வாதம் புரிவதையே வாழ்க்கையாக்கி விட்ட பிரபல தவ்ஹீது அறிஞர்(!) அவர்கள் கீழக்காணும் கேள்விகளை அவரது 'பிறை ஓர் ஆய்வு' என்ற புத்தகத்தின் வாயிலாகவும், பல பொதுமேடைகளிலும் எழுப்பியுள்ளார். அவர் ஆய்வு செய்து சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரது இயக்கத்திலுள்ள பலர் அவரின் கூற்றை சரிகண்டு பின்பற்றுகின்றனர். அத்தகையோர் ஹிஜ்ரிகமிட்டியின் மீதான வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு இறுதிவரை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கிரகணத் தொழுகை சம்பந்தமாக எடுத்து வைக்கப்பட்ட வாதத்திற்குரிய உண்மையான விளக்கத்தை உணர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். மக்களுக்கு சத்தியத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமையை உணர்ந்தே இவ்விளக்கங்களை நாம் வெளியிடுகிறோம்.
அவருடைய கேள்விகள் : இன்று அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்படுவதை நாம் தொலைக் காட்சியில் நேரடியாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போது நமது கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? சந்திர கிரகணம் இரவு நேரத்தில் ஏற்படக் கூடியது. அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத் தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும். கிரகணம் ஏற்படுவதாக முன் கூட்டியே கணித்துச் சொல்லப்பட்டு விட்டதால் உலகம் முழுவதும் கிரகணத் தொழுகையைத் தொழ வேண்டுமா? அல்லது கிரகணம் ஏற்பட்ட அந்த இடத்தில் மட்டும் தொழ வேண்டுமா? இந்தக் கேள்வியைச் சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது. லண்டனில் சூரிய கிரகணம் தோன்ற ஆரம்பித்து முழுமையாக விலகும் வரை அங்குள்ள மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். தங்களுடைய நாட்டில் எப்போது கிரகணம் ஏற்பட்டதோ அந்த நேரத்தில் துருக்கி, ஈரான் மக்கள் தொழுது கொள்வார்கள். கிரகணமே ஏற்படாத பகுதியில் உள்ள மக்கள் எப்போது தொழ வேண்டும்? லண்டனுடைய கிரகண நேரத்திலா? துருக்கியுடைய கிரகண நேரத்திலா? அல்லது லண்டனிலிருந்து சென்னை வரை கிரகணம் ஏற்பட்ட சுமார் மூன்று மணி நேரமும் சேர்த்துத் தொழ வேண்டும் என்று கூறப் போகிறார்களா?
நமது விளக்கம்
கிரகணத் தொழுகை தொழுவதையும், நோன்பு என்ற இபாதத்தையும் பிரித்தறியாமல் அவை இரண்டும் ஒரே தரத்தில் அமைந்தவை என்று நினைத்துக் கொண்டதால் ஏற்பட்ட ஐயமே இது. ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் பிறை நிலைப்பாடுகளில் ஒன்றாகும். அதாவது உலகில் பல்வேறு பகுதிகளுக்கும் ரமழான் முதல்நாள் என்பது வெள்ளி, சனி, ஞாயிறு என்று வௌ;வேறு கிழமைகளால் வித்தியாசப் படலாம், அதில் ஒன்றும் தவறில்லை என்றும் கூறிவருகிறார். ரமழான் உட்பட அனைத்து மாதங்களின் முதல் நாளை சரியாகத் துவங்க சந்திரனின் அனைத்துப் படித்தரங்களையும் கவனிக்க வேண்டும். இதுதான் மார்க்கத்தின் கட்டளை.
சந்திர மாதத்தின் இறுதிநாள் என்ற தனித்த ஒரேயொரு நாளில் ஏற்படும் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வு அந்த மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இதுபோல பவுர்ணமிநாள் என்ற ஒற்றை நாளில் ஏற்படும் சந்திரக் கிரகணமும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இன்னும் இந்த சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் ஏற்படுவதில்லை. பல மாதங்கள் கிரகணங்கள் நிகழாமலும் போகும். இவையே அறிவியல் கூறும் அடிப்படை உண்மைகள்.
ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்பது மேற்படி அறிஞரின் நம்பிக்கை. இத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ள மேற்படி அறிஞருக்குக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி வாதம் எழுப்புவதற்கு உரிமையில்லை.
காரணம் சந்திரனும், சூரியனும் கிழக்கில் உதித்து மேற்கே மறைகிறது என்பது இன்றைக்கு பாலர் பாடமாகி விட்டது. இந்நிலையில், மேற்படி அறிஞர் அவர்கள் சந்திரன் மேற்கே உதித்து கிழக்குத் திசையில் மறைகிறது என்று அழுத்தமாகக் கூறுகிறார். சந்திரன் உதிக்கும் திசையைக்கூட அறிந்திடாத மேற்படி அறிஞருக்கு சந்திரக் கிரகணத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்று அவருக்கு உள்ளதாம். பிறைகளைப் பற்றிய அடிப்படை ஞானமில்லாத இவர் இப்பிறை விஷயத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்யவதற்கு என்ன உரிமை இருக்கிறது? நீங்கள் சற்று புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அறிஞர் அழுத்தமாகக் கூறுகிறார். இது மிகமிகத் தவறான வாதமேயாகும். காரணம் கிரகணம் என்பது ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டு வருவதில்லை. தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டினர் ரமழான் நோன்பைத் துவங்குவது போல மூன்று கிழமைகளில் கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை. இதை பிற்பகுதியில் இன்னும் தெளிவாக விளக்குவோம்.
எனினும் கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட வில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும்.
வெள்ளிக்கிழமை என்ற ஒரு கிழமையில் மட்டுமே ஜூம்ஆ தொழுகையை தொழ வேண்டும். வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகை என்பது அந்தக் கிழமைக்குள், அந்த ஜூம்ஆவுடைய வக்துக்குள் தொழுது முடிக்க வேண்டிய இரண்டு ரக்அத்துக்கள் கொண்ட தொழுகையாகும்.
அந்தந்த நாட்களுக்குரிய பர்ளான தொழுகைகள் தொழப்படுவதைப் போல (கிரகணம் நமக்குக் காட்சியளிக்கா விட்டாலும்) அந்தக் கிரகணம் தோன்றும் கிழமையன்றுதான் நாம் தொழ வேண்டும் என்று கிழமையைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவுமில்லை. இவற்றை அறியாமல் அறிஞர் வாதம் வைத்திருப்பதின் பிழைகளை பின்னர் ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டுவோம் - இன்ஷா அல்லாஹ்.
இந்நிலையில் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளது அறிவியல் ஆய்விலும், மார்க்கத்தின் முக்கிய அடிப்படைகளுள் ஒன்றான தொழுகை விஷயத்தை விளங்குவதிலும் அவர் மிகுந்த பின்னடைவில் இருப்பதைக் காட்டுகிறது. எனவேதான் கிரகணத்தைப் புரியாத இவர், பிறை எந்தத் திசையில் உதிக்கிறது என்பதை அறியாத இவர்;, கிரகணத் தொழுகையின் அடிப்படையை விளங்காத இவர்; மேற்கண்டவாறு கேள்வி எழுப்புவதற்கு தகுதியற்றவர் என்று நாம் சொல்கிறோம். பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்றும் அவர் கூறுகிறார். அதே நேரத்தில் அந்த பிறை தொடர்பான கிரகணத் தொழுகை பற்றி அழுத்தமாகப் பேசுகிறார். எனவே கிரகணம் சம்பந்தமாக வரும் ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் தற்போது ஒருங்கிணைக்கும் அளவுக்கு ஆகிவிட்டதா என்பதையும் அவர் சொல்ல வேண்டும்.
எனினும் அவரது கேள்விகளுக்குரிய விளக்கங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக கீழ்க்காணும் தலைப்புகளில் முறைப்படுத்தி விளக்குகிறோம்.
1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.
2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?
4. அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?
5. கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!
1. கிரகணம் சம்பந்தமாக வரும் நபிமொழிகள்.
சூரியனுக்கும், பூமிக்குமிடையே சந்திரன் குறுக்கிட்டு ஒரே நேர்க்கோட்டில் அம்மூன்றும் அமைந்தால் அது சூரியக் கிரகணமாகும். இஸ்லாமிய சந்திர மாதத்தின் இறுதி நாளான புவிமைய சங்கம தினத்தில்தான் (Geocentric Conjunction Day) சூரியக் கிரகணம் நடைபெறும்.
இதுபோல, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி தன் சுழற்சிப் பாதையில் வரும். இப்படி சூரியன், பூமி, சந்திரன் ஆகிய இம்மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்து, சூரியனின் வெளிச்சத்தால் பூமியின் நிழல் சந்திரனின் மீது விழுந்து சந்திரனை மறைப்பதை சந்திரக் கிரகணம் என்கிறோம். இஸ்லாமிய சந்திர மாதத்தின் பவுர்ணமி நாளன்றே சந்திரக் கிரகணம் நடைபெறும்.
சூரியன் சந்திரன் அல்லாத மற்ற கோள்கள் நாம் வசிக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் நேர்க்கோட்டில் அமைந்து அவை சூரியனின் ஒளியை மறைத்தாலும் அவற்றை நாம் கிரகணம் என்று அழைப்பதில்லை. உதாரணமாக சூரியக் குடும்பத்தில் பூமிக்கு முன்னர் இருக்கும் இரு கோள்களான புதனும் (Mercury), வெள்ளி (Venus) என்ற சுக்கிரனும், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நேர்க்கோட்டில் வந்து கடந்து செல்வதை 'புதன் கோளின் சூரியக் கடப்பு' (Mercury Transit) 'வெள்ளிக் கோளின் சூரியக் கடப்பு' (Venus Transit) என்றே அழைக்கிறோம்.
அதுபோல நமது சூரியக் குடும்பத்திலுள்ள சூரியன், சந்திரன் மற்றும் பூமி அல்லாத பிற கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் நேர்கேட்டிற்கு வந்து அவற்றிற்குக் கிரகணம் ஏற்பட்டால் அதற்காக நாம் தொழத் தேவையில்லை. சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இவ்விரண்டும் பூமியின் நேர்க்கோட்டில் அமைந்து அவ்விரண்டும் பங்குபெறுவதால் ஏற்படும் நிகழ்வையே நாம் பொதுவாக கிரகணம் என்கிறோம். இத்தகைய கிரகணத்தை நாம் கவனிக்கும் போதுதான் தொழவேண்டும் என்று மார்க்கமும் கூறியுள்ளது. எனவே கிரகணத் தொழுகை சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்களை முதலில் அறிந்து கொள்வதற்காக அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.
حدثنا عمرو بن عون ، قال : حدثنا خالد ، عن يونس ، عن الحسن ، عن أبي بكرة ، قال : كنا عند رسول الله صلى الله عليه وسلم فانكسفت الشمس ، فقام النبي صلى الله عليه وسلم يجر رداءه حتى دخل المسجد ، فدخلنا ، فصلى بنا ركعتين حتى انجلت الشمس، فقال صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ، فإذا رأيتموهما ، فصلوا ، وادعوا حتى يكشف ما بكم " *.(
صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : 1006).
'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம் அப்போது சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் நின்று மஸ்ஜிதில் நுழையும் வரை தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டவர்களாக சென்றார்கள். எனவே நாங்களும் நுழைந்தோம். சூரியன் தெளிவாகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்'. பிறகு 'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள். மேலும் உங்கள் மீது இருப்பவை வெளிப்படும் வரை நீங்கள் பிரார்த்தியுங்கள' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ராஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1006.
حدثنا شهاب بن عباد ، قال : حدثنا إبراهيم بن حميد ، عن إسماعيل ، عن قيس ، قال : سمعت أبا مسعود ، يقول : قال النبي صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد من الناس ، ولكنهما آيتان من آيات الله ، فإذا رأيتموهما ، فقوموا ، فصلوا " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : 1007).
'நிச்சயமாக மனிதர்களில் எவருடைய மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் எழுங்கள் தொழுங்கள்'. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மஸ்வூத் கூறியதை நான் செவியுற்றேன் என கைஸ் அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரி-1007.
حدثنا أصبغ ، قال : أخبرني ابن وهب ، قال : أخبرني عمرو ، عن عبد الرحمن بن القاسم ، حدثه عن أبيه ، عن ابن عمر رضي الله عنهما، أنه كان يخبر عن النبي صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا يخسفان لموت أحد ولا لحياته ، ولكنهما آيتان من آيات الله ، فإذا رأيتموها فصلوا " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : 1008).
'நிச்சயமாக எவருடைய மரணத்திற்காகவும் மேலும் அவரின் வாழ்விற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆனால் அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஆகவே நீங்கள் அவற்றை கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள்' என நபி ஸல் அவர்களிடமிருந்த இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவித்தவர்களாக இருந்தார்கள். நூல்: புகாரி-1008.
حدثنا عبد الله بن مسلمة ، عن مالك ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، أنها قالت : خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم ، فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس ، فقام ، فأطال القيام ، ثم ركع ، فأطال الركوع ، ثم قام فأطال القيام وهو دون القيام الأول ، ثم ركع فأطال الركوع وهو دون الركوع الأول ، ثم سجد فأطال السجود ، ثم فعل في الركعة الثانية مثل ما فعل في الأولى ، ثم انصرف وقد انجلت الشمس ، فخطب الناس ، فحمد الله وأثنى عليه ، ثم قال : " إن الشمس والقمر آيتان من آيات الله ، لا يخسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم ذلك ، فادعوا الله ، وكبروا وصلوا وتصدقوا " *. (صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصدقة في الكسوف حديث : 1010).
ஆயிஷா (ரழி) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்குக் கிரகணம் ஏற்பட்டது. மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது நின்றார்கள் அத்தோடு நிற்பதை நீட்டினார்கள். பிறகு ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். பிறகு எழுந்தார்கள், அதிகமாக நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ருகூவுச் செய்தார்கள். அத்தோடு ருகூவை நீட்டினார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். அத்தோடு ஸஜ்தாவை நீட்டினார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் திரும்பினார்கள். அப்போது சூரியன் விலகியிருந்தது. பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை அழையுங்கள். நீங்கள் தக்பீர் கூறுங்கள். மேலும் நீங்கள் தொழுங்கள். மேலும் நீங்கள் தர்மம் செய்யுங்கள்' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள். நூல் : புகாரி-1010
حدثنا عبد الله بن مسلمة ، عن مالك ، عن زيد بن أسلم ، عن عطاء بن يسار ، عن عبد الله بن عباس ، قال : انخسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم ، فصلى رسول الله صلى الله عليه وسلم ، فقام قياما طويلا نحوا من قراءة سورة البقرة ، ثم ركع ركوعا طويلا ، ثم رفع ، فقام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم سجد ، ثم قام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم رفع ، فقام قياما طويلا وهو دون القيام الأول ، ثم ركع ركوعا طويلا وهو دون الركوع الأول ، ثم سجد ، ثم انصرف وقد تجلت الشمس ، فقال صلى الله عليه وسلم : " إن الشمس والقمر آيتان من آيات الله ، لا يخسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم ذلك ، فاذكروا الله " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب صلاة الكسوف جماعة حديث : 1018).
'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அப்போது பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு எழுந்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். மேலும் இது முதல் கியாமை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். மேலும் இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். சூரியன் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். பின்னர் எந்த மனிதனின்மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே அதைக் கவனிக்கும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.' என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி-1018.
حدثنا عبد الله بن محمد ، قال : حدثنا هاشم بن القاسم ، قال : حدثنا شيبان أبو معاوية ، عن زياد بن علاقة ، عن المغيرة بن شعبة ، قال : كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم يوم مات إبراهيم ، فقال الناس : كسفت الشمس لموت إبراهيم ، فقال رسول الله صلى الله عليه وسلم : " إن الشمس والقمر لا ينكسفان لموت أحد ولا لحياته ، فإذا رأيتم فصلوا ، وادعوا الله " *.( صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الصلاة في كسوف الشمس حديث : 1009).
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்ராஹீம் (ரழி) மரணித்த அன்று சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரியனுக்கு கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். எந்த மனிதனின் மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரியனும் சந்திரனும் கிரகணம் ஆகுவதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் அதைக் கவனிக்கும்போது நீங்கள் தொழுங்கள் மேலும் அல்லாஹ்வை அழையுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அல்முகீரா பின் ஷூஹ்பா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். நூல்: புகாரி-1009.
حدثنا محمد بن العلاء ، قال : حدثنا أبو أسامة ، عن بريد بن عبد الله ، عن أبي بردة ، عن أبي موسى ، قال : خسفت الشمس ، فقام النبي صلى الله عليه وسلم فزعا ، يخشى أن تكون الساعة ، فأتى المسجد ، فصلى بأطول قيام وركوع وسجود رأيته قط يفعله ، وقال : " هذه الآيات التي يرسل الله ، لا تكون لموت أحد ولا لحياته ، ولكن يخوف الله به عباده ، فإذا رأيتم شيئا من ذلك ، فافزعوا إلى ذكره ودعائه واستغفاره " *. (صحيح البخاري - كتاب الجمعة أبواب الكسوف - باب الذكر في الكسوف حديث : 1025).
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே மஸ்ஜிதிற்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். பின்னர் 'இந்த அத்தாட்சிகள் எவற்றை அல்லாஹ் அனுப்புகிறானோ எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் அதன் மூலம் தன்னுடைய அடியார்களை பயத்தை ஏற்படுத்துகின்றான். ஆகவே இவற்றில் எதையேனும் நீங்கள் கவனிக்கும்போது அவனின் நினைவிற்கும், அவனிடம் பிரார்த்திக்கவும் மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நூல் : புகாரி-1025.
2. கிரகணத் தொழுகை கடமையான தொழுகையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி தமிழில் உண்டு. ஒரு விஷயத்தை ஆய்வு செய்யும் போது ஆத்திரப்படாமல் நிதானமாக, உளத்தூய்மையோடு, நல்லெண்ணத்துடன் ஆய்வு செய்தால்தான் அறிவுப்பூர்வமான, உண்மையான கருத்துக்கள் ஆய்வின் வெளிப்பாடாக அமையும். ஆனால் மேற்கண்ட அறிஞர் அவர்களோ, நமக்குத் தேதிகளைத் தெரிவிக்கும் சந்திரனைப் பற்றி நாம் கூறினால், அவர் நேரத்தைக் தெரிவிக்கும் சூரியனைப் பற்றி நம்மிடம் கேள்வி கேட்டு விட்டு அறிவார்ந்த கேள்வியை கேட்டு விட்டதாக நினைத்துக் கொள்வார் என்பதை அவரது எழுத்தில் இருந்தே நாம் புரிந்து கொள்ளலாம்.
மக்களே! முதலில் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்ற தொழுகையைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பிறைகளின் காட்சியால் அமைவது தேதிகளாகும். 29 அல்லது 30 தேதிகளை உள்ளடக்கியதே ஒரு மாதமாகும். இவ்வாறு ஒவ்வொரு மாதத்தையும், அந்த மாதத்தின் துவக்கம் மற்றும் முடிவின் அடிப்படைகளையும் பிரித்தறிந்து, பிறையின் படித்தரங்களை (மனாஜிலை) கவனிப்பது என்பது தொழுகை வக்திலிருந்து எவ்வாறு தனித்து விளங்குகிறது என்பதையும் விளங்க வேண்டும்.
வக்து என்பது அந்தந்த பகுதியின் நேரத்தைப் பொறுத்ததுதான். நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது (4:103) என்ற குர்ஆனின் கூற்றை நிதானமாக சிந்தித்தறிய ஏன் இவர்கள் தவறுகிறார்கள்?. வெள்ளிக்கிழமை ஜூம்ஆநாளில் உலக முஸ்லிம்கள் அனைவரும் அவரவர் ஜூம்ஆ நேரத்தில் ஜூம்ஆ தொழுகையை அவரவர்கள் ஜமாஅத்தோடு தொழுவதைப் போல, ஒருநாளின் லுஹருடைய வேளை வந்துவிட்டால் அந்த நாளின் லுஹர் தொழுகையை அந்த லுஹர் வக்தில் தொழுதே
ஆக வேண்டும். அதுபோல நோன்பு வைத்திருப்பவர் அவரவர் மஃரிபில் சூரியன் மறையும் போதும் அவரவர் நோன்பை முடித்து விட்டு மஃரிபு தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறான தொழுகைகள் அந்தந்த கிழமைகளுக்குள் அந்தந்த வக்துக்குள் தொழ வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடமையான ஐந்து வேளைத் தொழுகைகள் அதற்குரிய நேரங்களின் அடிப்படையில் அமையப் பெற்ற அமல்களாகும். ஒரு கிழமைக்குரிய ஐந்து கடமையான தொழுகைகளையும், சுன்னத்தான உபரியான தொழுகைகளையும் 24 மணிநேரம் கொண்ட அந்தந்த கிழமைக்குள் தொழுது முடித்து விடுகிறோம். இதுவே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் ஆகும்.
அதாவது வியாழக்கிழமை தொழ வேண்டிய லுஹர் தொழுகையை, வெள்ளிக்கிழமை அன்று நாம் தொழ மாட்டோம். அதுபோல வெள்ளிக்கிழமை தொழ வேண்டிய ஜூம்ஆ தொழுகையை வெள்ளிக்கிழமை அல்லாத மற்ற நாட்களில் தொழக் கூடாது. ஆக வல்ல அல்லாஹ் முஸ்லிம்களாகிய நமக்கு விதியாக்கியுள்ள தொழுகை என்பது அவரவர்களின் 'வக்து' அடிப்படையில் அமைந்த, ஒரு கிழமைக்குள் தொழுது முடிக்க வேண்டிய, நேரம் குறிப்பிடப்பட்ட ஃபர்ளான கடமையாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வெள்ளிக்கிழமை என்ற 24 மணிநேரங்கள் கொண்ட அந்த நாள், ஐந்து கடமையான தொழுகையை உள்ளடக்கிய உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் சிறப்பான ஒரு நாளாகும். இந்த வெள்ளிக்கிழமை என்பது ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களிலும், அந்தந்த மாதங்களின் ஒவ்வொரு வாரங்களிலும் உள்ள 7 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வெள்ளிக்கிழமை நாளில் ஜூம்ஆ என்ற இரண்டு ரக்அத்துகள் கொண்ட ஃபர்ளானத் தொழுகையை முஸ்லிம்கள் அனைவரும் 24 மணிநேரம் கொண்ட அந்த வெள்ளிக்கிழமைக்குள், ஜூம்ஆவுடைய வக்திற்குள் தொழதிட வேண்டும். ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகளை தொழாமல் விட்டுவிட்டால் கடமையாக்கப்பட்ட வணக்கத்தைச் செய்யாத குற்றமும் பாவம் ஆகும்.
ஆனால் கிரகணத் தொழுகை என்பது இத்தகைய நிபந்தனைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
1. ஒரு வாரத்தின் எல்லா நாட்களிலும் சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஏற்படுவதில்லை.
2. சூரிய, சந்திரக் கிரகணத் தொழுகைகளை குறிப்பிட்ட கிழமைக்குள்தான் தொழுது முடிக்க வேண்டும் என்ற அளவுகோல் இல்லை.
3. வருடத்தின் எல்லா மாதங்களிலும் இக்கிரகணங்கள் ஏற்படுவதுமில்லை.
4. கிரகணத் தொழுகை என்பது முஸ்லிம்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட ஃபர்ளான கடமையுமல்ல.
5. கிரகணம் என்பது பொதுவாக உலகிலுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே நாளுக்குள் காட்சியளிபதுமில்லை. (அதாவது ஜூம்ஆ தொழுகை உட்பட பர்ளான தொழுகைகள் கிழக்குத் திசையின் துவக்கத்தில் வசிக்கும் முஸ்லிம்களிலிருந்து ஆரம்பித்து மேற்குத் திசையின் முடிவு வரை வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளுக்குள் தொழுது முடிப்பதைப்போல கிரகணம் அனைத்து மக்களையும் உள்ளடக்கும் வகையில் இல்லை.)
இவற்றை தெளிவாக பிரித்தறிந்து விளங்கி முஸ்லிம்களாகிய நம்மீது கடமையான ஐங்கால தொழுகைகளிருந்து கூட இந்தக் கிரகணத் தொழுகை இவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதைப் புரிய வேண்டும். இவ்வாறு கடமையான பிற தொழுகையுடனேயே இந்தக் கிரகணத் தொழுகையை ஒப்பிட இயலாது என்ற நிலையில் மனிதர்களுக்குத் தேதியை அறிவிக்கும் பிறையின் காட்சியையும், ரமழான் மாதத்தைத் துவங்குவதையும், இந்தக் கிரகணத் தொழுகைகளை வைத்து எவ்வாறு ஒப்பிட முடியும்?. மக்களே சிந்தியுங்கள்.
இன்னும் உலக முஸ்லிம்களாகிய நாம் வெள்ளிக்கிழமை என்ற 24 மணி நேரங்கொண்ட ஒரு நாளுக்குள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி விடுகிறோம். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் பெருநாள் தொழுகைளை தொழ முடியும், தொழவும் வேண்டும். அதுபோல 24 மணிநேரம் கொண்ட ஒரு முழு நாளுக்குள் நோன்பையும் துவங்க இயலும். குர்ஆனும் சுன்னாவின் தெளிவான வழிகாட்டுதல் இதுதான். இப்படி நாம் கூறினால், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் அந்த நேரத்தில் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு திறக்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பைத் திறப்பீர்களோ? இன்னும் அமெரிக்காவில் சந்திர கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் இந்தியாவில் கிரகணத் தொழுகை தொழ வேண்டுமா? என்று கேள்விகளை அடுக்கிவிட்டு, ஒற்றுமை கோஷம் போட வந்து விட்டார்கள் பாருங்கள் என்று அறிஞர் வினா எழுப்புகிறார்.
உலக மக்கள் 'ஒரே நாளில்' பெருநாள் கொண்டாட முடியும் என்பதை 24 மணிநேரம் கொண்ட ஒரு முழுமையான நாளைக் குறிக்கிறது என்பதை அறியாமல் 'ஒரே நேரத்தில்' நாம் பெருநாள் கொண்டாடச் சொன்னதாக அவதூறை பரப்புவது நியாயமா?.
இவ்வாறு நாள்ஃகிழமை (Day/Date) என்பதையும், நேரம் (Time) என்பதையும் பிரித்தறியாமல் வாதம் புரிவதே அறிஞரின்(!) வாடிக்கையாகி விட்டது. அவரை பேரறிஞராக ஏற்றுள்ள அவரது இயக்கத்தினரும் 'ஆஹா எப்படிப்பட்ட கேள்வி இது? குறுக்கை நொறுக்கும் அளவிற்கு அல்லவா அண்ணனின் வாதம் உள்ளது? மாஷா அல்லாஹ்! தபாரக்கல்லாஹ்!' என்று நினைத்து புளங்காகிதம் அடைகின்றனர்.
இன்னும் ஒரு வருடத்திற்கு ஷஃஅபான் 29-வது நாள் மற்றும் ரமழான் 29-வது நாள் என்ற அந்த இரண்டு நாட்கள் மட்டும், பிறையைப் பார்க்க வேண்டுமாம்! அதுவும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்கச் சட்டமாம்! பிறை பார்க்க வேண்டியதே 'யவ்முஷ்ஷக்' என்ற சந்தேகத்திற்குரிய நாளில் மட்டும்தானாம்! இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் அவரது இயக்கத்தினர் தவறாக விளங்கியுள்ளதற்கும் மேற்படி அறிஞர்களே காரணம்.
லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள் என்றும் பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளதை இங்கு மீண்டும் நினைவு கூறுகிறோம். பிறை விஷயத்தில் மேற்படி அறிஞரைப் போன்ற ஞானமில்லாதவர்கள் செய்த பிரச்சாரத்தினால்தான் நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்களில் பலர் நோன்பை நோற்கின்றனர். ஒரே குடும்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் என பிளவுபட்டு பெருநாள் கொண்டாடுகின்றனர். இவற்றை யாரும் மறுக்க இயலுமா?.
எனவே மேற்கூறிய விளக்கங்களை மனதில் நிறுத்தி, முதலில் கிரகணத் தொழுகை என்பது கடமையான ஐவேளைத் தொழுகையிலிருந்தும் எவ்வாறெல்லாம் வேறுபடுகிறது என்பதை அறிந்து மனதில் உள்வாங்கிக் கொள்ள வேண்டுகிறோம்.
3. அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாமா?
அவரவர் வக்தில் தொழுகையை நிறைவேற்றுவதைப் போல ஒரு மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்யலாம் என்பது மிகமிகத் தவறான வாதமாகும்.
சூரியனும் சந்திரனும் அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்ற இறைவசனத்தின் அடிப்படையில் இரண்டையும் துல்லியமாகக் கணக்கிடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். இந்நிலையில் ஒரு மாதம் எந்தக் கிழமையில் ஆரம்பமாகிறது என்பதை வரையறுக்கும் சந்திரனை, தொழுகை நேரத்தை வரையறுக்கும் சூரியனின் விதிகளோடும், தன்மைகளோடும் ஒப்பிட்டு இணைத்துக் கூறுவது அறிவுடைமையாகாது.
சந்திரனின் படித்தரங்கள் (மனாஸில்) மனிதர்களுக்குத் தேதியைக் காட்டக் கூடியது. சூரியன் அந்தந்த நாளின் நேரத்தைக் தெரிவிக்கக் கூடியது. ரமழான் நோன்பு என்பது இவ்விரண்டையும் அடிப்படையாக வைத்து குறித்த தேதியில், நேரம் குறிக்கப்பட்ட ஃபஜ்ரு முதல் மஃரிபு வரையுள்ள வக்திற்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை என்பதை விளங்க வேண்டும்.
சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப் படுவதைப் போல, சந்திரனின் படித்தரங்களில் (மனாஜில்) முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற கூற்று மிகவும் பிழையானதாகும். இந்தத் தவறான கூற்றுக்கு கிரகணத் தொழுகையை மையப்படுத்தி அதுதான் இதற்கு ஆதாரம் என்று கூறுவது அபத்தமானதே! மக்களின் சிந்தனையைத் திசை திருப்புவதே!. இப்படி குழப்பமான கருத்துக்களை பரப்பிவரும் அறிஞரும், அக்கூற்றை சரிகாண்பவர்களும் தங்களது சிந்தனையை சீர்தூக்கிப் பார்த்து சீர்திருத்தம் செய்ய வேண்டுகிறோம்.
சூரிய, சந்திரக் கிரகணங்கள் ஒரு மாதத்தின் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று மூன்று வௌ;வேறு நாட்களில் ஏற்படுவதில்லை. இந்நிலையில் கிரகணத்தை மையமாக வைத்து ரமழான் முதல் நோன்பை முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வௌ;வேறான நாட்களில் துவங்கினாலும் அது தவறல்ல என்று மேற்படி அறிஞர் வாதிப்பது மிகவும் பிழையானதாகும். இதை மீண்டும் இங்கு நினைவு படுத்துகிறோம்.
சந்திரனும், சூரியனும் தன்மைகளால் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை நாம் பலமுறை தெளிவாக விளக்கியுள்ளோம். புரியும்படி சொல்வதென்றால், ஒரு மாதத்தின் முதல்நாளின் சூரியனில் துவங்கி 7-வது நாளின் சூரியன், 14-வது நாளின் சூரியன் உட்பட அந்த மாதத்தின் இறுதிநாள்வரை தென்படும் சூரியன் வரை அனைத்து நாட்களில் தென்படும் சூரியனையும் நாம் கண்காணித்தால் அதன் காட்சிகளில் எந்த வித்தியாசங்களும் காணப்படுவதில்லை. அதன் வடிவத்திலும், அதன் வெளிச்சத்திலும், புறக்கண்களுக்குத் தெரியும் கால அளவிலும் பெரும் வித்தியாசங்கள் எதுவும் தெரிவதில்லை. ஆனால் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு அளவிலான மாற்றங்களை நாம் சந்திரனில் காணலாம்.
மேலும் ஒரு மாதத்தின் அனைத்து நாட்களிலும் தென்படும் சூரியனானது, பூமியில் மனிதர்கள் வாழும் (துருவப்பகுதி தவிர்த்து) அனைத்து பகுதிகளிலும் எவ்வித பாரபட்சமும் இன்றி காலை முதல் மாலை வரை, சுமார் 12 மணி நேரங்கள் அனைத்து மனிதர்களும் புறக்கண்களால் பார்க்கும் அளவிற்கு முழுவதுமாக காட்சியளிக்கிறது. அதாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து இறுதிநாள் வரை கிழக்கில் துவங்கி மேற்குத் திசை வரையுள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித மாறுதல்களுமின்றி காட்சி அளிப்பதைக் காண்கிறோம். ஆனால் சந்திரனோ காட்சியளிப்பதிலும்கூட சூரியனைப் போன்ற தன்மை வாய்ந்தது அல்ல.
சந்திரனின் படித்தரங்களில் தலைப்பிறை என்று மக்கள் விளங்கியுள்ள முதல் நாளுக்குரிய பிறை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் முந்தைய மாதத்தின் கடைசி நாளான புவிமைய சங்கம நாளில் (Geocentric Conjunction Day) பிறக்கும். அவ்வாறு பிறந்த அந்தப்பிறை, அதற்கு அடுத்த நாளான புதிய மாதத்தின் முதல்நாளில், மஃரிபு நேரத்தில், உலகில் சில பகுதிகளில் மட்டும், சில நிமிடங்களுக்கு மட்டுமே புறக்கண்களுக்குக் காட்சியளிக்கும். அவ்வாறு காட்சியளித்த முதல் நாளின் பிறை குறிப்பிட்ட சில நிமிடங்களில் மறைந்தும் விடும். இவ்வாறு தெரிந்த முதல் நாளின் பிறையை விட இரண்டாவது நாளின் பிறை, மூன்றாவது நாளின் பிறை என்று அடுத்தடுத்து வரும் நாட்களின் பிறைகள் அது பிறக்கும்நேரம், மறையும் நேரம், பிறையின் வடிவம், அது காட்சியளிக்கும் நேரம் என்று வித்தியாசப்படும். இப்படி ஒவ்வொரு நாட்களிலும் வித்தியாசப்படும் அளவில்தான் வல்ல அல்லாஹ் பிறைகளின் படித்தரங்களை (அஹில்லாஹ்) வடிவமைத்து உள்ளான். அந்த வித்தியாசமான வடிவங்களே நமக்குத் தேதிகளை அறிவிக்கின்றன (2:189, 10:5, 36:39).
நேரத்தையும், காலத்தையும் கணக்கிடுவதற்காக சூரியனையும் சந்திரனையும் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். சூரியனால் ஏற்படும் நிழலை மையமாக வைத்து தொழுகை நேரங்கள் கணக்கிடப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வோம். அதே நேரத்தில் சந்திரனின் (அஹில்லாஹ்) படித்தரங்களால் அமைந்த தேதிகளை கணக்கிட மாட்டோம், அதை எதிர்ப்போம் என்பவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை முன்வைப்பது நியாயம்தானா?.
சூரியனின் சுழற்சியை மையமாக வைத்து அளவிடப்படும் தொழுகை நேரங்கள் அவரவர் 'வக்தின்' அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதைப்போல, சந்திரனின் படித்தரங்களில் முதல் படித்தரமான பிறந்த பிறையையும் அவரவர்கள் தத்தமது பகுதியில் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்று சூரியன் மற்றும் சந்திரனின் தன்மைகளை, காட்சியளிப்பதையும் சம அளவில் வைத்து வாதம் வைத்துள்ளார். அதனாலேயே சந்திரனும் சூரியனும், தன்மைகளாலும் காட்சியளிப்பதிலும் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதை விளக்கியுள்ளோம். அதே நேரத்தில் சூரியனை வைத்து நேரங்களையும், சந்திரனை மையமாக வைத்து நாட்களையும் கணக்கிட வேண்டும் என்ற வல்ல அல்லாஹ்வின் கட்டளையையும் இங்கு நினைவு படுத்துகிறோம்.
சரி, சூரியக்கிரகணத்தை விட்டுவிடுகிறோம் காரணம் சூரியனும் சந்திரனும் தன்மைகளால் வௌ;வேறானவை என்று ஒப்புக் கொள்கிறோம். ஆனால் சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படத்தானே செய்கிறது. எனவே அந்த சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் என்று அறிஞர் வாதம் வைத்தாலும் வைக்கலாம்.
முதலில் அவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைத்து கிரகணத் தொழுகைகளில் சூரியக் கிரகணத்தை சொல்லவில்லை, அந்த உதாரணம் தத்தமது பகுதியில் நோன்பு நோற்றலுக்குப் பொருந்தாது என்று அறிஞர் முதலில் ஒப்புக் கொள்ளத் தயாரா? இன்னும் சந்திரக் கிரகணத்தை அவரவர்கள் தத்தமது பகுதியில் தொழுவதைப் போல அவரவர்கள் தத்தமது பகுதிகளில் பிறையை புறக்கண்களால் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தும் மிகவும் தவறானது என்பதையும் பிற்பகுதியில் விளங்கலாம்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் குறுக்கிடுவதால் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது. சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி குறுக்கிட்டு, அதன் நிழல் சந்திரனில் பட்டு சந்திரன் மறைக்கப்படுவதே சந்திரக் கிரகணமாகும். இன்னும் பவுர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். பவுர்ணமி நாளில் சந்திரனின் உதயத்தையும், அதன் அஸ்தமனத்தையும் பொதுவாக உலக மக்கள் அனைவரும் கவனிக்கும் அளவில் சந்திரனின் காட்சி அமையும். அப்படி அமைந்தும் அன்று ஏற்படும் சந்திரக் கிரகணம் பொதுவாக உலகமக்கள் அனைவருக்கும் காட்சியளிப்பதில்லை. ஆக இந்த சந்திரக் கிரகணத்தையும், அந்த சந்திரக் கிரகணத் தொழுகையை மையப்படுத்தி சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கிரகணங்கள் ஊருக்கு ஊர் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படும் போது அதே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று விவாதிப்பது அறிவுடைமையாகாது. இதுபோன்ற தவறான செய்திகளை மற்றவர்கள் அறியாமல் சொல்லிவிட்டால் அவற்றை விளக்குவதற்குப் பதிலாக 'மடமைத்தனம்', 'கிறுக்குத்தனம்', 'கூமுட்டை' போன்ற சொற்களைப் பயன்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்துவது அவருடைய வாடிக்கை. எனவே சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பிறையும் ஊருக்கு ஊர் மாறுபடும் என்று மேற்கண்டவாறு வாதம் வைப்பதை அவருடைய பாஷையில் சொல்வதென்றால் 'கிறுக்கத்தனமான வாதம்' என்றே சொல்ல வேண்டும்.
சூரியனின் வெளிச்சத்தால் அமையும் நிழலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுகிறோம். அந்த சூரியன் கிழக்கில் துவங்கி மேற்கு வரையுள்ள அனைத்து மக்களுக்கும் தினமும் சுமார் 12 மணிநேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிக்கிறது. சூரியன் காட்சியளிப்பதைப் போல சந்திரனும் ஒவ்வொரு நாளும் ஒரே சீராக சுமார் 12 மணி நேரங்கள் எவ்வித வடிவ மாறுதல்களுமின்றி காட்சியளிப்பதில்லை. அவ்வாறு காட்சியளித்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களை அவரவர் வக்தை வைத்து முடிவு செய்வதைப் போல நோன்பையும் முடிவு செய்யலாம் என்ற வாதத்தில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சூரியக்கிரகணம் ஏற்படுவதற்கு சந்திரன் முக்கியப் பங்காற்றுகிறது என்பதால் சூரியக் கிரகணமும் சந்திரனை அடிப்படையாக்க கொண்டதுதான்.
இன்னும் 24 மணி நேரங்கொண்ட வெள்ளிக்கிழமை என்ற ஒருநாளுக்குள் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றி முடிக்கிறோம். அதைப் போல 24 மணிநேரம் கொண்ட ஒரே நாளில் பெருநாளையும், ஒரே நாளில் நோன்பையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு சந்திர நாட்காட்டியின் மூலமாக நாம் தீர்வைச் சொல்லி இருக்கிறோம். இவ்வாறு தீர்வை நாம் சொல்லி இருக்கையில், அமெரிக்காவில் முஸ்லிம்கள் லுஹர் தொழுதால் நீங்களும் லுஹர் தொழுவீர்களா? இன்னும் சவுதிஅரேபியா தொலைக்காட்சியில் நோன்பு நோற்கும் காட்சி ஒளிபரப்பாகும் வேளையில்தான் நீங்களும் நோன்பை திறப்பீர்களோ? என்று இவர் எழுப்பியுள்ள கேள்விகளின் தரத்தை சற்று நிதானமாக சிந்திக்க வேண்டுகிறோம்.
சூரியனின் அம்சங்களைப் போலவா சந்திரனின் அம்சங்கள் இருக்கின்றன? பிறந்த தலைப் பிறையானது உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் 12 மணி நேரங்கள் சூரியனைப் போல காட்சியளித்துக் கொண்டேதான் கடந்து செல்கிறதா? முதல் நாளின் சூரியனைப் போலத்தான், முதல்நாளின் தலைப் பிறையும் நம்மிடையே உருண்டோடி வரும் என்று நினைத்துக் கொண்டதால்தான் மேற்கண்ட கேள்விகளும், முன்னர் கூறியுள்ள பல்வேறு பிறை நிலைப்பாடுகளும் எழுந்துள்ளன. மேற்படி அறிஞர் அவர்கள் இவற்றை அறிந்து கொள்ளாதது ஏனோ?.
சூரியனையும், சந்திரனையும் நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று நாம் சுயமாகச் சொல்லவில்லை. மாறாக சூரியனை வைத்து நேரத்தையும், சந்திரனை மையமாக வைத்து காலத்தையும் கணக்கிட வேண்டும் என்பது வல்ல அல்லாஹ்வின் கட்டளை என்பதாலே இரண்டையுமே கணக்கிடத்தான் வேண்டும் என்கிறோம். அதே நேரத்தில் இவ்விரண்டு கோள்களின் தன்மைகளும், இயற்கை குணங்களும் வௌ;வேறானவை, பெரும் வித்தியாசங்கள் கொண்டவை என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம்.
எனவே உலக மக்கள் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளுக்குள் அமைந்த கடமையான தொழுகைகளை அவரவர்கள் தத்தமது 'வக்தில்' தொழுகின்றனர். அதேபோல பிறையின் படித்தரங்களால் அமையப்பெற்ற மாதத்தின் துவக்கத்தையும் அவரவர்களே தத்தமது பகதியில் முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் வைப்பது மிகமிக பிழையானதாகும் என்பதை அறிஞர் அவர்கள் விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு புறிந்து கொள்ள வேண்டுகிறோம்.
4.அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்கலாமா?
பிறையானது மனிதர்களுக்கு அந்தந்தக் கிழமைகளுக்கான தேதிகளைக் காட்டுவதேயன்றி, கிரகணத் தொழுகையின் வக்தோடு அதை முடிச்சு போடுவது அறிவுடைமையாகாது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க, நமக்கு கிரகணம் ஏற்படாத வேளையில் மற்ற பகுதியில் தோன்றும் கிரகணத்திற்காக நீங்கள் தொழுவீர்களா என்று மேற்படி அறிஞர் கேட்டுள்ளார். நிச்சயமாக நாம் அவ்வாறு தொழ மாட்டோம், தொழத் தேவையில்லை என்பதே அதற்கான பதிலாகும்.
உதாரணமாக நாம் லுஹர் தொழுகையை நிறைவேற்றுகிறோம் என்றால் அதற்காக சூரியனால் ஏற்படும் நிழலைக் கணக்கிட்டு அது லுஹர் நேரம்தானா என்பதை அறிந்து லுஹர் தொழுவதைப் போல, நமக்குக் கிரகணம் ஏற்படுவதை கவனித்து அது எற்படும் பட்சத்தில்தான் நாம் தொழ வேண்டும்.
தொழுகை என்ற வணக்கம் அவரவரின் நேரத்தை பொறுத்ததே என்பதையும் மற்ற தொழுகைகளோடு இந்தக் கிரகணத் தொழுகை என்பது எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் முன்னர் கண்டோம். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கிரகணத் தொழுகையானது ஒரு கிழமையை மையமாக வைத்தோ, அல்லது ஒரு இடத்தை மையமாக வைத்தோ தொழும் தொழுகை அல்ல.
புரியும் படி சொன்னால், அமெரிக்கசமோவா (American Samoa)மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளைப் பிரிக்கும் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், ஃபிஜி நாட்டு மக்கள் வெள்ளிக் கிழமையிலும் இருப்பர். இந்த வேளையில் சர்வதேசத் தேதிக் கோட்டுப் பகுதியில் நடைபெறும் அந்த கிரகணத்தை இரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் வௌ;வேறு கிழமைகளில் பார்க்க நேரிடும். கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் போதனைபடி இரு நாட்டு மக்களுமே கிரகணத் தொழுகையைத் தொழலாம். இவ்வாறு ஃபர்ளான கடமையில்லாத இக்கிரகணத் தொழுகையை தொழுவதற்குத் தவறினால் அவர்கள் மீது குற்றமில்லை. இதுதான் கிரகணத் தொழுகையின் இலகுவான சட்டமாகும்.
குறிப்பாக ஃபிஜியைவிட சுமார் 23 மணி நேரங்கள் பின் தங்கியிருக்கும் அதே அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையிலும், அதே பிஜி நாட்டு மக்கள் வெள்ளிக்கிழமையிலும் இருப்பதை அறிந்தோம். அவ்விரு நாட்டு மக்களும் நண்பகலில் ஒரே சூரியனுக்குக் கீழ் இருந்தாலும் அமெரிக்கசமோவா நாட்டு மக்கள் வியாழக்கிழமையின் நான்கு ரத்அத்துக்கள் கொண்ட லுஹர் தொழுகையைத் தொழவேண்டும், ஃபிஜி தீவின் மக்கள் வெள்ளிக்கிழமையின் இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையைத் தொழ வேண்டும். இவ்வாறு விதியாக்கப்பட்ட ஃபர்ளான கடமையான ஐங்காலத் தொழுகையைக் குறித்த நேரத்தில் தொழுவதற்குத் தவறினால் குற்றமாகும், தண்டனைக்கு உரியதுமாகும். இதுதான் கடமையான தொழுகையின் சட்டமாகும்.
பின்னர் 23 மணிநேரங்கள் கழித்து அமெரிக்கசமோவா நாட்டு மக்களுக்கு வெள்ளிக் கிழமையுடைய ஜூம்ஆவின் வக்து வரும் வேளையில், அவர்களும் ஃபிஜி நாட்டு மக்கள் தொழுததைப் போல இரண்டு ரத்அத்துக்கள் கொண்ட ஜூம்ஆ தொழுகையை அவர்களும் தொழுவார்கள். அந்த நேரத்தில் ஃபிஜி நாட்டு மக்களோ சனிக்கிழமையின் லுஹர் தொழுகையைத் தொழுது கொண்டிருப்பார்கள். இவ்வாறு கிரகணத் தொழுகையின் சட்டங்கள் பர்ளான தொழுகையோடுகூட ஒப்பிடும்படியாக இல்லை.
ஆக இந்தக் கிரகணத் தொழுகையை அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழ வேண்டும் என்பதை வைத்துக் கொண்டு, அவரவர்கள் பிறையை பார்த்து நோன்பை நோற்கட்டும் என்று வாதம் வைப்பது வழிகேட்டில்தான் கொண்டு சேர்க்கும். இப்படி கேள்வி கேட்டு குழப்பி விட்டால் அவற்றை தெளிவுபடுத்தி மக்களுக்கு விளக்கிட ஹிஜ்ரி கமிட்டியினருக்கு சிரமம் ஏற்படலாம் என்றெண்ணி அறிஞர் பெருமகனார்(!) இதுபோன்ற வறட்டு வாதங்களை நம்மை நோக்கி அள்ளி வீசுகிறாரா? – யாமறியோம்.
எனவே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிரகணம் ஏற்பட்டால் அந்த மக்கள் கிரகணத் தொழுகை தொழுவதைப் போல, அவரவர்கள் பிறையையும் அவரவர்கள் பகுதியில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அதற்கு அடுத்தநாள் நோன்பைத் துவங்கலாம் என்று வாதிப்பது மிகவும் தவறானதாகும்.
இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் கிரகணம் நடைபெறும் போது அப்பகுதியில் இரண்டு வௌ;வேறு கிழமைகளால் பிரிந்து இருக்கும் நாட்டவர்கள் கிரகணத்தைக் கவனிக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அப்போது அவர்கள் அனைவரும் கிரகணத் தொழுகைiயை தொழலாம் என்று நாம் கூறுகிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்துக் கொண்டு சங்கம தினத்தில்தான் சூரியக்கிரகணம் ஏற்படுகிறது எனவே புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் என்று புரிந்து கொள்ளலாமா? என்ற ஒரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். அதாவது இருவேறு கிழமைகள் கொண்ட அந்தப் பகுதியினர் கிரகணத் தொழகையை ஒரே நேரத்தில் தொழலாம் என்பதால் புவிமைய சங்கம நாள் என்பதும் அவர்களுக்கு இருவேறு தினங்களாகுமா? என்ற ஐயமே இது.
அதுபோல பௌர்ணமி நாளில்தான் சந்திரக் கிரகணம் ஏற்படும். இருகிழமைகள் இருந்து கொண்டே இருக்கும் உலகத் தேதிக்கோட்டுப் பகுதியில் இந்த சந்திரக் கிரகணம் ஏற்பட்டு அவ்விரு நாட்டவரும் ஒரே நேரத்தில் சந்திரக் கிரகணத்தை பார்க்கவும் நேரிடும். அப்போது சந்திரக் கிரகணத் தொழகையையும் அந்தப் பகுதியினர் ஒரே நேரத்தில் தொழலாம். அப்படித் தொழுவதால் பௌர்ணமி தினம் அவர்களுக்கு இரண்டு நாட்களில் வரும் என முடிவு செய்யலாமா? என்பன போன்ற கேள்விகளும் எழலாம். இவற்றிற்கான விடைகளையும் தெளிவாக விளங்கிடக் கடமைப்பட்டுள்ளோம்.
இரண்டு வௌ;வேறு கிழமைகளைக் கொண்ட உலகத் தேதிக் கோட்டுப் பகுதிகளில் அருகருகே வசிக்கும் அந்நாட்டு மக்களுக்குத்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்படும். இந்த இடம் தவிர்த்து பூமியில் மிகப் பெரும்பான்மையாக மக்கள் வசிக்கும் வேறு எந்த நாடுகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இரண்டு வௌ;வேறு கிழமைகளில் கிரகணத் தொழுகை தொழும் வாய்ப்புகள் ஏற்படுவதே இல்லை. இது முதலாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
இது உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இருவேறு கிழமைகளிலுள்ள நாடுகளில் கிரகணங்கள் ஏற்பட்டு, அக்கிரகணத்தை அவ்விரு நாட்டு மக்களும் ஒரே நேரத்தில் பார்க்கும்போது மட்டும் ஏற்படும் ஒரு விஷயமாகும். இது இரண்டாவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
மேலும் அங்கு இருவேறு கிழமைகளிலுள்ள மக்கள் பார்க்கும் அளவிற்கு கிரகணங்கள் அடிக்கடி ஏற்படுவதுமில்லை. எனவே பூமியிலுள்ள பிற நாட்டு மக்கள் இதுபற்றி எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. இது மூன்றாவது விஷயமாகும்.
உலகத் தேதிக் கோட்டுப் பகுதியின் இருவேறு கிழமைகளிலுள்ள பகுதிகளில் அருகருகே வசிக்கும் நாட்டு மக்கள்கூட இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் சுன்னத்தான கிரகணத் தொழுகையைப் பொருத்தவரை குறிப்பிட்ட ஒரு கிழமைக்குள்ளாகவோ, அல்லது குறிப்பிட்ட ஒரு எல்கையை மையமாக வைத்தோ கிரகணத் தொழுகையை தொழும்படி நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாக கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்பதே நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும் என்பதை முன்னரே அறிந்தோம்.
கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல. நபி (ஸல்) அவர்கள் கிரகணம் நடைபெரும் கிழமையை மையப்படுத்தியோ அல்லது கிரகணம் நடைபெறும் இடத்தை மையப்படுத்தியோ கிரகணத் தொழுகை தொழும் படி கட்டளையிட்டிருந்தால் நாமும் அவ்வாறுதான் தொழவேண்டும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் நாம் கிரகணத்தைப் கவனிக்கும் போது தொழுது கொள்ளுங்கள் என்றே கூறியுள்ளார்கள். இது முக்கியமாக கவனிக்க வேண்டிய நான்காவது அம்சமாகும்.
இரண்டு கிழமைகள் அருகருகே பிரியும் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் வியாழக்கிழமையின் லுஹர் தொழுகையையும் மற்றும் ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும் தொழுவதை சற்று முன்னர் படித்தோம். அவ்விரு நாட்டவரும் ஒரே சூரியனை ஒரே நேரத்தில் காண்பதால் தங்கள் கடமையான தொழுகைகளை மாற்றித் தொழுவதில்லை. காரணம் நேரம் குறிக்கப்பட்டுவிட்ட கடமையான தொழுகைகளில் ஒன்றான ஜூம்ஆ தொழுகை என்பதை வெள்ளிக்கிழமை என்ற ஜூம்ஆ நாளுக்குள்தான் தொழ வேண்டும் என்பதே நிபந்தனை. இதுபோன்ற நிபந்தனை சூரியக் கிரகணத் தொழுகைக்கோ, சந்திரக் கிரகணத் தொழுகைக்கோ இல்லை.
இதை இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியக் கிரகணம் நடைபெற்று மேற்படி இருநாட்டு மக்களும் அந்த கிரகணத்தின் காட்சியை பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் வியாழக் கிழமையின் லுஹர் தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்களோ வெள்ளிக்கிழமையின் ஜூம்ஆ தொழுகையையும், சூரியக் கிரகணத் தொழகையையும் தொழுவார்கள். இவ்விரு நாட்டு மக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையைத் தொழுவதை வைத்து இவ்விரு நாட்டு மக்களுக்கும் ஒரே கிழமைக்கு உரியவர்கள் என்று யாரும் கூறிவிட முடியாது.
அதுபோல அமெரிக்கசமோவா மக்கள் வியாழக் கிழமை இஷாவிலும், ஃபிஜி (Fiji) தீவுகளின் மக்கள் வெள்ளிக் கிழமையின் இஷாவிலும் இருக்கும்போது சந்திரக் கிரகணத்தை பார்க்க நேரிடலாம். அவ்வாறு பார்க்க நேரிட்டால் அவ்விரு நாட்டவரும் அந்தந்த கிழமைகளின் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டு கிரகணத் தொழுகையையும் தொழுவார்கள். அப்படி கிரகணத் தொழுகையை தொழுவதை வைத்துக் கொண்டு அவ்விரு நாட்டு மக்களும் ஒரே கிழமையில் உள்ளார்கள் என்று யாரும் கருதிட மாட்டோம்.
மேலும் இவ்விரு நாட்டுமக்களும் ஒரு சூரியக்கிரகணத் தொழுகையை வியாழன், வெள்ளி என்ற இரு கிழமைகளில் தொழுவதை வைத்துக் கொண்டு இரண்டு கிழமைகளில் சூரியக் கிரகணம் நடைபெறுகின்றது என்றும் கூற முடியாது. காரணம் சூரியக் கிரகணம் என்ற அந்த நிகழ்வின் துவக்கம் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமை என்ற அந்த இரு கிழமைகளில் ஏதேனும் ஒரு கிழமையில் தான் இருக்கும்.
இன்னும் வெள்ளிக் கிழமை ஏற்படும் கிரகணத்தை வியாழக் கிழமையிலுள்ள அமெரிக்கசமோவா (American Samoa) மக்கள் இடமாற்றத் தோற்றப் பிழையாகத்தான் (Parallax Error) வியாழன் அன்று காண்கிறார்கள். இதுதான் உண்மையாகும். எனினும் கிரகணத்தின் காட்சியை நீங்கள் கவனிக்கும்போது தொழுது கொள்ளுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்படி அவர் தொழுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சூரியக்கிரகணம் மாதத்தின் இறுதிநாளான புவிமைய சங்கம தினத்தில்தான் ஏற்படும் என்பதை அறிந்துள்ளோம். சூரியக் கிரகணம் நடைபெறும் போது இரண்டு கிழமைகளில் இருக்கும் நாட்டவர்களும் தொழலாம் என்கிறோம். இப்படி நாம் கூறுவதை வைத்து புவிமைய சங்கமமும் இரண்டு நாட்கள் ஏற்படுமா? என்று கேட்பது அடிப்படையிலேயே தவறான கேள்வியாகும். காரணம்
• புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) என்பது பூமியிலுள்ள குறிப்பிட்ட கிழமைக்குள், ஒரு குறிப்பிட்ட பகுதியை மையமாகக் கொண்ட ஒரு நிகழ்வாகும். சூரியக் கிரகணம் அப்படி அல்ல.
• இந்த சங்கம நிகழ்வு என்பது சில நொடிப் பொழுதுகள் நடைபெறும் நிகழ்வாகும். மாறாக சூரியக் கிரகணத்தைப் போல மணிக்கணக்கில் நிகழும் நிகழ்வல்ல.
• புவிமைய சங்கமம் என்பது ஒவ்வொரு மாத இறுதியிலும் தவறாமல் நடைபெறும் ஒரு நிகழ்வாகும். கிரகணங்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடைபெறுவதில்லை.
குறிப்பாக இந்த புவிமைய சங்கம தினத்தை அமாவாசை என்று பிற மதத்தினர் பொதுவாக அழைக்கின்றனர். பிற மதத்தவர்கள் தங்களின் மத வழிபாடுகளை குறிப்பிட்ட அந்த அமாவாசை தினத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட (அதாவது இரண்டு நாட்கள்கூட) அமாவாசை தினங்களாகக் கருதி நடைமுறைப் படுத்துகின்றனர். ஆனால் நாம் குறிப்பிடும் இந்த புவிமைய சங்கமம் என்பது சந்திர மாதத்தின் இறுதி நாளான 'தனித்த ஒருநாளில்' – 'ஒரு கிழமையில்' -'ஒரு தேதியில் மட்டுமே நடைபெறும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மை. புவிமைய சங்கம நாள் என்பது முழுமையான ஒருநாள் மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் அல்ல. எனவேதான் புவிமைய சங்கம நாளை அமாவாசை தினம் என்றுகூட அழைப்பதை நாம் பெரும்பாலும் தவிர்த்து வருகிறோம்.
எனவே மேற்கூறிய விளக்கங்களை திறந்த மனதோடு உள்வாங்கிட வேண்டுகிறோம். உலகத்தேதிக் கோட்டுப் பகுதியில் இரு கிழமைகளில் கிரகணத் தொழுகை நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இருப்பினும் இது வழக்கமாக நடைபெறும் ஒரு சம்பவம் அல்ல. காரணம் அனைத்து கிரகணங்களும் அவ்விடத்தில் நடைபெறுவதில்லை. எனவே மேற்படி கிரகணங்களை மையப்படுத்தி இரண்டு தினங்களில் சங்கமநாள் என்றோ, பௌர்ணமி தினம் இரண்டு நாட்களில் வரலாம் என்றோ முடிவு செய்வது தவறானதாகும்.
கடமையான தொழுகைகள், நோன்புப் பொருநாள் தொழுகை, ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை, நோன்பு நோற்பது, ஹஜ்ஜூவுடைய கிரியைகளைச் செய்வது போன்றவை குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட வக்திற்குள் செய்து முடிக்க வேண்டிய கடமைகளாகும். ஆனால் சுன்னத்தான கிரகணத் தொழுகை என்பது அப்படி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறோம். நாம் கிரகணத்தை எப்போது கவனிக்கின்றோமோ அப்போது தொழ வேண்டிய ஒரு சுன்னத்தான தொழுகையாகும். இதை புரிந்து கொண்டால் எந்தக் குழப்பங்களும் வராது.
5.கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிடுவது தவறானதே!
கிரகணத் தொழுகையை மையப்படுத்தி நோன்பு நோற்பதை ஒப்பிட்டுக் கூறவியலாது. அதுபோல இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து பிறைகளைக் கவனித்து மாதங்களைத் துவங்கும் ஒரு விஷயத்தோடும் ஒப்பிட்டுக்கூற முடியாது. இவற்றை அடுக்கடுக்கான உதாரணங்களை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.
1. கிரகணம் என்பதே உலகின் சில பகுதிகளில், குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டுமே தெரியும் நிகழ்வாகும். கிரகணமானது உலகில் ஒரு நாட்டில் துவங்கி, பின்னர் அனைத்து நாடுகளையும் கடந்து, அது ஆரம்பித்த நாட்டிற்கே திரும்பிச் சென்று முடியாது, இதுவே அறிவியலின் நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை உணர்ந்துதான் இந்தக் கேள்வியை தைரியமாக அறிஞர் எழுப்பியுள்ளார். இப்படி கேள்வி எழுப்பியதிலிருந்தே கிரகணம் என்ற அந்த நிகழ்வும், 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு கிழமைக்குள் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடும் ஒன்றில்லை என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
2. இன்னும் ஒரு வருடத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் எப்போதாவது நடைபெறுவதுதான் இந்தக் கிரகணத் தொழுகை. இக்கிரகணத் தொழுகை சுன்னத்தான ஒரு அமல்தான் என்பதைத் தெரிந்த நிலையிலும், அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு நோற்றலோடு ஒப்பிட்டு அறிஞர் வாதம் புரிந்துள்ளதை என்னவென்று சொல்வது?.
3. இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து அவரவர்கள் ரமழானைத் துவங்க அவரவர்கள் பகுதிகளில் பிறையைப் பார்த்து முடிவு செய்யட்டும் என்ற வாதம், அறிஞரின் நிலைப்பாட்டின் படியும் தவறான வாதமல்லவா?. உதாரணமாக தமிழகத்தில் சூரிய சந்திரக் கிரகணம் தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். முதலில் அந்தக் கிரகணம் புறக்கண்களுக்குத் தெரிய ஆரம்பித்த பகுதியிலிருந்து துவங்கும். பிறகு தமிழகம் முழுவதும் அது காட்சியளிக்கும். பின்னர் அது முடியும் வரையுள்ள பல்வேறு நாடுகளிலுள்ள பலகோடி மக்களையும் சென்றடைந்து முடியும். கிரகணம் தெரிந்த அனைத்து நாட்டு முஸ்லிம்களும் கிரகணத் தொழுகையை அவர்களுக்கு தெரிகின்ற அந்தந்த நேரத்தில்தான் தொழுவார்கள்.
இப்படியிருக்க இந்தக் கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதிகளில் பிறை பார்க்கும் நிலைப்பாட்டை எவ்வாறு நிலைநாட்ட முடியும்? தத்தமதுபகுதி பிறை நிலைப்பாடு என்பதே கேரளாவில் பார்க்கும் பிறை தமிழகத்தை கட்டுப்படுத்தாது, தமிழகத்தில் பார்க்கப்பட்ட பிறை இலங்கை முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது என்பதுதானே? தமிழகத்திற்குள்ளேயே ஒரு ஊரில் பார்க்கப்படும் பிறை மற்ற ஊர்களுக்குப் பொருந்தாது என்று பலவாதங்கள் புரிந்துவிட்டு தமிழக எல்லை என்ற அளவுக்கு சமீபத்தில்தானே வந்துள்ளார்கள்.
4. ஆனால் சூரிய,சந்திரக் கிரகணங்கள் அப்படி அல்லவே? தமிழகத்தில் கிரகணம் நடைபெறுகிறது என்றால் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும், அல்லது சில ஊர்களில் மட்டும் என்ற பாகுபாடு வைத்தா கிரகணம் ஏற்படுகிறது? அல்லது இலங்கையில் கிரகணம் தெரிந்து, தமிழ்நாட்டில் தெரியாமல் மறைந்து, பின்னர் கேரளாவில் தெரிந்து, இப்படியா கிரகணம் நடக்கிறது? இல்லையே. பிறகு கிரகணத் தொழுகையை வைத்து தத்தமது பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாடுகளை எவ்வாறு நிலைநாட்டிட முடியும்?
5. இலங்கையில் ரமழான் முதல் நோன்பாக இருக்கும், அதேநாளில் தமிழகத்தில் ஷஃஅபான் முப்பதாகவும், கேரளாவில் ரமழான் முதல் நோன்பாகவும் இருக்கலாம் என்பதே தத்தம்பகுதி பிறை அல்லது தமிழகப்பிறை நிலைப்பாட்டின் மையக் கருத்தாகும். கிரகணத் தொழுகையை வைத்து கேள்வி எழுப்பியது மாபெரும் தவறு என்பதை கிரகணம் தெரியும் பாதையின் அளவை அறிந்து கூடவா புரிந்து கொள்ள முடியவில்லை?
இதில் ஒரு நகைச்சுவை என்ன தெரியுமா? அமெரிக்காவில் கிரகணம் ஏற்பட்டிருக்கும் நேரத்தில் நாம் பகலில் சூரியனைப் பார்த்துக் கொண்டு இருப்போம். பகலில் சந்திர கிரகணத் தொழுகை தொழுதால் பைத்தியக்காரத்தனம் என்றுதான் அதைக் கூற வேண்டும் என்று வாதம் வைக்கிறார். இப்படி ஒரு வாதத்தை வைத்தவர் இறுதியில் அவராகவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று அதே பிறை ஆய்வு புத்தகத்தில் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார். சத்தியத்தை இப்படித்தான் அல்லாஹ் நிலைநாட்டுவான் போலும்.
மேலும், 'ஃபஇன்கும்ம அலைக்கும்' என்பதற்கு உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்றும் பிறை வானில் இருக்கிறதா இல்லையா என்று அலட்டிக் கொள்ள வேண்டாம். உண்மையில் வானில் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால் கூட அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்றும் மேற்படி அறிஞர் அவர்கள் சர்வ சாதாரணமாக எழுதி புத்தகமும் வெளியிட்டுள்ளார்.
அவருடைய வாதப்படியே நாமும் கேட்கிறோம், தமிழகத்திலோ அல்லது தத்தமது பகுதியிலோ ஒருநாளில் முழு சந்திரக்கிரணம் (Total Lunar Eclipse) ஏற்பட்டு அது முடியும் வரை அதைப் புறக்கண்ணால் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு (ஃபஇன்கும்ம அலைக்கும் ஆக உள்ளது, அதாவது அவருடைய மொழியாக்கத்தின்படி) மேகமூட்டமாக இருக்கும் நிலை ஏற்பட்டால், இப்போது தவ்ஹீது(!) அறிஞர் கிரகணத் தொழுகையை தொழுவாரா மாட்டாரா? இக்கேள்விக்கு என்ன ஃபத்வா கொடுக்கப் போகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்களே இனி மேற்படி அறிஞர் கிரகணத்தைப் பற்றி பேசி உங்களை மயக்கினால், சந்திரக்கிரகணம் நாளில் மேகமூட்டமாக ஆகி தமிழகம் முழுவதும் சந்திரனை புறக்கண்ணால் பார்க்க முடியாமல் போய் விட்டால் என்ன செய்வது? கிரகணத் தொழுகையை தொழலாமா? அல்லது வேண்டாமா? என்று நீங்கள் அவரிடம் எதிர் கேள்வி எழுப்புங்கள்.
மேலும் சந்திரக்கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியுள்ளார்.
முழுசந்திரக் கிரகணம் ஏற்படும் போது உலகின் பாதி பகுதியில் சுமார் 50 சதவிகித மக்கள் வரை சந்திரக் கிரகணத்தை புறக்கண்களால் பார்க்க முடியும் என்பதை அவரும் அறிந்திருப்பார். இப்போது அறிஞர் கூறும் கிரகண நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகிலுள்ள 50 சதவீத மக்களும் அதே சந்திரனை அடிப்படையாக வைத்து மாதத்தை ஆரம்பிக்கலாம், அதன் அடிப்படையிலேயே உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்று கூறத் தயாரா? என்று அறிஞர் அவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம். தத்தமது பகுதி (தமிழக அளவு) பிறைக் கருத்தே சரியானது என்று பிடிவாதமாக இருக்கும் அவர், தனது மனசாட்சியைத் தொட்டு, பிதற்றாமல் உண்மையை உரைப்பாரா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்?
மேலும் சந்திரக் கிரகணத்தைப் பற்றி தெளிவாக சிந்தித்தால் உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம்தான் நிரூபணமாகிறது. மாறாக அது அடிபட்டுப் போகவில்லை. அதே நேரத்தில் அதே சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே தத்தமது பகுதி (தமிழக அளவு) பிறையே சரியானது என்ற தவறான வாதம் அடிபட்டு விழுந்து இறந்து விடுகிறது.
சந்திரக் கிரகணம் பற்றி சிந்தித்தாலே உலகம் முழுவதும் ஒரே பிறை என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்று வாதம் எழுப்பியவர், குறைந்த பட்சம் அதே சந்திரக் கிரகணத்தை அடிப்படையாக வைத்து உலகிலுள்ள 50 சதவீத மக்களும் ஒரே நாளில் நோன்பையும் பிடிக்கலாம் என்றும் நிச்சயமாக ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அப்படி இவர் ஒப்புக் கொண்டாலும் நாம் ஆச்சரியப் படுவதற்கில்லை.
காரணம் தத்தமது பகுதி பிறையிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று தற்போது தமிழகப் பிறையில் நின்று கொண்டிருக்கும் அவர், சர்வதேசப் பிறை நிலைப்பாட்டை நோக்கிச் செல்கிறார் என்று நாமும் புரிந்து கொள்வோம். இறுதியில் பிறை குழப்பத்திற்குத் பிறைகளின் துல்லிய கணக்கீட்டின் அடிப்படையில் அமைந்த சந்திர நாட்காட்டியின் தீர்வை நோக்கி பயணித்தே ஆக வேண்டி கட்டாயத்திற்கு அவரையும், அவரது இயக்கத்தையும் அப்பயணம் கொண்டு வந்து சேர்க்கும் - இன்ஷா அல்லாஹ்.
கிரகணத் தொழுகை சம்பந்தமாக அறிஞர் அவர்கள் மிகப் பெரும் ஆய்வுகளைச் செய்துள்ளதைப் போல பேசிய வீடியோ பதிவுகள் நம்மிடம் உள்ளன. அதில் சந்திரக் கிரகணத் தொழுகையைப் பற்றி பேசும் போது, 'நபி (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி நிமிர்ந்து சந்திரக் கிரகணத்தைப் பார்த்துப் பார்த்து கிரகணம் முடியும் வரை தொழுததாக' அறிஞர் குறிப்பிடுகிறார். மேலும் 'மற்ற தொழுகையின் போது வானத்தைப் பார்க்கக் கூடாது, ஆனால் சந்திரக் கிரகணத் தொழுகையின் போது கிரகணம் முடிந்து விட்டதா என்பதை உறுதிபடுத்த தொழுகையிலேயே வானத்தைப் பார்க்கலாம்' என்பதற்கு இது ஆதாரம் என்றும் பேசியுள்ளார்.
பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பது அவரது நிலைப்பாடு. எனினும் கிரகணத் தொழுகை விஷயத்தை ஆணித்தரமாக வாதிக்கிறார். எனவே கிரகணத் தொழுகை விஷயத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் அறிஞரிடம்(!) பதில் உண்டு என்றே தெரிகிறது. ஆகையால் அவருடைய கிரகணத் தொழுகை ஆய்வை மேலும் மெருகூட்டுவதற்காக கீழ்க்காணும் கேள்விகளை அவரின் ஆய்வுக்காக வைக்கிறோம். அறிஞர் அவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு தனது கிரகணத் தொழுகை ஆராய்ச்சியை மீளாய்வு செய்வார் என்றும் எதிர்பார்க்கிறோம்.
1. நபி (ஸல்) அவர்கள் சந்திரக் கிரகணத் தொழுகையைத் தொழுதார்கள் என்றும், அப்போது சந்திரக் கிரகணம் முடிந்து விட்டதா என உறுதி செய்வதற்கு வானத்தைப் பார்த்தார்கள் என்பதையும் தெரிவிக்கும் ஸஹீஹான ஹதீஸ் எந்தக் கிரந்தத்தில் உள்ளது? குறிப்பு : இங்கு ஸஹீஹான ஹதீஸைத் தாருங்கள் என்று கேட்டிருக்கிறோம்.
2. கிரகணத் தொழுகை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களில்'...ஃபஇதா ரஅய்த்து மூஹூமா' என்று வரும் சொற்றொடர்கள் அவ்விரண்டிற்கும் கிரகணம் ஏற்படுவதை கவனித்தால் என்று சூரியனையும், சந்திரனையும் தனித்தனியாக குறித்து வருகிறதா? அல்லது கிரகணம் என்ற நிகழ்வில் சூரியனும், சந்திரனும் ஒருசேர பங்கு பெற்றிருக்க வேண்டும் என்ற பொருளில் அமைந்துள்ளதா?
3. நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை தொழுததாக வரும் ஸஹீஹான ஹதீஸ்களில் எந்தந்த நபிமொழிகள் சூரியக் கிரகணத் தொழுகையை குறிப்பிடுகின்றன, எந்தெந்த ரிவாயத்துகள் சந்திக்கிரகணத் தொழுகையைக் குறித்து வந்துள்ளன. அவற்றை அறிஞர் மக்களுக்கு வேறுபடுத்தி பிரித்து விளக்க வேண்டும்.
பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன என்பது அவரது பிறை நிலைப்பாடு. பிறை சம்பந்தமான ஹதீஸ்கள் ஒருங்கிணைந்து இல்லை என்ற அவரின் கருத்து அவை பிரிந்து பிரிந்து தனித்தனியாகத் உள்ளது என அவர் புரிந்திருப்பதை உறுதி செய்கிறது. எனவே அவ்வாறு பிரிந்து கிடக்கும் அத்தகைய ஹதீஸ்களில் சந்திரக் கிரகணத் தொழுகை பற்றிய ஹதீஸ்களை வேறுபடுத்தி பிரிப்பது மேற்படி 'தவ்ஹீது அறிஞருக்கு' மிக இலகுவானதுதான். பிரித்து மேய்வதிலும், பிரித்து பிரித்து பிரிவினையை உண்டாக்குவதிலும் 'தவ்ஹீது அண்ணனை' யார் விஞ்ச இயலும்?
அல்லது சூரியக்கிரகணம் மற்றும் சந்திரக்கிரகணம் தொடர்பான ஹதீஸ்கள் என்று தனித்தனியாக பிரித்து மக்களுக்கு விளக்கிட 'அண்ணனுக்கு' இயலவில்லை என்றால் பிறை சம்பந்தமாக வரும் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை, பிரிக்கவும் முடியவில்லை என்று அறிஞர் ஒப்புக் கொள்வதாக அது அமையும். ஆக ஒரு விஷயத்தில் ஹதீஸ்களை ஒருங்கிணைக்கவோ, பிரிக்கவோ இயலாத ஒரு மனிதர் அந்த விஷயத்தில் எத்தகைய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார் என்பதை மக்களே விளங்கிக் கொள்ளுங்கள்.
பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன என்பதும் பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் நான்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும் என்பதும் அவரது நிலைப்பாடு. எனவே நாம் இதுவரை எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளையும் குழப்பம் என்றோ, பதில் சொல்ல முடியாமல் மிச்சியிருக்கும் கேள்வி பட்டியலிலோ சேர்த்து விடாமல் ஆய்வு செய்து அவர் அறிவிப்பார் என்று நம்புகிறோம். ஹிஜ்ரி கமிட்டி கூறும் சத்தியமான பிறை நிலைப்பாட்டிற்கு சான்று பகர அறிஞர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
எனவே கிரகணத் தொழுகையின் சட்டம் கடமையான தொழுகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். அவரவர் 'வக்தில்' தொழுவதைப் போல மாதத்தின் முதல் நாளையும் அவரவர்களே முடிவு செய்ய முடியாது என்பதையும் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். அவரவர்களுக்கு கிரகணம் ஏற்பட்டால் தொழுவதைப் போல அவரவர்கள் பிறையைப் பார்த்து நோன்பை நோற்பது தவறான முடிவாகும். மேலும் கிரகணத் தொழுகையையும், நோன்பு நோற்பதையும் ஒப்பிட்டுக் கூறிடவே இயலாது என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
தவ்ஹீது பெயர் இயக்கத்தின் மேற்படி தலைமை அறிஞர் பிறை தொடர்பாக பல தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிந்துள்ளார். அவருடைய தவறான வாதங்கள் அனைத்திற்கும் தக்க பதில்களை www.mooncalendar.in இணையதளத்தில் வீடியோ பதிவுகளாக வெளியிட்டு வருகிறோம்.
மேற்படி அறிஞர் அவர்களின் தவறான பல பிறை வாதங்களில் ஒருசில...
1. சந்திரன் மேற்கில் உதிக்கிறது. மேற்கு திசையில்தான் சந்திரனை பார்ப்பீர்கள். சந்திரன் (பிறை) மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது.
2. நாம் கண்ணால் பார்ப்பது மூன்றாவது பிறைதான். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது பிறையைத்தான் முதல் பிறை என்று சொல்லியுள்ளார்கள்.
3. பிறை விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. காரணம் பிறை சம்பந்தமான ஹதீஸ்களும், அது சம்பந்தமான சான்றுகளும் ஒருங்கிணைக்க முடியாமல் உள்ளன.
4. லூனார் (Lunar) என்றாலே கிறுக்கு என்று பொருள். பிறை என்றாலே கிறுக்குப் பிடிப்பது போன்றுதான் உள்ளது. எனவே யாராலும் நூறு சதவிகிதம் நிலை நாட்ட முடியாது.
5. தலைப்பிறை சவுதியில் உதிக்கிறது என்றால் சவுதியிலிருந்து பிறை ரிவேஸ்ல வராது. காரணம் அது மேற்கு உதிப்பதால் நம் தலைக்கு நேராக வருவதற்கு 21:30 மணிநேரம் ஆகும்.
6. பிறை பிறந்தால்தான் இரவு ஆரம்பிக்கிறது. இரவில்தான் நாள் ஆரம்பிக்கிறது.
7. முதல் பிறை சிலநேரம் 20 நிமிடம் தெரியும், சில நாளில் 35 நிமிடங்கள் தெரியும், சில வேளை 5 நிமிடங்கள்கூட தெரியும்.
8. இலங்கையில் பிறை பார்க்கப்பட்டதால் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால், பிறை பார்க்கப்பட்ட அந்த நேரத்தில் வேறு நாடுகள் லுஹர் நேரத்தில் இருப்பார்கள். அவர் எப்படி நோன்பு வைப்பார்கள்.
9. நீங்கள் என்று தீர்மானிக்கிறீர்களோ அன்றுதான் நோன்பு, பெருநாள். அதை முடிவு செய்தை நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் தள்ளிவிட்டுட்டு போய்விட்டார்கள்.
10. பிறை சம்பந்தமாக எந்த ஒரு நிலைப்பாட்டிலும் 4 கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மிச்சமிருக்கும். எந்த நிலைப்பாட்டில் குறைந்த கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் இருக்கிறதோ அந்த நிலைப்பாட்டிற்கு சென்றுவிடுவது சிறந்தது.
11. உமர் (ரழி) அவர்களும் ஸஹாபாக்களும் இஸ்லாமிய ஆண்டு கணக்கீட்டை ஹிஜ்ரத்திலிருந்து ஆரம்பித்தது பொருத்தமில்லாதது. நபி (ஸல்) அவர்களின் நுபூவத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
12. சூரியக் (ஆங்கிலக்) காலண்டர் அடிப்படையில் வரும் 365 என்ற வருடக் கணக்குதான் சரியானது. சந்திரக் கணக்கீடு மாதத்தைத்தான் அளவிட முடியும்.
13. கிரிகோரியன் காலண்டர் இது கிருஸ்தவக் காலண்டர் அல்ல இது சூரியக் காலண்டர். ஹிஜ்ரி காலண்டரைவிட ஆங்கிலக்காலண்டர் பின்பற்றுவதற்கு லேசானாது. லேசானாதுதான் மார்க்கம்.
நவ்வூதுபில்லாஹ்! இத்தகைய அடிப்படையற்ற, மடமையான வாதங்களை விட்டும் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தை பாதுகாத்திடப் பிராத்திக்கிறோம்.