 : அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல் என்ற ஒரு வினை இருந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்றே பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட வினைச் சொல் இருந்தால்தான் ஆய்வு செய்தல் என்று பொருள்படும். ஸூமுலிருஃயத்திஹி என்பதில் பிறையைப் பார்த்தல் ஒரேயொரு வினைச் சொல்தான் உள்ளது.

விளக்கம்:

ஒரேயொரு வினைச் சொல் இருந்தால் கண்ணால் காண்பது என்றுதான் அர்த்தம் என்ற மேற்படி இலக்கண விதி எந்த இலக்கணப் புத்தகத்தில் உள்ளது? இந்த இலக்கணத்தைச் சொல்லித் தந்தது யார்? குர்ஆனும், தங்களது மனோ இச்சைக்கு முரண்படாத ஸஹீஹான நபி மொழியுமே மார்க்கம் என்று கூறும் சிலர்தான் மேற்படி வாதத்திற்கு சொந்தக்காரர்கள் ஆவர்.



மேற்படி கருத்து 'லிஸானுல் அரப்' என்ற அரபு அகராதி நூலில் இடம் பெற்றிருப்பதாக ஒரு எண்ணையும் குறிப்பிட்டு 'ஹிஜ்ரி கமிட்டியினருக்கு மரணஅடி' என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர். அந்த அவதூறு புத்தகத்தில் இடம்பெற்ற அபத்தக் கருத்துக்களுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் சார்பில் 'மரணஅடி யாருக்கு?' என்ற தலைப்பில் வீடியோ பதிவுகளாக வரிக்கு வரி பதில் அளிக்கப்பட்டுள்ளது. 'சொந்தக் காசில் சூனியம் வைத்து விட்டார்கள்' என்ற உவமையைப் போல மேற்படி இயக்கத்தினர் தங்களுக்குத் தாங்களே மரணஅடி வாங்கியதை மக்களும் அறிந்து கொண்டார்கள்.

அல்குர்ஆனில் 105:1 மற்றும் 89:6 சூராக்களில் இடம்பெரும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' - 'ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. இதில் இடம்பெரும் யானைப்படையையும், ஆதுக் கூட்டத்தையும் மஃப்வூல் என்று எப்படி புரிந்து கொண்டார்கள்? பெயர்ச் சொல்லுக்கும், செயல்பாட்டு வினைக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அதுபோல அல்குர்ஆனின் வசனம் (37:102) கூறுவது போல 'ஃபன்ளுர் மாதா தரா'- உன் கருத்து என்ன? என்பதில் எத்தனை மஃப்வூல் வருகிறது? அந்த ஆயத்தில் 'இன்னீ அராஃபில் மனாமி' – நான் கனவில் கண்டேன் என்ற வார்த்தை வந்துள்ளதால் அந்த 'அரா' என்ற சொல்லுக்கு ஒரு மஃப்வூல் வந்துள்ளது என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் அதற்கு அடுத்து இடம் பெரும் 'ஃபன்ளுர் மாதா தரா' என்ற அல்குர்ஆன் வாக்கியத்தில் இடம்பெரும் 'தரா' என்ற சொல்லுக்கு புறக்கண்களால் பார்த்தல் என்று பொருள் கொள்ளலாமா?

அல்குர்ஆனின் (3:13) வசனத்தில் 'புறக்கண்ணால் பார்த்தல்' என்பதற்கு வல்ல அல்லாஹ் 'ரஃயல்அய்ன்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறான். 'ரஃயல்அய்ன்' என்ற இச்சொல் பிறை சம்பந்தமாக வரும் எந்த ரிவாயத்திலும் இடம் பெறவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

மாற்றுக் கருத்துடையோரின் வாதப்படி 'அல்ஃபீல்' அத்தியாத்தின் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற வசனங்களில் 'யானைக் கூட்டம்' என்ற 'ஒரு பெயர்ச்சொல்'லும், 'அல்லாஹ் என்ன செய்தான்?' என்பதில் 'செய்தான்' என்ற 'ஒரு வினையும்'தானே உள்ளது. அந்த வசனத்தில் இவர்கள் கூறியுள்ளபடி ஒரேயொரு வினைச் சொல்தானே வந்துள்ளது. ஒரேயொரு 'மஃப்வூல்' மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்பதே இவர்களின் வாதம். இவர்கள் இயற்றியுள்ள இப்புதிய அரபு இலக்கண விதிப்படி பார்த்தால், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே அப்ரஹாவின் யானைப்படை அழிக்கப்பட்ட அச்சம்பவத்தை நபி (ஸல்)அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்ற பொருள் அல்லவா வருகிறது.

இன்னும் இறைவன் ஆது கூட்டத்தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6) என்பதிலும் 'அலம்தர கைஃப ஃபஅழ ரப்புக' என்ற சொற்றொடரே வந்துள்ளன. இங்கும் ரப்பாகிய அல்லாஹ் என்ன செய்தான்? என்பதில் 'செய்தான்' என்ற ஒருரேயொரு வினைச்சொல் மட்டுமே வந்துள்ளது. ஒரேயொரு செயல்பாட்டு வினை மட்டும் இருந்தால், புறக்கண்களால் பார்த்தல் என்றுதான் பொருள் என்று கூறும் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு பலநூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆது கூட்டத்தார் அழிந்ததையும், நபி (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்களால் பார்த்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா? சொன்னாலும் சொல்வார்கள்.

இன்னும் 'ஸூமூ லி ருஃயத்திஹி' என்ற சொற்றொடர் இடம்பெறும் முஸன்னஃப் அப்துர்ரஸாக் (7306) ஹதீஸில் எத்தனை மஃப்வூல்கள் இடம்பெற்றுள்ளன? மேற்படி ஹதீஸில் எதுவெல்லாம் மஃப்வூல்? நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டளையா? அல்லது பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பது கட்டளையா? அதுபோல முஸ்லிம் (2551 மற்றும் 2567), புஹாரி (1823), அஹ்மது (9641) போன்ற ஹதீஸ்களில் 'ரஆ' மற்றும் அதுபோன்ற சொற்கள் வினையாகத்தான் வருகிறதா? மாற்றுக்கருத்தினர் பதில் தரட்டும்.

முதலில் 'லிஸானுல் அரப்' என்பது அரபு இலக்கணப் புத்தகமா? அப்படியே 'லிஸானுல் அரப்' அரபு இலக்கணப் புத்தகமாகவே இருந்துவிட்டு போகட்டும். மார்க்க விஷயத்தை புரிந்து கொள்வதற்கும், குர்ஆன் சுன்னாவிலிருந்து சட்டம் வகுப்பதற்கு 'லிஸானுல் அரப்' போன்ற புத்தகங்கள்தான் அடிப்படை ஆதாரமாகுமா? இதை விளக்கிவிட்டு மேற்சொன்ன வாதங்களை மாற்றுக்கருத்தினர் வைக்கட்டும்.

விமர்சனம் 5:

உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டிகள் பல உள்ளன. அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையை பின்பற்றினாலும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது விருப்பத்திற்கு ஏற்றாற்போல கணக்கு முறைகளைக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஹிஜ்ரி கமிட்டியினராகிய நீங்கள் வெளியிடும் நாட்காட்டியை மட்டும் எந்த அடிப்படையில் துல்லியமான கணக்கு என்று பின்பற்றச் சொல்கிறீர்கள்? கணக்கீட்டாளர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இல்லையா?

விளக்கம்:

மேற்படி குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகள் சந்திரக் கணக்கீட்டு முறையைப் பின்பற்றி ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளனர் என்ற கூற்று வடிகட்டிய பொய்யாகும். குர்ஆன் சுன்னா ஒளியில் மேற்படி நாடுகள் துல்லியமான ஹிஜ்ரி நாட்காட்டியை வெளியிட்டுள்ளதாக பிரச்சாரம் செய்வோர் அந்நாட்காட்டிகளை முதலில் நமக்கு அனுப்பித் தரட்டும்.

சந்திர மாதத்தின் முதல்நாளில், சூரியன் மறைந்த பிறகு பிறையை பார்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் பிறைக்கும் சூரியனுக்கும் உள்ள கோணதூரம் ((Angular Distance)அல்லது நீட்சி (Elongation) அல்லது பிறையின் ஒளிர்வு (illuminations) போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் மாதங்களை ஆரம்பிக்கின்றனர். அதற்காக அவர்கள் நமதூர் குத்துமதிப்பு காலண்டர்களைப் போல காலண்டர் ஒன்றை தயாரித்துள்ளனர் என்பதே உண்மை.

மேற்படி குத்துமதிப்பு காலண்டர்கள் குர்ஆன் சுன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்பதை நம்பி தயாரிக்கப் பட்டவையாகும். எனவேதான் அவை ஒன்றோடொன்று முரண்படுகிறது. மேற்படி காலண்டர்களை ஹிஜ்ரி காலண்டரோடு ஒப்பிட்டுக் கூறுவதை அறியாமையின் உச்சகட்;டம் என்றே கூறவேண்டும்.

அல்ஜீரியா, துனிசியா மற்றும் லிபியா போன்ற நாடுகளின் காலண்டர்கள் முரண்பட்டு உள்ளன என்று வாதம் வைக்கின்றனர். புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்ட குத்துமதிப்பு காலண்டர்கள் முரண்படுவதில் என்ன ஆச்சரியம் உள்ளது? இவர்கள் ஏன் அல்ஜீரியாவுக்கும், துனிசியாவுக்கும், லிபியாவுக்கும் செல்ல வேண்டும்? நமதூர் சர்வதேசப்பிறை இயக்கத்தின் காலண்டரும், தமிழகப்பிறையை சரிகாணும் இயக்கத்தவரின் காலண்டரும் முரண்பட்டு இல்லையா?.

நமதூர் தத்தமது பகுதி பிறையினர், தமிழகப் பிறையினர், ஒரு நாடு அளவுக்குள்ள எல்கையை ஒப்புக் கொண்ட தேசியப் பிறையினர் மற்றும் சர்வதேசப் பிறையினர் என்று பிறையை புறக்கண்களால் பார்க்கும் நிலைபாடுகளைக் கொண்டுள்ளவர்கள், ரமழான் துவக்கத்தில் முரண்படுகிறார்கள். அவ்வாறே மேற்படி காலண்டர்களும் முரண்படுகின்றன. எனவே மேற்படி காலண்டர்கள் பிறந்த பிறையை புறக்கண்ணால் பார்த்த பிறகுதான் அமல் செய்வோம் என்ற அணியைச் சார்ந்தவைகளே. அவை ஹிஜ்ரி காலண்டரைச் சார்ந்தவை அல்ல என்பதை முதலாவதாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் சந்திரனைக் கணக்கிடுவதில் முரண்பாடு உள்ளது. எனவே கணக்கீட்டு முறையை பின்பற்றக் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இப்படி வாதிப்பதே சிறுபிள்ளைத்தனமான வாதமாகத் தெரியவில்லையா? அவர்களைப் பார்த்து நாம் கேட்பது இதுதான். ஒருவர் ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பத்துவரும் என்கிறார் (5105=10). மற்றொருவரோ ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் பதினொன்று என்று சொல்கிறார் (5105=11) என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இருவரும் முரண்பட்டு சொல்வதினால் நான் கணக்குப் பாடமே படிக்க மாட்டேன்! எங்கள் குழந்தைகள் கணிதப் பாடத்தை படிக்க அனுமதிக்க மாட்டேன்! என்று யாராவது கூறுவார்களா? ஐந்தையும் ஐந்தையும் கூட்டினால் என்ன வரும்? என்பதை ஆய்வு செய்வதுதானே நமது கடமை. மாறாக கணக்கே ஹராம் என்று ஃபத்வா கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ன அறியாமை இது? சிந்தியுங்கள் மக்களே!.

குர்ஆன் சுன்னா ஒளியில் துல்லியமான விஞ்ஞான கணக்கீட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே நமது ஹிஜ்ரி காலண்டர். பல ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வரும் ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறைகளே சாட்சியாகும். ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கமதினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர்.M மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால் பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் பிறையின் வடிவங்களும் அதன் கோணவிகிதமும் சரியானதாக உள்ளனவா என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறோம்.

சரி, ஒரு வாதத்திற்காக பல ஹிஜ்ரி காலண்டர்கள் உள்ளன என்றே வைத்துக் கொள்வோம். பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்று கூறும் அனைவரும் ஒற்றுமையாக, முரண்படாமல், ஓர் அணியில்தான் இருக்கிறார்களா? இல்லையே. எத்தனை கருத்துள்ளவர்களாக அவர்கள் பிரிந்துள்ளனர் என்பதை கீழே பட்டியலிடுகிறோம்.

1- சர்வதேசப்பிறை நிலைபாடு (Internatioanl Sighting).
2- தத்தமதுபகுதி பிறை நிலைபாடு (Local Sighting).
3- மாநில அளவு பிறை நிலைபாடு (State Level Boundary)
4- பிறை பார்க்கப்படும் எல்கை ஒரு நாடு என்ற அளவில் இருக்கலாம் என்ற தேசியப் பிறை நிலைபாடு (National Boundary)
5- சவூதி அரேபியாவின் பிறைத் தகவலை (Following Saudi Arabia)ஏற்று பின்பற்றி வருபவர்கள்.
6- 'இம்கானே ருஃயத்' என்ற பிறை நிலைபாடு.
7- மாதங்களை ஆரம்பிக்க மக்கா தேதிக்கோடு (Makkah Date Line) என்ற பிறை நிலைபாடு.
8- ரமழானுக்கும், ஷவ்வாலுக்கும் சர்வதேசப் பிறை, ஹஜ் மாதத்தை துவங்குவதற்கு சவூதி அரசாங்க முடிவு என்ற பிறை நிலைபாடு.
மக்களே இவர்களின் வாதத்தின்படி உலகில் காலண்டர்கள் பல உள்ளன. எனவே ஹிஜ்ரி காலண்டரை பின்பற்றக் கூடாது என்று வாதம் வைத்தவர்கள், பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டும் என்ற கருத்தில் இந்த அளவுக்கு முரண்பாடுகள் உள்ளன என்பதை சிந்திக்கத் தவறியது ஏன்?.

கணக்கீடு முறையில் பல காலண்டர்கள் உள்ளது அதனால் ஹிஜ்ரி காலண்டரைப் பின்பற்றக் கூடாது என்றால் புறக்கண் பார்வை என்ற நிலைப்பாட்டில் அதிக முரண்பாடுகள் உள்ளதால் பிறையைப் புறக்கண்களால் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் இனி பிரச்சாரம் செய்யத் தயாரா? என்று கேட்கிறோம்.

விமர்சனம் 6: ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள், பவுர்ணமி தினம், வளர்பிறை மற்றும் தேய் பிறைகளின் கணக்கீட்டை அமெரிக்காவின் நாஸா நிறுவனம்தானே வெளியிட்டுள்ளது. நீங்கள் நாஸாவின் கணக்கீட்டை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறீர்கள்?

விளக்கம்:

ரமழான் நோன்பு ஆரம்பம், இரு பெருநாட்கள் போன்ற மார்க்கத்தின் இபாதத்துகளை நிர்ணயம் செய்வதற்கு பிறந்த முதல்நாளின் பிறையை அது மறையும் மஃரிபு வேளையில் புறக்கண்களால் பார்த்த பிறகுதான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற தீவிர நம்பிக்கையின் வெளிப்பாடுதான் மேற்படி கேள்வியாகும். பிறை பார்க்கப்படுவதாக சொல்லப்படுபவற்றை பற்றி நாம் கேள்வி கேட்டால், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கணக்கீட்டை எதிர்மறையாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாஸாவின் கணக்கை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

பிற மதத்தவர்களின் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அறிய கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்ப சாதனங்களை தங்கள் வசதிக்காகப் பயன்படுத்திடும் இவர்கள் இப்படியொரு கேள்வியைக் கேட்கலாமா? ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாகவும், உளத்தூய்மையோடும், நல்லெண்ணத்துடனும் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கேள்விகளும், கருத்துகளும் பிறக்கும்.

நாஸா வெளியிட்டுள்ள கணக்கீடுகள் சரியானதுதானா? என்று நாம் பரிசோதித்து அறிந்து சரிபார்க்க முடிந்த காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் இப்படியொரு கேள்வியை நம்மை நோக்கி இவர்கள் எழுப்பியுள்ளது இவர்களின் முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது. அடிப்படையற்ற கேள்வியை கேட்டுவிட்டு அறிவார்ந்த கேள்வியை எழுப்பியதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும்.

முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காகவா நாஸா நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது? அல்லது நாஸா விஞ்ஞானிகள் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சொந்தக்காரர்களா? முஸ்லிம்கள் சந்திரனின் படித்தரங்களால் அமைந்த ஹஜ்ரிகாலண்டரை வெளியிட வேண்டும் என்பதற்காகவா அவர்கள் சந்திரனின் படித்தரங்களை கணக்கிட்டுள்ளார்கள் - இல்லையே!. அவர்களின் சுய ஆராய்ச்சிக்காகவும், அவர்களின் செயற்கைக் கோள்கள் உட்பட விஞ்ஞான ஆய்வு சாதனங்கள் துல்லியமாக இயங்கவுமே சூரியன், சந்திரன் மற்றும் பிற கோள்களின் சூழற்சிகளை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அவர்களின் சுயநலத்திற்காகத்தான் இவ்வளவு ஆய்வுகளையும் செய்து வைத்துள்ளார்களே தவிர முஸ்லிம்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. இவையே உண்மையாகும்.

இதுவல்லாமல் ஹிஜ்ரி காலண்டரை எங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று இதே நாஸாவினர் ஒரு கணக்கீட்டை உலகிற்குத் தந்தால் அதில் முதலில் சந்தேகம் கொள்பவர்களாக நாங்களாகத்தான் இருப்போம்.

இவர்கள் அமாவாசை நாளில்கூட சவுதியில் பிறை புறக்கண்களால் பார்க்கப்பட்டது என்று வெளியிடப்படும் தகவல்களை உண்மை என தக்லீது செய்வதைப்போல நாம் நாஸாவை தக்லீது செய்யச் சொல்லவில்லை. நாஸா வெளியிடும் அந்தத் துல்லியமான சந்திர சுழற்சியின் கணக்கீடுகளை சரி பார்க்காமலும், உறுதி செய்யாமலும் ஹிஜ்ரி காலண்டரின் கணக்கை நாம் வெளியிடவில்லை. மேலும் நாஸாவின் சந்திரக் கணக்கீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நாம் காலண்டர் வெளியிடவில்லை. அப்படி நாம் தயாரிப்பதாகத் தவறான ஒரு யூகத்தை இவர்களுக்குச் சொன்னது யார்? இதையாவது தெளிவு படுத்தட்டும்.

நாஸா வெளியிட்டுள்ள சந்திர, சூரியக் கணக்கீடுகள் சரியானதுதானா? என்பதை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வாளர்களை ஹிஜ்ரி கமிட்டிக்கு அல்லாஹ் வழங்கி தனது நாட்காட்டியை தவறுகளிலிருந்து தூய்மையாக்கி வைத்துள்ளான் - அல்ஹம்துலில்லாஹ். பிறை விஷயத்தில் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சியை, அல்லது இவர்கள் இயக்கத் தலைமைகளின் அறிவிப்புகளை இவர்கள் கண்மூடி பின்பற்றுவதைப் போல, ஹிஜ்ரி காலண்டரை நாம் கண்மூடி பின்பற்றச் சொல்லவில்லை.

இன்னும் நாம் வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகளுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பிறையின் படித்தரங்களே சாட்சி பகர்கின்றன. ஹிஜ்ரி நாட்காட்டி பௌர்ணமி என்று தெரிவித்துள்ள அந்தக் கிழமை பௌர்ணமி தினமாக உள்ளதா? இல்லையா என்பதை மக்களே உறுதிபடுத்திக் கொள்ளலாம். நாம் அமாவாசை எனும் புவிமைய சங்கம தினம் என்று குறிப்பிட்டுள்ள அந்த நாள் அமாவாசை தினமாக உள்ளதா இல்லையா? என்பதையும் மக்களே உறுதிபட அறிந்து வருகின்றனர்.

மேலும் சந்திரனின் முதல் கால்பகுதி நாள், இறுதிகால்பகுதி நாள் என்று நாம் காலண்டரில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அந்தந்த மன்ஜிலில் பிறையின் வடிவங்களும், அதன் கோண விகிதமும் சரியானதாக உள்ளனவா? என்பதையும் நீங்களே பார்த்து ஆய்வு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று மீண்டும் பதிவு செய்கிறோம்.

அல்லாஹ்வின் உதவியால் ஹிஜ்ரி நாட்காட்டியை பல வருடங்களாக வெளியிட்டு இதை ஒரு சவாலாகவே வைத்து வருகிறோம். அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை, அவனது நாட்காட்டியை இதுவரை யாராலும் பொய்யாக்கிட இயலவில்லை – அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் நாட்காட்டிக்கு எதிரான மாநிலப் பிறை, தேசியப் பிறை மற்றும் சர்வதேசப் பிறை போன்று எந்தப் பிறை போர்வைகளில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள் என்னதான் முயற்சித்தாலும், கியாமநாள் வரை சூழ்ச்சிகள் செய்தாலும், சத்தியத்தை தங்கள் வாய்களால் ஊதி அணைத்திட முயன்றாலும் அவர்களால் வெற்றிபெற இயலாது என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மக்களே நமது ஹிஜ்ரி காலண்டரின் துல்லியமான பிறைக் கணக்கீட்டை பொய்யாக்க நினைத்தவர்களின் சூழ்ச்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளதுதான் வரலாறு. அல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளுக்கு முன் தோற்றுப்போனவர்கள் நமது எஜமானனான அல்லாஹ்விடம் மண்டியிடாமல் அடம் பிடிக்கின்றனர். ஹிஜ்ரி நாட்காட்டிக்கு எதிராக பொய்ச் செய்திகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிராகப் போர்ப்பிரகடனம் செய்யத் துணிந்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு யார் நேர்வழி காட்டிட முடியும்? இதுபோன்ற ஜாஹிலியாவிலிருந்து நம்மை வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக.

மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலை நாட்டவே நாடுகிறான். (அல்-குர்ஆன் 8:8)

விமர்சனம் 7: நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர்.

விளக்கம்:

சர்வதேச (சவுதிதேசப்) பிறை இயக்கத்தின் 'அமீர்' அவர்களும் அவரது சகாக்களும்தான் மேற்படி தவறான குற்றச்சாட்டை சிறிதேனும் இறையச்சமின்றி மேடைகளில் முழங்கினர். அவர்கள் இயக்கத்தின் பிறை நிலைப்பாட்டிற்கு ஆதாரம் இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும் சவுதி (பிறை) இயக்கமும் அவர்களது பிறை நிலைப்பாடும் புதைக்கப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இவற்றை உணர்ந்து விட்டதால் மக்களை திசை திருப்புவதற்காக மேற்படி தவறான குற்றச்சாட்டை ஹிஜ்ரி கமிட்டி மீது அவர்கள் அள்ளி வீசுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளைச் செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டி ஒருபோதும் சொல்ல வில்லை. நாம் அவ்வாறு சொல்லியதாக அவர்கள் கூறும் அபாண்ட குற்றச்சாட்டுகளுக்கு அவர்களின் ஆதாரம் இருந்தால் மக்கள் மத்தியில் தெரிவிக்கட்டும். இந்நிலையில் மேற்படி சவுதி (பிறை) இயக்கத்தின் கூட்டாளிகளான போலி ஸலஃபு வகையறாக்கள்தாம் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது வெள்ளிக் கிழமை அரஃபாவில் நின்றதாகக் கூறியுள்ளனர். அதற்கும் ஆதாரத்தை சமர்ப்பிக்காமல் ஒரு யூதன் ஒருவன் கலீஃபா உமர் (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் உமர் (ரழி) அவர்களோடு உரையாடியதாகக் கூறப்படும் அடிப்படையற்ற சம்பவத்தை ஆதாரமாகக் காண்பிக்கின்றனர். அதன் அபத்தங்களை நபி (ஸல்) அவர்களின் அரஃபா நாள் எப்போது? என்ற தலைப்பில் அமைந்த ஹிஜ்ரி கமிட்டியின் வெளியீடுகளில் காணலாம்.

துல்லியமான விஞ்ஞான சந்திரக் கணக்கீட்டின் படி ஹிஜ்ரி 09-12-10 அன்று வியாழக் கிழமையாகத்தான் இருந்துள்ளது. அதாவது ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா 9-வது நாள் வியாழக்கிழமை ஆகும். பிறைகளைக் கணக்கிடுவது தவறு என்ற புதிய நிலைப்பாட்டை ஏற்றுள்ள மேற்படி சவுதி (பிறை) இயக்க அமீர் துல்லியமான விஞ்ஞானக் கணக்கீட்டை தவறு என்று விமர்சிப்பது ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

பிறைகளைக் கணக்கீடு செய்வது மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி ஹராம் ஆகும். அவ்வாறு ஹராம் என்றால் கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவது ஏன்?

சர்வதேச (சவுதிதேசப்) பிறையினரைப் போலவே தமிழக அளவு பிறை நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் பிறையை புறக்கண்களால் பார்த்துவிட்டு அடுத்தநாள் மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்கின்றனர். சவுதிதேசப் பிறை நிலைப்பாட்டிலிருந்து, 'தமிழக அளவு' என்ற எல்கை அளவில் மட்டும்தாம் அவர்கள் வேறுபட்டுள்ளனர்.

மேற்படி தமிழகப் பிறை நிலைப்பாட்டை பின்பற்றுபவர்களுக்கு கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாதம் அவர்கள் மாதத்தைத் துவங்கியதுபடி அவர்களின் பிறை 12-இல் பவுர்ணமி வந்து அன்று சந்திரக் கிரகணமும் ஏற்பட்டது. எங்காவது? என்றாவது? பிறை 12-இல் சந்திரக் கிரகணம் ஏற்படுமா? இதுபற்றி கணம் 'அமீர்' அவர்களோ, அவரது சகாக்களோ, மற்றும் அவரது கூட்டாளிகளோ கவலைப் படாதது ஏன்?.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரன் மறைக்கப்படுவதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும். சந்திர மாதத்தின் பிறை 12-இல் நிச்சயமாக பவுர்ணமி ஏற்படாது. கடந்த 1426 ஆண்டுகளுக்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்தில் நின்ற தினத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், தங்களது முன்னாள் சகாக்களான இன்றைய தமிழகப் பிறை இயக்கத்தின் பிறை நிலைப்பாடு தவறானதாகி விட்டது, தமிழகப்பிறை மண்ணைக் கவ்வி விட்டது என்று போர்க்குரல் எழுப்பாதது ஏன்? மேற்படி அமீர், அவரது சகாக்கள் மற்றும் அவரது கூட்டாளிகளின் நிலைப்பாட்டின் படி பிறை 12-இல் பவுர்ணமி ஏற்பட்டது சரியா? தவறா? - பதில் சொல்லட்டும்.

மேலும் சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.

கடந்த 1435-ஆம் ஆண்டின் துல்ஹிஜ்ஜா மாத இறுதியில் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்தது. சந்திர மாதத்தின் 27-வது நாளன்று, அதாவது பிறை 27-இல் எங்காவது சூரியக் கிரகணம் ஏற்படுமா? - ஏற்படாது. ஆனால் தமிழகப்பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு அவர்களது பிறை 27-இல் அமாவாசை ஏற்பட்டு சூரியக் கிரகணமும் வந்ததை வைத்து அவர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்தை துவங்கியதும், அரஃபா நோன்பை நோற்றதும், ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடியதும் தவறு என்று பிரச்சாரம் செய்யவில்லையே ஏன்? இவை மட்டும் மேற்படி அமீருக்கும், அவரது சகாக்களுக்கும் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கும் தவறாகத் தெரியவில்லையா? அல்லது ஹிஜ்ரி கமிட்டியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக மேற்படி தமிழகப் பிறை இயக்கத்துடன் இவர்கள் மறைமுக ஒப்பந்தத்தில் உள்ளனரா? - யாமறியோம்.

எனவே நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை செய்தார்கள் என்று ஹிஜ்ரி கமிட்டியினர் கூறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வடிகட்டிய பொய்யாகும், மாபெரும் அவதூறாகும். இவ்வாறன பொய்க் குற்றச் சாட்டுகளை எழுப்பி ஆதாயம் தேட நினைப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

மேற்படி நபர்கள் ஹிஜ்ரி கமிட்டி மீது சுமத்தியுள்ள அவதூறுகளுக்கும், தார்ப்பாயில் வடிகட்டிய பொய்களுக்கும் பிரதிபலனாக நியாயத் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்வின் முன்னிலையில் அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். உண்மையிலேயே இவர்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால், மறுமையின் மோசமான சூழ்நிலைக்கும் அஞ்சி மேற்படி அவதூறான குற்றச்சாட்டு உட்பட ஹஜ்ரி கமிட்டி மீது அவர்கள் கூறி வரும் அனைத்து குற்றச் சாட்டுகளையும் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுகிறோம். இல்லையேல் நாளை மறுமையில் அவர்கள் செய்திருக்கும் நல்ல அமல்கள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அவை எங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

விமர்சனம் 8: ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை வணங்குவோர்) கணக்கீட்டு முறையையும் பின்பற்றுகின்றனர். அந்த யூதர்களை பின்பற்றிய ஷியாக்கள், ராபிளாக்களின் வழிமுறையைத்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் பின்பற்றுகின்றனர். மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' - ரஸூலுக்கு மாறு செய்பவர்கள் என்றும் விமர்சிக்கப்படுவது பற்றி உங்கள் கருத்தென்ன?

விளக்கம்:

மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலர் நம்மை நோக்கி, மேற்கண்ட வசை மொழிகளை வரம்பை மீறி அள்ளி வீசுகின்றனர். அவர்கள் பிறைகள் குறித்து ஆதாரமில்லாதவற்றை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து தற்போது மாட்டிக் கொண்டதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடுதான் மேற்கண்ட வசை மொழிகள். முஸ்லிம்கள் ரமழான் மாதத்தில் ஒரு நோன்பை நோற்காமல் விட்டுவிட்டால் அது உம்மத்திற்கு ஈடு இணையற்ற பேரிழப்பு என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதால் இவை போன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பொருமையுடன் பதில் அளிக்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ்.

இறைவேத வரிகளையும், இறைத்தூதர் மொழிகளையும் ஆதாரமாக சமர்பித்து, இம்மார்க்கப் பணிக்கு யாரிடமும் எந்தவித கூலியையும் வாங்கிடாமல், மக்களிடம் 'ஹிஜ்ரி நாட்காட்டி' குறித்த சத்தியத்தை எடுத்துச் சொல்கிறோம் - அல்ஹம்துலில்லாஹ். அத்தகைய நம்மைப் பார்த்து 'மஆஸியத்துர் ரஸூல்' – 'ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்பவர்கள்' என்று துணிந்து விமர்சிக்கின்றனர். ஆடையிலும் வெளித்தோற்றத்திலும் அரபு நாட்டவரைப் போல காட்டிக் கொள்ளும் இம்முல்லாக்களுக்கு இறையச்சம் சிறிதேனும் இருந்தால் எம்மை வரம்பு மீறி விமர்ச்சித்ததற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை கோரட்டும். அல்லாஹ்வின் கோரப்பிடிக்கும், தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ளட்டும்.

இன்னும் யூதர்கள் என்றும், 'மஜூஸிகள்' - நெருப்பை வணங்குவோர் என்றும் நம்மை இவர்கள் விமர்சித்து விட்டதால் பதிலுக்கு நாமும் இவர்களை இதுபோன்று தரம் தாழ்ந்து விமர்சிக்க மாட்டோம். காரணம் சக முஸ்லிம்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். மார்க்கப் பணி செய்கிறேன் பேரிவழி என்று கூலிக்கு மாறடிக்கும் மேப்படியார்களுக்கு, இவ்வுயர்ந்த உணர்வுகள் இல்லாமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சூரியன் எப்போது உதயமாகிறது? எப்போது மறைகிறது? போன்ற நேரக் கணக்குகள் இஸ்லாமிய கடமையான தொழுகைக்கும், நோன்புக்கும் இன்றியமையாதவை. மேற்படி சூரியன் உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களைக் கணக்கிட்டவர்கள் யார்? இவர்களின் இயக்கத்தில் ஏதும் விஞ்ஞானிகள் இருந்து அவர்கள் கணக்கிட்டுச் சொன்னார்களா? ஹிஜ்ரி நாட்காட்டியின் கணக்கு யூதர்களின் கணக்கு என்றால், பள்ளிவாயில்கள் தோறும் பின்பற்றப்படும் தொழுகை நேர அட்டவணை யாருடைய கணக்கு? என்பதை இவர்கள் மக்களுக்கு விளக்கிட தயாரா? மேலும் இவர்களின் இயக்கங்களின் பெயரால் அச்சிடப்படும் கிரிகோரியன் நாட்காட்டியின் தேதிகளும், அதன் கணக்கு முறையும் முஸ்லிம்களின் கணக்குதானா? இவற்றை நமக்கு விளக்கிவிட்டு பின்னர் ஹிஜ்ரி கமிட்டியினரைப் பற்றி இவர்கள் கவலை கொள்ளட்டும்.

பிறைகள் விஷயத்தில் மக்கள் விழித்துக் கொண்டு ஹிஜ்ரி கமிட்டி வெளியிட்டு வரும் பிறைகள் குறித்த சிற்றேடுகளை கையில் ஏந்தி, அதிலிருந்து கேள்விக் கணைகளை மேற்படி மார்க்கப் பிழைப்பு நடத்தும் மௌலவிகளை நோக்கி கேட்க ஆரம்பித்து விட்டனர். அக்கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் திக்குமுக்காடி வரும் மேப்படியார்கள், இதற்கு ஹிஜ்ரிகமிட்டியினரே காரணம் என்பதால் கோபங் கொண்டு படுபயங்கர ஃபத்வாக்களை நமக்கெதிராக வீசி எறிகின்றனர். அதனால்தான் ஹிஜ்ரி கமிட்டியினர் 'மஆஸியத்துர் ரஸூல்' – அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்பவர்கள் என்றுகூட நாக்கூசாமல் விமர்சிக்கின்றனர்.

மக்களின் பார்வையிலிருந்து தங்களின் தவறை திசை திருப்பும் முயற்சியே மௌலானா மௌலவிகளின் வரம்பை மீறிய வசை மொழிகளின் பிண்ணனியாகும். எனவே அவர்களையும், அவர்களது தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் அலட்சியம் செய்ய வேண்டுகிறோம்.