16.குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா?



மக்கள் மத்தியில் 'குரைப் ஹதீஸ்' என்று போதிக்கப்பட்டுள்ள 'குரைப் சம்பவம்' நபிமொழி என்ற தரத்தில் அமைந்த ஹதீஸே அல்ல. இது நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமே இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம். 'ஹதீஸ்' – நபிமொழி என்பது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றில் ஏதாவது ஒன்று அதில் இருக்க வேண்டும். அவற்றில் ஒன்றுகூட மேற்படி குரைப் சம்பவத்தில் இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருப்பினும் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' அதாவது இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளை இட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக ஒரு வாசகம் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகத்தை வைத்துதான் இதை ஸஹீஹான ஹதீஸ் என்றும், தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இது பிரதான ஆதாரம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இன்னும் பிறையை புறக்கண்ணால் பார்ப்பதற்கும், பிறை பார்த்த தகவலுக்கும் மேற்படி குரைப் சம்பவத்தை ஆதாரமாகக் கருதுகின்றனர்.

இந்த குரைப் சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்;கள்? என்ற விபரம் இல்லை. என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்;கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம்பெறவில்லை. இவற்றை இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்கத்தின் அடிப்படையாகும். இவை இரண்டையும் தவிர்த்து வேறு எதுவும் மார்க்க அடிப்படை ஆதாரமாகாது. இதுவே தத்தமது பகுதி பிறை நிலைப்பாடு கொண்ட தவ்ஹீது இயக்கத்தினரின் கருத்து. பிறை சம்பந்தமாக நாம் தொடர்ந்து எழுப்பிவரும் அடிப்படையான கேள்விகளுக்கு குர்ஆன் சுன்னாவிலிருந்து அவர்கள் பதிலைக் கூறாமல் நம்மை தூற்றுவது வருந்தத் தக்கதே. இந்நிலையில் இந்த குரைப் சம்பவத்தை ஹதீஸ் என ஒப்புக் கொள்ளாதவர்கள் 'காஃபிர்கள்' (நவ்வூதுபில்லாஹ்) என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

'ஸஹீஹான ஹதீஸ்களாக இருந்தாலும் எங்களின் சிந்தனைக்கு ஒத்துவரவில்லை, அவை குர்ஆனின் கருத்துக்கு முரண்படுகின்றன' - இப்படிகூறி சுமார் 50-க்கும் மேற்பட்ட நபிமொழிகளை அவர்கள்; மறுத்து வருகின்றனர். குரைப் சம்பவம் என்ற இந்த ஒருவிஷயத்தை ஹதீஸ் என ஒப்புக்கொள்ளாதவர்கள் காஃபிர்கள் என்று விமர்சித்தால், சுமார் 50-க்கும் மேற்பட்ட ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கு என்ன பெயர்? சற்று சிந்தியுங்கள்.

குர்ஆன், சுன்னா இந்த இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரமாகும் என்று அழுத்திக் கூறுபவர்கள் பிறை விஷயங்களுக்கு மட்டும் ஸஹாபாக்களின் கூற்றையும், தாபிஈயீன்களின் கூற்றையும் ஆதாரமாகக் காட்டுவது இரட்டை நிலையே ஆகும்.

ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை ஏற்றால்தான் தவறான பிறைக் கொள்கையை பல பலஹீனமான சம்பவங்களை வைத்து விவாதிக்க முடியும். இதை அறிந்தே பிறை விஷயத்தில் ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈயீன்களின் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் இக்குரைப் சம்பவத்தை ஸஹீஹான ஹதீஸ்தான் என்று தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்வதின் நிதர்சனமான, உண்மையான பின்னணியாகும். இதை மூன்றாவதாக கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

மக்களே! தத்தமதுபகுதி பிறை மற்றும் பிறைத் தகவலைப் பெறுவது போன்ற பிறை நிலைப்பாடுகளுக்குப் பலமான ஆதாரமாகக் கருதப்படும் இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையை நீங்கள் தெளிவாக அறிந்திட வேண்டும். இதற்காகத்தான் நாம் இந்த ஆய்வுகளை உளத்தூய்மையோடு சமர்ப்பிக்கிறோம். ஹாகதா அமரனா ரசூல் (ஸல்) – 'இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்;கள்' என்ற வாசகத்தை எப்படி எல்லாம் விளங்க முடியும் என்பதை இந்த ஆய்வின் பிற்பகுதியில் காணலாம்.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஹிஜ்ரி 40-வது ஆண்டு வரை நேர்வழி நின்ற நான்கு கலீஃபாக்கள் ஒருவர் பின் ஒருவராக இஸ்லாமிய கிலாஃபத்தை வழி நடத்தினர். நேர்வழி நின்ற அந்த நான்கு கலீஃபாக்கள் மரணத்திற்கும் பிறகுதான் இந்த குரைப் சம்பவம் நடை பெற்றுள்ளது. தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இந்த குரைப் சம்பவம்தான் பிரதான ஆதாரமா? அல்லது இன்னும் பல ஆதாரங்கள் இருக்கின்றனவா? என்பதை மாற்றுக் கருத்துடையோர் முதலில் தெளிவாக விளக்கிட வேண்டும்.

காரணம் தத்தமது பகுதி பிறைக்கு இந்த குரைப் சம்பவம்தான் தக்க ஆதாரம் என்றால் நபி (ஸல்) அவர்கள் முதல் நபித்தோழர்கள் உட்பட ஹிஜ்ரி 40-வது ஆண்டுவரை வாழ்ந்து மரணித்த அனைத்து முஸ்லிம்களும் தத்தமது பிறை என்ற நிலைபாட்டை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று பொருள்படும். ஹிஜ்ரி நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஒரு சம்பவம்தான் தத்தமது பகுதி பிறை நிலைப்பாட்டிற்கு பிரதான ஆதாரம் என்றால் அதற்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்கும், ஏனைய ஸஹாபாக்களுக்கும் ஆதாரமாக அமைந்தது எது?. அவர்கள் எந்த பிறை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள்?. இக்கேள்விகளுக்கு தத்தமது பகுதி பிறை கருத்துடையோர்தான் விளக்கமளிக்க வேண்டும்.

இக்குரைப் சம்பவம் போல ஹதீஸ் என்னும் தரத்தில் அமையாத ஸஹாபாக்களின் கூற்றுக்கள் அல்லது தாபிஈயீன்களின் கூற்றுக்களை மார்க்க ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளலாமா?. பிறை விஷயத்தில் இப்படி ஒரு புதிய நிலைப்பாட்டை எடுத்து மக்களை அதன் பக்கம் மாற்றுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா இது? என்ற சிந்தனை எழுவது இயற்கையே. எனவே இந்த குரைப் சம்பவத்தின் உண்மை நிலையைத் தெளிவாக புரிந்து கொள்ள இந்த ஆய்வை இறுதிவரை பொறுமையாகப் படித்தறிய வேண்டுகிறோம். நமது விளக்கங்களை கீழ்க்காணும் துணைத் தலைப்புகளில் முறைபடுத்தி விளக்குகிறோம்.

1. குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.
2. குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகளும் குழப்பங்களும்.
3. குரைப் சம்பவம் நமக்கு உணர்த்தும் படிப்பினைகள்.
4. மேற்படி சம்பவத்தில் எழும் கேள்விகள்.


1.குரைப் சம்பவமும், அந்நிகழ்வின் வரலாற்றுக் குறிப்பும்.

حدثنا موسى بن إسماعيل ، حدثنا إسماعيل يعني ابن جعفر ، أخبرني محمد بن أبي حرملة ، أخبرني كريب ، أن أم الفضل ابنة الحارث ، بعثته إلى معاوية ، بالشام ، قال : فقدمت الشام فقضيت حاجتها فاستهل رمضان وأنا بالشام ، فرأينا الهلال ليلة الجمعة ، ثم قدمت المدينة في آخر الشهر ، فسألني ابن عباس ، ثم ذكر الهلال فقال : متى رأيتم الهلال ؟ قلت : رأيته ليلة الجمعة ، قال : أنت رأيته ؟ قلت : نعم ، ورآه الناس ، وصاموا ، وصام معاوية ، قال : لكنا رأيناه ليلة السبت ، فلا نزال نصومه حتى نكمل الثلاثين ، أو نراه ، فقلت : أفلا تكتفي برؤية معاوية وصيامه ، قال : لا ، ' هكذا أمرنا رسول الله صلى الله عليه وسلم ' ழூ. (سنن أبي داود - كتاب الصوم باب إذا رئي الهلال في بلد قبل الآخرين بليلة - حديث : ‏1998‏).

[அபூதாவுத் அவர்கள் கூறுகின்றார்கள், நம்மிடம் மூஸா பின் இஸ்மாயில் அவர்கள் அறிவித்தார்கள், அவர்களிடம் இஸ்மாயில் அதாவது இப்னு ஜாபர் அவர்கள் அறிவித்ததாகவும், அவர்களிடம் முஹம்மத் பின் அபீ ஹுர்மலா அறிவித்ததாக அவரிடம் குரைப் அறிவித்ததாக] ஹாரிஸாவின் மகள் உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் சிரியாவில் இருந்த முஆவியா (ரழி) அவர்களிடம் அவரை அனுப்பி வைத்தார்கள். நான் அங்கே சென்று அவர்கள் தந்த காரியத்தை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமழானை அடைந்தேன். நாங்கள் வெள்ளிக்கிழமையன்று பிறையைக் கவனித்தோம். பின்னர் மாதத்தின் இறுதியில் மதீனாவிற்கு வந்தேன். அப்போது என்னிடம் இப்னு அப்பாஸ் (ரழி) விசாரித்தார்கள். பிறகு பிறையைப் பற்றி நினைவு படுத்தப் பட்டது. நீங்கள் எப்போது பிறையைக் கவனித்தீர்கள்? என்று கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை அதைக் கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையைக் கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதைக் கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள். அப்போது நான், முஆவியா (ரழி) அவர்களுக்குக் காட்சியளித்ததும், அவரின் நோன்பும் உங்களுக்குப் போதாதா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், இல்லை இப்படித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று விடையளித்தார்கள். அறிவித்தவர்: குரைப் (நூல்: அபூதாவுத்)

இதுதான் குரைப் சம்பவம் சம்பந்தமாக அபூதாவுது கிரந்தத்தில் வரும் அறிவிப்பின் நேரடி மொழி பெயர்ப்பாகும். ஹிஜ்ரி ஐம்பதுகளில் நபித்தோழரான முஆவியா (ரழி) அவர்கள் சிரியாவில் கலீஃபாவாக ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள். அவர்களின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பில் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்தார்கள். சங்கைமிக்க அவ்விரு நபித்தோழர்களும் இரண்டு வௌ;வேறு நாட்களில் ரமழான் நோன்பைத் துவங்கியிருந்துள்ளனர் என்ற செய்தி இந்த குரைப் சம்பவத்தின் மூலம் வரலாறுகளில் பதிய வைக்கப்பட்டு விட்டது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஸஹாபிகளான நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமே இது. இருப்பினும் இச்சம்பவம் நடைபெற்ற காலத்தைப் பற்றி அறிந்து கொள்வது இச்சம்பத்தின் உண்மை நிலையை விளக்கும் இந்த ஆய்வுக்கு அவசியமானதாகும்.

ஹிஜ்ரி 11-ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் முதல் கலீஃபாவாக ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.

பின்னர் ஹிஜ்ரி 13-ஆம் ஆண்டில் முதலாவது கலிஃபா அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.

அதன்பின் ஹிஜ்ரி 23-ஆம் ஆண்டில் இரண்டாவது கலிஃபா உமர்பின் கத்தாப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.

பிறகு ஹிஜ்ரி 35-ஆம் ஆண்டில் மூன்றாவது கலிஃபா உதுமான் பின் அஃப்பான் (ரழி) அவர்கள் மரணித்தபின் அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார்கள்.

பின்னர் ஹிஜ்ரி 40-ஆம் ஆண்டில் நான்காவது கலிஃபா அலி பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் மரணித்த பிறகு நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்கள் தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆட்சியின் தலைமைப் பொறுப்பை வகித்தனர்.

முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய பல சதிவேலைகளும், குழப்பங்களும் தலை தூக்கியிருந்த ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்கள் இஸ்லாமிய ஆட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றார்கள்.

நபித்தோழர் முஆவியா (ரழி) அவர்களின் 20 வருட ஆட்சிகாலத்தில் ரமழான் மாதம் சனிக்கிழமை அன்று துவங்கியது ஹிஜ்ரி 42-வது மற்றும் ஹிஜ்ரி 50-வது ஆண்டுகளாகும். இவற்றை துல்லியமாகக் கணக்கிட முடியும்.

இன்னும் ஹிஜ்ரி 42-ஆம் ஆண்டின் காலப்பகுதியில் முஆவியா (ரழி) அவர்கள் தன்னுடைய பொறுப்பில் அமைந்த இஸ்லாமிய ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான முழுமையான பணிகளை செய்துள்ளதை வரலாற்று சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது. அச்சமயம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு கவர்னராக இருந்தார்கள் என்பதற்கு எந்தச் சான்றுகளும் காணக்கிடைக்க வில்லை.

எனவே ஹிஜ்ரி 50-இல் ஸ்திரமடைந்த முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சியின் கீழ் மதீனாவின் கவர்னராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேற்படி ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டின் ரமழான் மாதம் சனிக்கிழைமைதான் துவங்கியுள்ளது என்ற நிலையில், மூஆவியா (ரழி) அவர்களும் மக்களும் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தார்கள் என்று குரைப் கூறுவதை பிறை பற்றிய ஞானமுள்ளவர்கள் ஏற்க முடியாது.

காரணம் ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டு ஷஃஅபானின் இறுதி நாளான (புநழஉநவெசiஉ ஊழதெரnஉவழைn னுயல) புவிமைய சங்கமதினம் வெள்ளிக் கிழமையாகும். புவிமைய சங்கமதினம் என்ற அந்த 'கும்ம'வுடைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்துள்ள நிலையில், அன்றைய தினம் சிரியா, மதீனா உட்பட அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க இயலாது. அப்படி 'கும்ம'வுடைய நாளில் பிறையைப் புறக்கண்களால் பார்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்;லை என்பதே அறிவியலின் துல்லியமான, நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

மேலும் மூஆவியா (ரழி) அவர்களின் 20 வருட ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 58-வது வருடத்தில் மட்டும்தான் ரமழான் மாதம் வெள்ளிக் கிழமையில் துவங்கியது என்பதை அறிய முடிகிறது. அப்படியானால் அந்த வருடத்தின் ஷஃஅபான் மாதத்தின் 'கும்ம'வுடைய நாள் வியாழக் கிழமையாக இருந்துள்ளது. வியாழக்கிழமை அன்று சிரியாவில் பிறை தெரிய வாய்ப்பில்லாத கும்ம உடைய தினமாகும் (Geocentric Conjunction Day – புவிமைய சங்கம நாள்). மேற்படி குரைப் செய்தியில் வியாழக்கிழமை பிறை கண்டதாக சர்ச்சை எழவில்லை என்றாலும் குரைபுடைய சம்பவம் ஹிஜ்ரி 50-ஆம் நடைபெற்றதற்கான அதிகப்படியான சாத்தியக் கூறுகளை அறிவதற்காக ஹிஜ்ரி 58-வது வருடத்தைப் பற்றிக் கூறுகிறோம்.

இன்னும் முஆவியா (ரழி) அவர்களின் தலைமையில் 'கூஃபா', 'பஸரா' பகுதிக்கு ஜியாத் என்பவர் கவர்னராக இருந்தார். அவர் ஹஜ்ரி 58-ஆம் ஆண்டின் காலப்பகுதியில் மரணித்தார். அவரின் மரணித்திற்குப் பிறகு, மூஆவியா (ரழி) அவர்கள் தனது மகன் யஜீதை தனக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முயற்சியில் இறங்கினார்கள். அப்போது அதிகமான ஸஹாபாக்கள் மதீனாவை விட்டும் மக்காவிற்குச் சென்று விட்டனர். பின்னர் ஹிஜ்ரி 60-இல் முஆவியா (ரழி) அவர்கள் மரணித்தும் விட்டார்கள். எனவே ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டுதான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதை அறியமுடிகிறது.

நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்டவர்கள். அவர்கள் குரைபிடம் கேட்டறிந்த பிறைத் தகவலை ஏற்றுப் பின்பற்ற மறுத்து விட்டார்கள். இதைக் கவனத்தில் கொண்டு, குரைப் அவர்கள் சிரியாவில் பிறை பார்த்ததாகச் சொல்லிய நாளில், பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்ததற்கு வாய்ப்புகள் இருந்தனவா என்பதை அலசியுள்ளோம். இச்சம்பவம் எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதைப் பற்றியும் அறிந்து கொண்டோம்.

மேலும் நபி (ஸல்) அவர்களும், நான்கு கலீஃபாக்களும், இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலரும் மரணித்த பிற்காலத்தில்தான் இந்த குரைப் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அக்காலத்தில் முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்த்தோரின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலை தூக்கியிருந்தன. குரைப் சம்பவம் சம்பந்தமாக இந்த ஆய்வின் நோக்கம் வரலாற்று பதிவுகளை நினைவு படுத்துவதல்ல என்றாலும் அவற்றை விளங்கிக் கொள்வதற்காகவே சுருக்கமாக விளக்கியுள்ளோம்.

2.குரைப் சம்பவத்தில் இடம்பெறும் முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள்

சிரியாவில் முஆவியா (ரழி) அவர்கள் உட்பட மக்கள் பிறை பார்த்ததாகக் குரைப் கூறியதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இச்செய்தியின் அரபு மூலத்தில் மூஆவியா (ரழி) அவர்கள் கவனித்ததும் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா என்று குரைப் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கேட்டதாக வாசகம் அமைந்துள்ளது. அவ்வாக்கியத்தில் 'குல்து' – 'நான் கேட்டேன்' என்ற பதம் இடம் பெறுகின்றது. 'குல்து' என்ற இச்சொல்லை குரைப் கூறியதாகவே அனைத்து மொழி பெயர்ப்பாளர்களும் மொழியாக்கம் செய்கின்றனர்.

ஆனால் அதற்கு முன்னர் இடம்பெறும் வார்த்தைகளில், 'அவரை அவள் அனுப்பினாள்' என்ற பொருள்படும் بعثته – பஹஃதத்ஹுஎன்ற பதம் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இதில் 'அவரை' என்று குறிக்கும் அப்பதம் 'குரைபைக்' குறிக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிவித்தவர் குரைப் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதை அறிவிப்பவர் உண்மையிலேயே குரைபாக இருந்திருந்தால் அவர் தன்னிலையாகவே இச்செய்தியை அறிவித்திருக்க வேண்டும். மாறாக இங்கு படர்க்கையான சொல் கையாளப் பட்டுள்ளது.

புரியும்படி சொல்வதென்றால் 'என்னை' உம்முல் பழ்ல் அவர்கள் அனுப்பினார்கள் என்று பொருள்படும் ' بعثتني ' - 'பஹஃதத்னீ' என்ற பதமே இடம் பெற்றிருக்க வேண்டும். மாறாக இங்கே 'அவரை' உம்முல் பழ்ல் அனுப்பினார்கள் என்று மூன்றாம் நபரைக் குறித்து சொல்வதைப் போன்ற வாசகங்கள் உள்ளன.

முஸ்லிம் கிரந்தத்தில் வரும் இதே செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா இப்னு யஹ்யா என்பவர் 'நமக்குப் போதாதா' அல்லது 'உங்களுக்குப் போதாதா' என்று குரைப் கூறியதாக சந்தேகப்படுவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற குறைபாடுகள் இல்லாத ரிவாயத்து என்று மாற்றுக் கருத்துடையோர் கூறும் அபூதாவுதின் அறிவிப்பையே நாமும் இங்கு ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.

இன்னும் அக்காலத்தில் சிரியாவுக்கும் மதீனாவுக்கும் இடையே வணிகத் தொடர்புகள் அதிகம் இருந்தன. அதனால் அவ்விரு நகரங்களுகிடையே மக்கள் பிரயாணம் செய்துவற்றையும், வாகனத் தொடர்புகள் இருந்துள்ளதையும் நாம் அறிந்ததே. சிரியாவிலிருந்து பயணமாகி பலர் மதீனாவுக்கு வந்திருக்க அதிக வாய்ப்புள்ள நிலையில் குரைப் என்ற ஒருவரிடம் தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மேற்கண்ட விஷயத்தைக் கேட்டதாகத் தெரிகின்றது.

லைலஹ் (லைலத்) என்ற அரபுப் பதத்தை தவறாக இரவு என்று மொழி பெயர்த்துள்ளனர். லைலஹ் என்ற பதம் எண்ணிக்கை மற்றும் கிழமைகள் குறித்த சொற்களுடன் சேர்ந்து வரும் போது, பகலும் இரவும் கொண்ட ஒரு முழுமையான நாளையே குறிக்கும். இன்னும் லைலஹ் என்ற பதம் யவ்ம் என்ற பதத்துடன் இணைந்து வரும் இடங்களில் மட்டும்தான் லைலஹ் என்பதற்கு இரவு என்றும், யவ்ம் என்ற பதத்திற்கு பகல் என்றும் பொருள் கொள்ளப்படும். பொதுவாக அரபு மொழி வழக்கில் 'இரவு' என்பதற்கு 'லைல்' என்ற பதமே பயன்படுத்தப்படும். லைலஹ் பற்றிய மேலதிக விளக்கங்களை அறிய ஹிஜ்ரி கமிட்டியின் 'ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா?' என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

குறிப்பாக மேற்கண்ட நிகழ்வில் சிரியாவின் மக்கள், பிறையை மஃரிபு வேளையில் மேற்குத் திசையில் பார்த்தார்கள் என்பதற்கான எந்த வாசகங்களும் அங்கு இடம் பெறவில்லை. எனவே மேற்படி செய்தியை ஆதாரமாக வைத்து சிரியாவின் மக்கள் பிறையை இரவில்தான் பார்த்தார்கள் என்று சிலர் பிரச்சாரம் செய்வதும் பிழையானதாகும்.

மேலும் மேற்படி சம்பவத்தில் உள்ளவற்றை இங்கே மீண்டும் நினைவு படுத்துகின்றோம். அதாவது 'நாங்கள் வெள்ளிக்கிழமை அதை கவனித்தோம் என்று கூறினேன். நீ பிறையைக் கவனித்தாயா? என்று கேட்டார்கள். ஆம்! நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள் எனக் கூறினேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், என்றாலும் நாங்கள் சனிக்கிழமை அதைக் கவனித்தோம். எனவே நாங்கள் நோன்பைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை என்று கூறினார்கள்.'

இதில் மூஆவியா (ரழி) அவர்களும், குரைபும், சிரியா மக்களும் சிரியாவில் இருந்தனர்.இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும், மதீனத்து மக்களும் மதீனாவில் இருந்தனர். மேற்படி இருசாராரும் எந்தக் கிழமையில் தங்களுடைய ரமழான் மாதத்தின் முதல் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பதற்கும் மேற்கண்ட செய்தியில் எந்த வாசகமும் இல்லை.

மேற்படி குரைபு சம்பவம் ரமழானின் முதல் பிறையைப் பற்றிய தகவல்தான் என்று பொதுவாக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். எனினும் சிரியாவின் மக்கள் பிறை பார்த்ததாக குரைபு தெரிவித்த தகவல் 'உர்ஜூஃனில் கதீம்' என்ற பிறைப் படித்தரத்தின் கடைசி நிலையை அவதானித்ததை கூறுகின்றதா? அல்லது வளர்பிறையின் முதல் படித்தரத்தைப் பற்றி கூறுகின்றதா? என்பதற்கும் இதில் உறுதியான எந்தத் தெளிவும் இல்லை.

ஏனெனில், ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃஅபான் மாதத்தின் 'உர்ஜூஃனில் கதீம்' அம்மாதத்தின் இறுதி வியாழக் கிழமையன்று ஏற்பட்டது. குரைப் உர்ஜூஃனில் கதீமை பார்த்ததாக வைத்துக் கொண்டாலும் அதை நிச்சயமாக வெள்ளிக்கிழமை பார்த்திருக்கவே முடியாது.

மேலும் சிரியாவில் இருந்தவர்கள் வெள்ளிக் கிழமை பிறை பார்த்து சனிக்கிழமை நோன்பை துவங்கியதாக அந்தச் செய்தியில் கூறப்பட வில்லை. அதே போல் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களும் சனிக் கிழமை பார்த்து ஞாயிற்றுக் கிழமை நோன்பைத் துவங்கியதாகவும் அந்தச் செய்தியில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. இவற்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படி தீர்வுகாண இயலாத பல குழப்பமான நிலைகள் மேற்காணும் செய்தியில் புதைந்துள்ளன. அவைகளைப் பற்றி அலசத் துவங்கினால் பல பக்கங்களில் விவரிக்க வேண்டிவரும். எனவே பிறைத் தகவலைப் பெறுவதற்கு குரைபு சம்பவத்தை ஆதாரமாகக் கருதுபவர்களும், அச்சம்பவத்தை அறிவித்தவர் குரைப்தான் என்று கூறுபவர்களும் இக்குளறுபடிகளைத் தெளிவுபடுத்த வேண்டும். அல்லது தாபிஈயீன்களுக்குப் பிறகு வரும் நபர்களின் கூற்றுகளும் மார்க்க ஆதாரம்தான் என்று அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

நம்மைப் பொருத்தவரையில் மேற்காணும் நிகழ்வு நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் பெற்ற ஹதீஸாக இல்லை. மேலும் ஒரு ஸஹாபியின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை குரைப் என்பவர் அறிவித்திருக்கலாம் என்ற உறுதியற்ற நிலையே அதில் உள்ளது. இச்சம்பவம் ஹதீஸ் என்ற தரத்தை அடையவே முடியாது என்பதற்கு இந்த விளக்கங்களே போதுமானதாகும் எனக் கருதுகின்றோம்.

3.குரைப் சம்பவம் உணர்த்தும் படிப்பினைகள்

கலீஃபாவான முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்த நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், முஆவியா(ரழி) அவர்கள் நோன்பு வைத்ததாக குரைபால் தெரிவிக்கப்பட்டத் தகவலை ஏற்று பின்பற்ற மறுத்துள்ளதை அறியமுடிகிறது. இன்னும் அவர்கள் சுய ஆய்வோடு நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில் இருந்துள்ளதையும் மேற்கண்ட செய்தி தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பிறர் கூறும் பிறைத் தகவலை வைத்து செயல்படாமல் பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் (அஹில்லாஹ்) நாம் சுயமாகக் கவனித்தே செயல்பட வேண்டும் என்ற மார்க்க சட்ட விளக்கத்தைதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றிலிருந்து அறியமுடிகிறது.

மேற்கண்ட சம்பவத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்று கூறிவிட்டதால் இதை ஹதீஸ்தான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்பட்ட பிறை சம்பந்தப்பட்ட எந்த ஹதீஸ்களிலும் ''எனவே நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை' என்ற இந்த வாசகங்கள் இடம்பெற வில்லை. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப்படவுமில்லை. பிறை சம்பந்தமான வேறு எந்த அறிவிப்புகளிலும் இப்னு அப்பாஸ் அவர்கள் அறிவித்ததாக இது போன்ற வாசகங்கள் காணப்படவும் இல்லை.

எனவே 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்ற வாக்கியத்தை இப்னு அப்பாஸ் அவர்கள் இணைத்துக் கூறியதாக குரைப் சம்பவம் கூறுகிறது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாகப் பாடம் பயின்றவர்கள். நபி(ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களிலிருந்து அவர்கள் ஆய்வு செய்து புரிந்தவற்றை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாகக் கூறியுள்ளார்கள். இப்படித்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்ற வாசகங்களை விளங்க வேண்டும்.

ஹதீஸ்கள் என்றால் அதை அறிவிப்பவர்கள் ஸஹாபியாகவே (நபித்தோழர்களாகவே) இருப்பார்கள். இது ஹதீஸ் என்ற தரத்தில் வரமுடியாத நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறாத ஒரு சம்பவமேயாகும். இன்னும் இரு ஸஹாபிகளை இணைத்து குரைப் என்பவர் அறிவித்ததாக வரும் சம்பவமே இது. எனவேதான் அபூதாவுதில் வரும் இச்செய்தியை அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் எனக் கூறாமல் அறிவிப்பவர் குரைப் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனிமேலும் குரைப் சம்பவத்தை ஸஹீஹான ஹதீஸ் என்று யாராவது நம்பினால் அவர்கள் நமது மேற்கண்ட விளக்கங்களை திறந்த மனதோடு அறிய முற்படுமாறு வேண்டுகிறோம். இன்னும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக ரிவாயத்து செய்யப்பட்ட பிறை சம்பந்தமான மற்ற ஸஹீஹான ஹதீஸ்களோடு மேற்படி அவ்வாசங்கள் பொருந்தி போகின்றதா என்று ஆய்வு செய்வதே சிறந்த தீர்வைத் தரும். அவ்வாறு பல்வேறு ஸஹீஹான ஹதீஸ்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த குரைப் சம்பவம் ஹதீஸ் என்ற தரத்திற்குள் வரவில்லை என்பதை நிதர்சனமாக அறிந்து கொள்ளலாம். எனவேதான் அந்நிகழ்வை குரைப் ஹதீஸ் என்று கூறாமல் குரைப் சம்பவம் என்று நாம் கூறுகிறோம்.

மேலும் குரைப் அவர்கள், தான் தெரிவிக்கும் பிறைத் தகவல் சரியானது என்று கருதித்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இத்தகவலை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தினார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களோ குரைபுடைய பிறைத் தகவலை ஏற்க மறுத்து விட்டார்கள். இவ்வாறு எதிர்மறையான இருவேறு கருத்துகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் மேற்படி குரைப் சம்பவத்தை ஒரு கருத்துடையோர் மட்டும் தங்களுக்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைத் தகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' என்று கூறிவிட்டதால் இது தத்தமதுபகுதி பிறைக்கு தனித்த ஆதாரம்தான் என்று கூறுவது அடிப்படையிலேயே தவறாகும்.

பொதுவாக குர்ஆனும் சுன்னாவும் சாட்சி பகரும் விஷயத்தில் குறைந்த பட்சம் இரண்டு நேர்மையான நபர்கள் (சாட்சியாளர்களாக) இருக்க வேண்டும் என்கிறது. இந்நிலையில் இந்த குரைப் சம்பவத்தை முன்னிருத்தி ஒரு நபர் சாட்சியை ஏற்பதற்கு இது ஆதாரம் எனவும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் சில முற்கால ஆய்வாளர்களோ இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் குரைப் மட்டுமே தனித்து சாட்சி சொன்னதால்தான் குரைபுடைய பிறைத் தகவலை அவர்கள் நிராகரித்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஏனென்றால், சாட்சிய சட்டம் என்பது இரு சாட்சிகளைக் கொண்டதே ஆகும். அதற்கு மாற்றமாக ஒரு சாட்சியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பெற்றதாலேயே குரைபுடைய பிறை சாட்சியத்தை நிராகரித்து விட்டார்கள் என்ற தகவல்களும் ஆய்வு நூல்களில் காணக் கிடைக்கின்றன.

இன்னும் குரைபின் தகவல் உறுதியான தகவலாக இருந்தும், அது மாதத்தின் இறுதியில் தாமதமாக வருகிறது. அத்தகவலை ஏற்று எவ்வாறு நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதற்கு நபிவழி எதுவும் இல்லை. எனவே மாதத்தை தன் ஆய்வின் அடிப்படையில் நிறைவு செய்வதற்குத் தீர்மானித்து, அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு முடிவெடுக்கத்தான் கட்டளையிட்டுள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படிப் பட்ட கருத்துக்களையும் நாம் அறியமுடிகிறது.

சர்வதேசப் பிறை கருத்துடையோர் குரைப் சம்பவத்தை அவர்களுக்குரிய ஆதாரமாகக் கருதுகின்றனர். அதாவது 'குரைப் ஷவ்வால் பிறையைப் பார்க்காமல் ரமழானின் பிறை பார்த்தத் தகவலின் அடிப்படையில் ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அதை மறுத்து விட்டார்கள்' என்று கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் குரைப் அவர்கள் சுயமாக முன்வந்து இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் இந்த பிறைத் தகவலை அளிக்கவில்லை, மாறாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்தான் தாமாக முன்வந்து குரைபை அழைத்து பிறைபற்றி விசாரிக்கிறார்கள். இதை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் ரமழானின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது. இந்நிலையில் 'ரமழானின் பிறையை வைத்து ஷவ்வால் பிறைக்கு சாட்சி சொல்ல வந்ததால்தான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைப் சம்பவத்தை மறுத்து விட்டார்கள்' என்று சர்வதேசப்பிறை கருத்துடையோர் கூறுகின்றனர்.

இது உண்மையானால், ஷவ்வால் பிறை பற்றி ரமழானில் விசாரிக்கக் கூடாது என்பதை சர்வதேசப்பிறை நிலைப்பாடு கொண்ட நமதூர் அறிஞர்களே அறிந்திருக்கும் ஒரு விஷயத்தை நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருக்க மாட்டார்களா என்ன?. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீன பிறைச் சட்டம் தெரியும் என்றால் குரைபை அழைத்து ரமழான் பிறைபற்றி ஏன் விசாரிக்க வேண்டும்? சிந்திக்க வேண்டாமா?.

இல்லை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு இந்த நவீன பிறைச் சட்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று இவர்கள் கூறினால், மார்க்க அறிவிற்காக நபி (ஸல்) அவர்களின் சிறப்புப் பிரார்த்தனையைப் பெற்ற நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குத் தெரியாத மார்க்க சட்டம் இன்றைய சர்வதேசப்பிறை நிலைப்பாட்டு முல்லாக்களுக்கு எப்படித் தெரிய வந்தது?. அரபுப் புலமை தங்களுக்கே இருப்பதாக ஆர்ப்பரிக்கும் சர்வதேசப் பிறை முல்லாக்கள் இதற்கு பதில் சொல்வார்களா?

ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறுகிறது. இன்னும் பிறைகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களே கட்டளையிட்டு விட்டனர். இன்னும் ரமழானில் பிறைகளின் படித்தரங்களைத் துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தை அறிந்திடக் கூடாது என்பதற்கு இந்த குரைப் சம்பவத்தில் எந்தத் தடையுமில்லை. மேலும் ரமழானின் இறுதியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபை தாமே அழைத்து ரமழான் பிறைபற்றி விசாரித்துள்ளார்கள். இவற்றை சிந்தித்தால் அடுத்து வரும் மாதத்தின் துவக்கத்தை முற்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் இச்சம்பவம் உணர்த்துகிறது என்பதை விளங்கலாம்.

இந்நிலையில் மேற்படி குரைப் சம்பவம் தத்தமது பகுதி பிறைக்கு தான் ஆதாரம், சர்வதேச பிறைக்கு எதிரான நிகழ்வு என்று தத்தமதுபகுதி பிறை கருத்துடையோர் கூறுகின்றனர். ஏனென்றால், 'மூஆவியா (ரழி) அவர்கள் நோன்பு நோற்றதையும், அவர்கள் பிறையை பார்த்ததையும் குரைப் சாட்சி பகர்ந்தார். இருப்பினும் மதீனா மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடைப்பட்ட தூரத்தை கணக்கில் கொண்டே, இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் நிராகரித்தார்கள்' என அவர்கள் வாதிடுகின்றனர்.

இது சரியான வாதமென்றால், இக்காலத்தில் வௌ;வேறு நாடுகளாக அமைந்திருக்கும் சிரியாவும், மதீனாவும் அன்று முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரே ஆட்சியின் கீழ் இருந்த இரு ஊர்களில் இருவேறு தினங்களில் பிறை பார்க்கப்பட்டாலும், அதை மற்ற ஊரில் உள்ளவர்கள் பொருட்படுத்தக் கூடாது என்பதே இச்செய்தியில் இருந்து புலனாகின்றது. அப்படியிருக்க இந்த நிகழ்வை வைத்து தங்கள் பிறை நிலைப்பாட்டை தத்தமது பகுதி என்று அமைத்து கொண்டவர்கள் தற்போது தமிழகப்பகுதி என பல ஊர்களையும் ஒன்றிணைத்து எந்த ஆதாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள் என்பதை விளக்க வேண்டும்.

'இல்லை இல்லை சிரியாவில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த கலீஃபா முஆவியாவின் (ரழி) தலைமையிலான இஸ்லாமிய ராஜ்ஜியத்தில், மதீனா என்பது ஒருஊர் அளவிற்குள்ள பகுதியல்ல அது தமிழ்நாட்டைப் போன்ற ஒரு மாநிலப் பகுதியாகும். அங்கு கவர்னராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அவ்வாறு பிறைத் தகவலை மறுத்ததைப் போல நாங்கள் இந்தியா என்ற நாட்டில் மத்திய அரசு இருப்பினும், தமிழகம் என்ற மாநில அரசு அளவுக்குட்பட்ட இடங்களை எல்கையாக தீர்மானித்துள்ளோம். எனவே தமிழகம் தவிர்த்து எங்கு பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்' என்றும் அவர்கள் வாதிக்கலாம். மேற்படி வாதம் புரிவர்கள் சர்வலோகத்திற்கும் அரசனான அல்லாஹ்வின் ஆட்சியின் கீழ் இருக்கும் இப்பூமியில் வல்ல அல்லாஹ் பிறை பார்ப்பதற்கென்று எந்தவித தூர எல்லையையும் நிர்ணயிக்கவில்லை என்பதை உறுதியாக உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

முஆவியா (ரழி) அவர்களின் ஒரே ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மதீனா இருந்தும் சிரியா மற்றும் மதீனாவாசிகள் தனித்தனியாக செயல்பட்டதாகவே குரைப் நிகழ்வு கூறுகிறது. மதீனா நகரை தமிழ்நாட்டின் எல்கை பரப்பளவோடு ஒப்பிட்டுக் கூறிடவே இயலாது. இந்நிலையில், ஒரே ஆட்சியின் கீழ் இருப்பதால் தமிழ்நாடு என்பதை ஒரு பகுதியாக முடிவெடுத்துள்ளோம். என்று கூறினால் அதற்கும் குரைப் நிகழ்வு ஆதாரமாக அமையாது மாறாக எதிராகவே அமையும் என்பதே உண்மை. தத்தமது பகுதி பிறை அல்லது தமிழக அளவு பிறை என்ற எல்லைக்கு ஆதாரமாக வரும் ஒரு ஹதீஸையாவது மாற்றுக் கருத்துடையவர்கள் எடுத்துக் காட்ட வேண்டுகிறோம்.

தூரமான பகுதியில் இருந்து உறுதியான பிறைத் தகவல் கிடைத்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவதற்கு குரைப் சம்பவம் தடையாக இருக்கின்றது என்று தத்தமது பகுதி ஃ தமிழகப் பிறை கருத்துடையோர் கூறுகின்றனர். இப்படி கூறுகின்றவர்கள் பிறைத் தகவலை எவ்வளவு தூர எல்கைவரை ஏற்றுக் கொள்ளலாம் என்ற விஷயத்தில் இன்னும் உறுதியில்லாத நிலைமையிலே இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சில சமயம் தூரமான பகுதியில் இருந்து தகவல் வந்தால் எடுக்கக் கூடாது என்று கூறும் அவர்களே மற்றொரு சந்தர்ப்பத்தில் தூரத்தையோ எல்கையையோ நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்து தரவில்லை என்றும் கூறுகின்றார்கள். ஏன் இந்த முரண்பாடு?

மேலும், மேற்படி குரைப் நிகழ்விலிருந்து நமக்கு ஒரு முக்கியப் படிப்பினை இருக்கிறது. அது என்னவெனில், ஒரு ஆட்சியாளாரின் (கலீஃபாவின்) அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், நம்மை அந்த ஆட்சியாளர் (கலீஃபா) இன்னொரு ஊருக்குக் கவர்னராக (அமீராக) நியமித்து, அவருக்காக நாம் ஆட்சிப் பொறுப்பை அந்த ஊரில் நிர்வகிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்படி அவர் ஆட்சிக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும் மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சி செய்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அந்த ஆட்சியாளர் மார்க்;கம் என்று கூறி செயல் படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியதில்லை என்பது புலனாகிறது. இவைதான் குரைபு சம்பவத்திலிருந்து தெளிவாகியுள்ள மாபெரும் உண்மையாகும்.

ஏனென்றால், மார்க்க சட்டமான பிறை விஷயத்தில் ஆட்சியாளர் மூஆவியா (ரழி) அவர்கள் பிறை பார்த்ததாக குரைப் சொன்னதை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து தன்னுடைய பிறை நிலைப்பாடுதான் சரியென்று செயல்பட்டு உள்ளார்கள். மார்க்க விஷயத்தில் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் கட்டளையிட்டதை மட்டும் சிந்தித்துக் கட்டுப்பட்டு நடந்தால் போதுமானதாகும். பிறருடைய மார்க்க நிலைப்பாட்டை நாம் தக்லீத் செய்து அமுல்படுத்த வேண்டியதில்லை. இவையும் மேற்படி குரைபுடைய செய்தியிலிருந்து தெளிவாகியுள்ளது.

இந்நிலையில் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் மேற்படி குரைபுடைய செய்தியின் அடிப்படையில் ஒருவருடைய பிறை நிலைப்பாடு, அவருடைய கலீஃபா, அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருக்கலாம். அவ்வாறு இருந்தாலும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது என்பதற்குத் தக்க ஆதாரமாக இது அமைகிறது. மேற்படி கலீஃபா, அமீர், ஜமாஅத், காஜி, முதவல்லி மற்றும் இயக்க தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும் என்பதைத்தான் மேற்படி குரைப் சம்பவம் தெரிவிக்கும் கருத்தாகும். இந்த நிதர்சனமான உண்மையை மாற்றுக் கருத்துடையோர் நிதானமாக சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.

4.மேற்படி குரைப் சம்பவத்தில் எழும் கேள்விகள்.

தூரமான பகுதியிலிருந்து பெறப்பட்ட பிறைத் தகவலின் அடிப்படையில் அனைத்து ஊர் மக்களும் செயல்படக் கூடாது என்பது குரைப் நிகழ்வில் இருந்து பெறும் சட்டம் என்று கூறுபவர்களிடம் சிந்திப்பதற்காக இந்தக் கேள்விகளைக் கேட்கின்றோம்.

அதாவது வேறு ஊர் பிறையையோ, பிறபகுதியின் பிறைத் தகவலையோ பின்பற்றக் கூடாது என்ற நிலைப்பாடுதான் மார்க்கம் என்றால், சிரியாவிலிருந்து வந்த குரைபிடம் அங்கு பிறை பார்க்கப்பட்டது பற்றி மதீனாவிலிருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஏன் விசாரிக்க வேண்டும்?. அவசியமில்லாத செயலை நபித்தோழர்கள் செய்வார்களா?. இன்னும் மூஆவியா (ரழி) அவர்களும், சிரியாவின் மக்களும் நோன்பு வைத்தது போதாதா? என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் குரைப் அவர்கள் வலியுறுத்த வேண்டிய அவசியம்தான் என்ன?. தத்தமது பகுதி ஃ தமிழகப் பிறை கருத்துடையோர் இவற்றை சிந்திக்க வேண்டாமா?

மாற்றுக் கருத்துடையவர்களின் வாதப்படி ஒரு ஊரில் பிறை பார்க்கப்படா விட்டால்தானே வேறு பகுதியின் பார்த்தத் தகவலை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியிருக்க பிறையை உறுதியாக பார்த்துவிட்ட பிறகு ஒருவர் வேறு இடங்களில் பார்க்கப்பட்ட பிறைத் தகவலை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?. ஒருவர் அனைத்துப் பிறைகளையும் தொடர்ந்து கவனித்து மாதத்தைச் சரியாக துவங்கிய பின்னரும் வேறு இடத்தில் இருந்து (அது எந்தப் பகுதியானாலும் சரி) தகவல் கிடைத்தால், தான் உறுதியாக கவனித்து மாதத்தை ஆரம்பித்ததை விட்டுவிட்டு கிடைத்தத் தகவலைத்தான் எடுத்து அமல்செய்ய வேண்டும் என்று சொல்ல வருகின்றார்களா?. மாற்றுக் கருத்துடையோர் இதனையும் தெளிவுபடுத்த வேண்டும்.

இன்னும் மாற்றுக் கருத்துடையோரின் புறக்கண்பார்வை நிலைப்பாடு என்பது அவர்கள் விளங்கியுள்ளபடி ஒரு மாதத்தின் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு பிறையைப் பார்ப்பதுதான். இதைத் தெளிவாக சொல்வதென்றால் அந்த 29-வது நாள் மாலை மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்வதே. மேலும் இப்படி பிறை பார்ப்பதுதான் நபிவழி என்று நம்பியுள்ள அவர்கள் அன்றைய முப்பதாம் இரவு மேகம் மூட்டம் பிறையை மறைத்தால், அந்த நாளை முப்பதாம் நாளாக முழுமைப்படுத்தி அடுத்துவரும் மஃரிபு முதல், புதிய மாதத்தை ஆரம்பம் செய்ய வேண்டும் என்பதும்தான்.

அப்படியானால் மேற்படி குரைப் நிகழ்வில் 29-வது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு பிறையைப் புறக்கண்ணால் பார்த்தார்கள் என்பதற்கான வாசகங்கள் அதில் எங்குமே இடம் பெறவில்லை. இது பிறை பார்த்த தகவலைக் குறிக்கும் ஆதாரம் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் நம்பினாலும் அவர்களின் பிறை நிலைப்பாடு இச்சம்பவத்தின் மூலம் எங்கே நிரூபணமாகிறது?

மேலும் ''நாங்கள் நோன்பை தொடர்ந்து கொண்டேயிருப்போம் முப்பதாக பூர்த்தி செய்யும் வரை அல்லது அதை கவனிக்கும் வரை'' என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக வாகங்கள் இடம்பெற்றுள்ளன. மேற்படி வாசகங்களிலிருந்தே,

ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு 29-வது நாள் மஃரிபுக்குப் பின் பிறையை புறக்கண்களால் பார்க்க வேண்டும்,

அல்லது பிறை பார்த்த தகவலைப் பெறவேண்டும்,

அல்லது மேகமூட்டம் ஏற்பட்டால் மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்

போன்ற மாற்றுக் கருத்துடையவர்களின் எத்தகைய பிறை நிலைப்பாட்டிற்கும் இந்த குரைப் சம்பவத்தில் எந்த ஆதாரங்களும் இல்லை.

மேற்படி குரைப் சம்பவத்தை நபிமொழி என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குரைபுடைய பிறைத் தகவலை நேரத்தையோ, தூரத்தையோ அளவு கோலாக வைத்து மறுக்கவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறியபடி பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் நாங்கள் கவனிப்போம் என்ற கருத்தில்தான் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

எனவே எத்தகைய பிறை கருத்துடையோரும் இதை ஏற்றுக் கொண்டு, பிறை விஷயத்தில் இனிமேலும் நேரம் மற்றும் தூர வித்தியாசங்களை முன்னிலைப் படுத்தக் கூடாது. இன்னும் நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் வழி நின்று பிறைகள் அனைத்தையும் நாள் தவறாமல் தாங்களே சுயமாக கவனிக்க வேண்டும். டவுண் காஜிகள் முதல் ஜமாஅத் தலைவர்கள் உட்பட மாற்றுக் கருத்துடைய அனைவரும் இதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அல்-குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் தவிர ஸஹாபாக்களின் கூற்றுகள், தாபிஈயீன்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரமாகாது. இதை ஒப்புக்கொள்ளும் மாற்றுக் கருத்துடையவர்கள் இந்தக் குரைப் சம்பவத்திற்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக தெரியும் நிலையிலும் உண்மையை மறுப்பது முறைதானா?. தங்களின் தத்தமதுபகுதி பிறை, தமிழகப் பிறை மற்றும் பிறைத் தகவலைப் பெறும் நிலைப்பாட்டிற்கு ஆதாரமாக கருதிக்கொண்டு இந்த குரைப் சம்பவத்தை தூக்கிப்பிடிப்பது சரிதானா?. இவ்வாறு பிறை விஷயத்திற்கு மட்டும் ஸஹாபியையும், தாபிஈயீயையும் ஆதாரமாகக் கொள்வது ஏன்? என்று மீண்டும் கேட்கிறோம்.

குரைப் சம்பவம் நிகழ்ந்திருப்பதற்கு அதிக வாய்ப்புள்ள ஹிஜ்ரி 50-ஆம் ஆண்டில் ஷஃஅபானின் இறுதிநாள் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினம் வெள்ளிக் கிழமையாகும். அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க எந்த முகாந்திரமும் இல்;லை. இந்தப் பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருக்கலாம். அதன் அடிப்படையில்கூட குரைபுடைய அப்பிறைத் தகவலை அவர்கள் ஏற்க மறுத்திருக்கலாம்.

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளைத் தொடர்ந்து அவதானித்து வந்ததின் அடிப்படையில் ரமழானின் முதல் பிறையின் காட்சியை ரமழானின் முதல் தினமான சனிக்கிழமையன்று மதினாவில் கவனித்துள்ளார்கள். அந்த சனிக்கிழமைக்கு முந்திய நாள் வெள்ளிக்கிழமை கும்மவுடைய நாளில் பிறையை புறக்கண்களால் பொதுவாகப் பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்தார்கள். அதுவும் அரபு தீபகற்பத்தில் இப்படி அமாவாசைப் பிறை! தெரியும் என்று கற்பனையில்கூட சொல்ல முடியாது என்பதை நாம் அறிவோம். இந்நிலையில்தான் அந்த (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினம் என்னும் 'கும்ம'வுடைய நாளான வெள்ளிக்கிழமையில் குரைப் பிறை பார்த்ததாகச் சொல்கிறார். எனவேதான் அத் தகவலை நபிவழியில் நின்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மறுத்தார்கள்.

இக்கருத்தை இல்லை என்று மறுத்து நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவுத் திறமைக்கும் புவிமைய சங்கமதின பிறை மறைதலுக்கும் சம்பந்தமில்லை என்று யாரும் கூறலாம். அப்படி எவரும் வாதித்தால் அவர்கள் கடந்த 1400 ஆண்டுகளில் (Geocentric Conjunction Day) புவிமைய சங்கமதினத்தில் சிரியா, சவுதிஅரேபியா உட்பட அரபு தீபகற்பத்தில் என்றாவது பிறந்த பிறையைப் புறக்கண்களால் பார்த்ததாகவோ, பார்க்க வாய்ப்பு இருந்ததாகவோ அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முன் வரவேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியுமா?

மேற்படி குரைப் சம்பவத்தின் மூலம் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் பிறைகளைக் கவனித்தே செயல் பட்டார்கள் என்பதை மாற்றுக் கருத்துடையோரும் ஒப்புக் கொள்கின்றனர். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் செயல்பட்டதற்கு மாற்றமான தகவலை குரைப் தெரிவித்துள்ளார். அப்போது உறுதியாக பிறையை கவனித்து செயல்பட்ட இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

மேலும் இந்த நிகழ்வை முற்கால ஆய்வாளர்கள் அலசும் போது ஒருவர் 31 நாட்கள் நோன்பு வைக்கலாமா? என்பது பற்றிய சர்ச்சையும் நடைபெற்றுள்ளது. அத்துடன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு ஒருவர் பயணித்து சென்று விட்டால், அவர் எந்த ஊர் பிறையின் அடிப்படையில் நோன்பை நிறைவு செய்ய வேண்டும்? அல்லது எந்த ஊர் பிறையின் அடிப்படையில் பெருநாளைக் கொண்டாட வேண்டும்? என்பது பற்றியும் விவாதிக்கப் பட்டுள்ளது. மேலும் அவர் பயணித்துச் சென்ற ஊரின் அடிப்படையில் நோன்பை முழுமையாக நிறைவு செய்ய வேண்டுமா? என்ற சர்ச்சையும் நடைபெற்றுள்ளது. சிலருக்கு நோன்பு குறைந்ததாகவும், மேலும், சிலருக்கு நோன்பு அதிகமாகவும் நோற்க வேண்டி வந்துவிட்டால் என்ன செய்வது போன்றவற்றையும் ஆய்வாளர்கள் அலசியுள்ளனர்.

ஏனெனில், சிரியாவில் பிறை பார்த்ததாக சாட்சி சொன்ன குரைப் அவர்கள், மதீனாவிலிருந்த மக்களைவிட ஒருநாள் அதிகமாக நோன்பை பிடித்திருந்தாரா? அல்லது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் முடிவெடுத்தபடி செயல்பட்டாரா?. முக்கியத்துவம் வாய்ந்த இக்கேள்விக்கு இந்த குரைப் சம்பவத்தில் தெளிவு இல்லை.

அதாவது மாதத்தின் இறுதியில் சிரியாவிலிருந்து பயணம் செய்து மதீனா வந்த குரைப் அவர்கள் மதீனா வாசிகளின் நோன்பின் அடிப்படையில் தன்னுடைய நோன்பை நிறைவு செய்து விட்டு பெருநாள் கொண்டாடினாரா?. அல்லது சிரியாவில் நோன்பை தான் ஆரம்பித்ததின் அடிப்படையில் நோன்பு நோற்க ஹராமான தினமான அவருடைய பெருநாள் தினத்திலும் ஒரு நோன்பை அதிகப்படியாக நோற்றாரா?. இவ்வாறு குரைப் அவர்கள் தன்னுடைய பிறைத் தகவலின் அடிப்படையில் செயல்பட்டாரா? அல்லது தனது தவறை உணர்ந்து கொண்டாரா?. உணர்ந்து கொண்டார் என்றால் அவர்கள் நோன்பு நோற்றது ரமழானின் முதல் தினத்தில் அல்ல என்பதை உணர்ந்து 31-வது நாள் நோன்பு நோற்றாரா?

அவ்வாறு குரைப் 31-வது நாள் நோன்பை நோற்றிருந்தால் முஆவியா (ரழி) அவர்களும், சிரியா மக்களும் அன்றைய ரமழான் மாதத்தை தவறுதலாக ஒருநாள் முற்கூட்டியே துவங்கிவிட்டார்கள் என்றல்லவா பொருள்படும்? இன்னும் மேற்படி சம்பவத்தில் ''நானும் கவனித்தேன். மக்களும் கவனித்தார்கள். மக்களெல்லாம் நோன்பு நோற்றனர். முஆவியா (ரழி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்'' என்று குரைப் கூறியதாக வாசங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் ''முஆவியா (ரழி) அவர்களுக்குக் காட்சியளித்ததும், அவரின் நோன்பும் உங்களுக்குப் போதாதா?'' என்று மேற்படி குரைப் கேள்வி எழுப்பியுள்ளதைப் போலவும் வாசகங்கள் இடம்பெருகின்றன. இந்நிலையில் குரைப் 31-வது நாள் நோன்பை நோற்றிருந்தால் மேற்படி குரைப் சம்பவத்தில் குரைப் கூறியதைப்போல இடம்பெறும் வாசகங்களின் நிலை என்ன? இவை போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இச்சம்பவத்தை சரிகாண்பவர்களே விளக்கம் தரவேண்டும்.

இக்குரைப் சம்பவத்தை பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகக் காட்டுபவர்கள் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்கள்தான் என்ற நபி (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதலுக்கு மாற்றமான கருத்தை சொல்லப் போகிறார்களா? யாமறியோம்.

மேற்படி குரைப் சம்பவம் பிறை பார்த்தலுக்கும், தகவலைப் பெறும் நிலைப்பாட்டிற்கும் எவ்வகையிலும் ஆதாரமாக அமையாது என்பதை விளங்கிட வேண்டுகிறோம். 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக குரைப் சம்பவம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு கட்டளையிட்டார்கள்? என்ன செய்தியைக் குறித்து கட்டளையிட்டார்கள்? அக்கட்டளையின் வாசகங்கள் என்னென்ன? போன்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை என்பதையும் முன்னர் கூறினோம்.

'நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள்' என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இதுவும் ஹதீஸ்தான் என்பவர்கள் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளட்டும். மேலும் தத்தமதுபகுதி பிறை நிலைப்பாட்டிற்கு இதுவே பிரதான ஆதாரம் என கூறுபவர்களிடம் கீழ்க்காணும் கேள்விகளை அவர்கள் சிந்திப்பதற்காக முன் வைக்கின்றோம்.

1.அவர்களின் அமீரான முஆவியா (ரழி) அவர்களுடைய தலைமையின் கீழிருந்துதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், பணியாற்றினார்கள். இருப்பினும் முஆவியா (ரழி) அவர்களின் பிறை நிலைப்பாட்டை ஏற்க மறுத்து சுய சிந்தனையோடு செயல் பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியபடி பிறைகளின் அனைத்துப் படித்தரங்களையும் அவதானிப்போம் என்ற நிலைப்பாட்டில்தான் அவர்கள் இருந்துள்ளார்கள். இதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?

2.பிறை மறைக்கப்படும் கும்மவுடைய நாள் வெள்ளிக் கிழமையாக இருந்துள்ள நிலையில் அன்றைய தினம் சிரியாவிலோ அல்லது மதீனாவிலோ, இன்னும் அரபு உலகின் எப்பகுதியிலும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க இயலாது. இந்த பேருண்மையை நபி (ஸல்) அவர்களால் மார்க்க ஞானத்திற்காக வேண்டி பிரத்தியேகமாக துஆ செய்யப்பட்ட நபித்தோழர் இப்னுஅப்பாஸ் (ரழி) அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால்தான் குரைபுடைய அப்பிறைத் தகவலை ஏற்க மறுத்து 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது?

3.ஒருவருடைய பிறை நிலைபாடு, அவருடைய அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தாலும், தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் என்று கூறி தவறான பிறை நிலைப்பாட்டை நிர்பந்தமாக பின்பற்றக் கூடாது. மேலும் மேற்படி அமீர், ஜமாஅத், இயக்கத் தலைமைகளின் பிறை முடிவுகளை தக்லீத் செய்து ஏற்றுக் கொள்ளாமல் சுயமாக சிந்திக்க வேண்டும். இதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது?

4.ஒரு ஆட்சியாளாரின் ஆட்சிக்கு நாம் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும் மார்க்க சட்டத்தில் நாம் சுயமாக சிந்தித்து முயற்சி செய்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அந்த ஆட்சியாளர் மார்க்;கம் என்று கூறி செயல்படுத்தும் அனைத்து செயல்பாடுகளையும் நாமும் அப்படியே கண்மூடி பின்பற்ற வேண்டியது இல்லை. இக்கருத்தைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் புரிந்து கொள்ள கூடாது?

5.முஆவியா (ரழி) அவர்கள் அன்றை இஸ்லாமிய ஆட்சியின் கலீஃபாக இருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கலீஃபாவின் ஆளுமையின் கீழ் மதீனாவின் கவர்னர் பொறுப்பிலிருந்தார்கள். இவ்விருவருமே சங்கைமிக்க நபித்தோழர்கள் ஆவார்கள். குரைப் சம்பவம் குறிப்பிடுவதுபோல கண்ணியமிக்க அவ்விரு நபித்தோழர்களும் இரண்டு வௌ;வேறு நாட்களில் ரமழான் நோன்பை முரண்பட்டுத் துவங்கினார்கள் என்ற செய்தி சரியானதல்ல. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கிழமையில்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் பிரச்சாரம் செய்யக் கூடாது?

6.ஒவ்வொரு மாதமும் புறக்கண்களுக்குத் தென்படும் பிறைகளின் இறுதி படித்தரமான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற நிலைபற்றி அல்குர்ஆன் (36:39) கூறுகிறது. இன்னும் பிறைகளைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிட்டும் விட்டார்கள். ஷவ்வால் மாதத்தின் துவக்கத்தை எதிர் நோக்கி இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ரமழானின் இறுதியில் குரைபை அழைத்து ரமழான் துவக்கத்தைப் பற்றி விசாரித்துள்ளார்கள். இதன் அடிப்படையில், ஷஃஅபானின் பிறைகளை வைத்து ரமழானின் துவக்கத்தையும், ரமழானில் பிறைகளின் படித்தரங்களை துல்லியமாக வைத்து ஷவ்வாலின் துவக்கத்தையும் முற்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் 'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சொன்னதாக ஏன் முடிவெடுக்கக் கூடாது? என்ற ரீதியில் நடுநிலையோடு சிந்திப்பார்களாக.

ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கு பல்வேறு குர்ஆன் வசனங்களும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுமே ஆதாரங்களாகும். அவற்றைத்தான் மக்கள் மத்தியில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தெரிவித்து வருகிறோம்-அல்ஹம்துலில்லாஹ். இந்நிலையில் பிறைகள் விஷயத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் கொஞ்சம்கூட அறியமுற்படாதது வேதனைக்குரியதே.

நபி (ஸல்) அவர்களும், நான்கு கலீஃபாக்களும், இன்னும் நபி (ஸல்) அவர்களோடு தோழமையைப் பெற்றிருந்த மூத்த ஸஹாபாக்களில் பலரும் மரணித்த பிற்காலத்தில்தான் மேற்படி குரைப் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் அக்காலத்தில் முஸ்லிம் உம்மத்தை பிரிவுக்குள்ளாக்கிய இஸ்லாமிய மார்க்கத்தை எதிர்த்தோரின் பல சதிவேலைகளும், ஷியாக்களின் பிரிவினை குழப்பங்களும் தலை தூக்கியிருந்தன. அப்படிப்பட்ட காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மாற்றுக்கருத்தினர் தங்களது பிறை நிலைப்பாட்டிற்கு தக்க ஆதாரமாகத் துணிந்து பிரச்சாரம் செய்வது அனுதாபத்திற்குரியதே. அத்தகையோர்;களை மக்களே நீங்கள்தான்; அடையாளம் கண்டு திருத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' என்ற வாசகங்கள் வரும் பிரபலமான ஹதீஸ்கள் இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு எவ்விதத்திலும் ஆதாரமாகாது. மாறாக பிறைகளின் அனைத்து படித்தரங்களையும் துல்லியமாகக் கவனித்தே செயல்பட வேண்டும் என்பதைத்தான் அவை விளக்குகின்றன. 'ஸூமூ லி ருஃயத்திஹி வ அஃப்திரு லி ருஃயத்திஹி' ஹதீஸ் சம்பந்தமாக உண்மை விஷயங்கள் தெளிவாக நிரூபணமாகிவிட்டன. இவற்றை மக்கள் தெளிவாக விளங்கி வருகின்றனர் - அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிலையில், இருபத்தொன்பதாவது நாள் மாலை முப்பதாம் நாள் இரவு, மேற்கு திசையில், மஃரிபு நேரத்தில், மறைந்து கொண்டிருக்கும் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டம் என்ற தவறான நம்பிக்கைக்கு ஆதாரமாகக் கருதப்பட்ட

1) ஒரு கிராமவாசியின் பிறை அறிவிப்பு,
2) பிறையை பார்த்துதும் ஓதும் துஆ சம்மந்தப்பட்ட அறிவிப்பு,
3) ரிப்யீ பின் ஹிராஷ் அறிவிக்கும் இரண்டு கிராமவாசிகளின் பிறைச் செய்தி அறிவிப்பு,
4) இரண்டு கிராமவாசிகள் சம்பந்தமாக வரும் மேலும் ஒரு அறிவிப்பு,
5) நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை அவரவர் முடிவு செய்யலாம் என்று தவறாக மக்களிடம் புரிய வைக்கப்பட்ட அறிவிப்பு,
6) பிறை பார்த்தலுக்கு இரண்டு சாட்சிகள் பற்றிய செய்தி,
7) ரமழானை முன்கூட்டியே ஆரம்பிப்பது சம்பந்தமான அறிவிப்பு,
8) யவ்முஷ்ஷக் என்று பிறை பார்த்தல் சம்பந்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ள செய்தி


போன்ற அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவே உள்ளன. அவற்றில் பல தத்தமதுபகுதி பிறை, தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை, பிறையைப் புறக்கண்களால் பார்த்தல் போன்ற பிறை நிலைப்பாடுகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளன.

இன்னும் பிறை பார்த்துத் தகவல் அளிப்பதற்கு மிகப்பெரும் ஆதாரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட வாகனக்கூட்டம் சம்பந்தமான அறிவிப்பும் அடிப்படையற்றது, தொடர்பு அறுந்த செய்தி என நிரூபனமாகி விட்டது. மேலும் அந்த அறிவிப்பு இனங்காணப்படாத அபூஉமைர் என்பவரால் அறிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்தியே அது. இவை தௌ;ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் நபிமொழி என்ற தரத்தில் அமையாத இந்த குரைப் சம்பவத்தை நிலைநிறுத்த வேண்டிய சூழல் மாற்றுக் கருத்துடையவர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இன்றைய அறிவியல் யுகத்தில் கணிணியின் மூலம் அனைத்து அறிவிப்புகளையும், செய்திகளையும் தேடி எடுத்து, அனல் பறக்க விவாதங்கள் புரியும் அரபுப்புலமை(!) வாய்ந்தவர்களால் கூட இந்தக் குரைப் சம்பவம் பற்றிய உண்மை நிலையை உலகிற்கு உணர்த்த முடியாமல் போனது ஏன்?.

அவர்கள் அறிந்து கொண்டேதான் இருட்டடிப்பு செய்கிறார்களா? அல்லது அவர்களின் அரபு மொழியறிவில் உள்ள குறைபாட்டினால் இவை அவர்களுக்கு புரியாமல் ஆகிவிட்டதா? அல்லது இவர்கள் எதையும் ஆய்வு செய்யாமல் அறியாமையிலே உழன்று வருபவர்களா? என அடுக்கடுக்கான சந்தேகங்கள் நமக்கு எழுகின்றன.

இன்னும் தவ்ஹீது கொள்கையைப் பின்பற்றுபவர்கள் எனப்படுவோர் திருக்குர்ஆன், ஸஹீஹான சுன்னா, ஆகிய இவ்விரண்டு மட்டும்தான் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் என்றும், இந்த இரண்டில் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்பதையும் கொள்கையாகக் கொண்டவர்கள் என மக்கள் நம்பியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் ஸஹீஹானதை மட்டும்தான் ஏற்று நடப்போம் என்று பிரசாரம் செய்யும் தவ்ஹீது கொள்கை கருத்துடையோர், இந்த குரைப் சம்பவம் சம்பந்தமாக நாம் இதுவரை கூறியுள்ள உண்மைகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து படித்து தங்களது கொள்கைவாதிகளுக்கு சத்தியத்தைச் சொல்லிடக் கடமைப் பட்டுள்ளார்கள். தத்தமது பகுதிபிறை, தமிழகப்பிறை, சர்வதேசப்பிறை அல்லது பிறைத்தகவல் போன்ற பிறை நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு இச்செய்தியை பலமான ஆதாரம் என நம்பி தாங்கள் பிரச்சாரமும் செய்துவிட்டதால், தற்போது இவ்விஷயங்களை எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்று தயக்கம் காட்டுவார்களேயானால் அத்தகைய தவ்ஹீதுவாதிகளுக்கு இந்த ஆய்வுகள் எத்தகைய பயனையும் அளிக்காது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஆக பல்வேறு முரண்பாடுகளும் குழப்பங்களும் நிறைந்தவையே மேற்படி குரைப் சம்பவம் ஆகும். அச்சம்பவம் உணர்த்தும் படிப்பினைகளையும், அதில் எழும் பல கேள்விகளையும் மனதில் கொண்டு நிதானமாக, சிந்தித்து முடிவெடுக்க வேண்டுகிறோம். மேற்படி குரைப் சம்பவம் தத்தமதுபகுதி பிறைக்கோ, தமிழகப் பிறைக்கோ, சர்வதேசப் பிறையினரின் வாதத்திற்கோ அல்லது பிறந்த பிறையை 29-வது நாள் மாலை 30-வது நாள் இரவு, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில், பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாட்டிற்கோ எவ்வகையிலும், ஒருபோதும் ஆதாரமாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

'ஹாகதா அமரனா ரசூல் (ஸல்)' ஃ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் கட்டளையிட்டார்கள் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டு இதுவும் ஹதீஸ்தான் என்றும் இனி வாதிடவும் முடியாது என்பதையும் மக்களே நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.