பிறையைப் ('ஹிலால்'!) பார்க்கும் போது ஓத வேண்டிய துஆ சம்பந்தப்பட்ட கீழ்க்கண்ட அறிவிப்பையும் தங்களின் புறக்கண் பார்வைக்கு மற்றொரு ஆதாரமாகக் கூறுகின்றனர். பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டியது இபாதத் என்பதாலேயே நபி(ஸல்) அவர்கள் அதற்கான துஆவையும் கற்றுத் தந்துள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். எனவே அத்தகைய அறிவிப்புகளின் நிலையையும் சுருக்கமாகக் காண்போம்.
حَدَّثَنَا أَبُو عَامِرٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ الْمَدَايِنِيُّ ، حَدَّثَنِي بِلَالُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهِلَالَ ، قَالَ " اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ " . مسند أحمد بن حنبل » مُسْنَدُ الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ بَاقِي الْعَشَرَةِ الْمُبَشَّرِينَ بِالْجَنَّةِ ... » مُسْنَدُ أَبِي مُحَمَّدٍ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ...
அல்லாஹ்வே, அதை அபிவிருத்தி உள்ளதாகவும், ஈமானையும், இஸ்லாமையும், சாந்தியையும் தரக்கூடியதாக ஆக்கிவைப்பாயாக! உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்.
அறிவித்தவர் : தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி), நூல்: முஸ்னத் அஹமத்.
மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் 'சுலைமான் பின் சுப்யான் அல் மதாயினி' மற்றும் 'பிலால் பின் யஹ்யா' ஆகிய இருவருமே பலவீனமானவர்கள் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். நீங்கள் அறிந்து கொள்வதற்காக சில விபரங்களை மட்டும் சுருக்கமாக இங்கே தந்துள்ளோம்.
இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் தாரக்குத்னீ(ரஹ்) மற்றும் இமாம் தஹபீ(ரஹ்) ஆகியோர் அனைவரும் மேற்படி சுலைமான் பின் சுப்யான் ழயீஃபானவர் - பலவீனமானவர் என்று விமர்சிக்கின்றனர்.
அதைப்போல், இமாம்களான அபூ ஹாதிம் அல் ராஸி (ரஹ்), அபூ சுர்ஆ அர் ராஸி (ரஹ்), அலி இப்னு மதனீ (ரஹ்), முஹம்மது பின் இஸ்மாயில் அல் புகாரி (ரஹ்) மற்றும் யாகூப் பின் சீபா (ரஹ்) ஆகியோர்கள் மேற்படி சுலைமான் பின் சுப்யானை 'முன்கருல் ஹதீஸ் - ஹதீஸ்களில் தடுக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
இன்;னும் எஹ்யா பின் மயீன் (ரஹ்), நஸாயீ (ரஹ்), மற்றும் அபீ பிpச்ர் அத் துலாவி (ரஹ்) ஆகியோர் சுலைமான் பின் சுப்யானை 'லைஸ பி ஸிகா – அவர் நம்பகமானவர் அல்ல' என்றும் விமர்சித்துள்ளார்கள்.
பிலால் பின் யஹ்யா என்பவர் பற்றிய விமர்சனங்களில், 'லையினுல் ஹதீஸ் - ஹதீஸ்களில் பலவீனமானவர்' மேலும், தக்ரீபுத்தஹ்ஸீபில் 'மஜ்ஹூல் இனம் காணப்படாதவர்' என்று இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் பிலால் பின் யஹ்யாவை 'ழயீப்- பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்கள்.
ஆக, இந்த அறிவிப்பின் தரம் எந்த அளவிற்கு பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர்கள் விமர்சிக்கப் பட்டுள்ளதை வைத்தே உணர்ந்து கொள்ள இயலும். மேலும் சிறுசிறு வார்த்தை மாற்றங்களுடன் ஹிலாலைப் பார்த்ததும் துஆ ஓத வேண்டும் என்று இடம்பெறும் இவைபோன்ற அறிவிப்புகள அனைத்தும் பலவீனமான தரத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே ஆக வேண்டும் என்பதற்கு பிறையைப் பார்த்ததும் ஓதும் துஆ சம்பந்தப்பட்ட மேற்கண்ட அறிவிப்பை தக்க ஆதாரமாகக் கருதி எவ்வாறு வாதிடுகின்றனர் என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
'ஹிலால்' என்ற பதம், சந்திரனின் குறைந்தது 12 படித்தரங்களையாவது குறிக்கும் என்பதை அரபு அகராதி விளகக்ங்களை மேற்கோள் காட்டி ஆதாரங்களுடன் முன்னர் விளக்கியுள்ளோம். எனவே எந்த நாளின் ஹிலாலைப் பார்த்து இந்த துஆவை ஓத வேண்டும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்காத நிலையில், 30-வது நாள் பார்க்கும் பிறைக்கு மட்டும்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்? ஆக பிறந்த பிறையைப் புறக்கண்ணால், முப்பதாம் நாள் மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிறை நிலைப்பாட்டை கொண்டவர்களுக்கு இந்த பலவீனமான அறிவிப்பில் கூட எந்த ஆதாரமும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
மேற்கண்ட பலவீனமான செய்தியை நம்பியிருக்கும் மாற்றுக் கருத்துடையோர் கீழ்க்காணும் கேள்விகளை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்ப்பட்டு சிந்தித்து பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
1. பிறந்த பிறையைப் பார்த்து இந்த துஆவை ஒத வேண்டும் என்று சொல்பவர்களில் நீங்களும் இருந்தால் இவ்வாறு எத்தனை தடவை பிறந்த பிறையை நேரடியாக பார்த்து இந்த துஆவை ஓதியுள்ளீர்கள்? அல்லாஹ்வை முன்னிறுத்தி உங்கள் நெஞ்சில் கை வைத்துக் கூறுங்கள்.
2. அப்படியே நீங்கள் ஒரு வெள்ளிக்கிழமை மஃரிபில் பிறைபார்த்து ஓதியிருந்தாலும், அது சனிக்கிழமைக்குரிய பிறைதான், அதுதான் தலைப்பிறை என்று உங்கள் மனசாட்சி ஊர்ஜிதமாக சொல்லுகிறதா?
3. ஒரு மாதத்தின் 29-வது நாளின் பின்னேரம் 30-வது இரவு என்று நீங்கள் முடிவு செய்யும் ஒருநாளில் மேற்குத் திசையில் பார்க்கும் பிறைக்குத்தான் மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நீங்கள் எந்த அடிப்படையில் முடிவு செய்தீர்கள்?
4. 'உன்னுடைய ரப்பும் என்னுடைய ரப்பும் அல்லாஹ்தான்' என்ற வாசகம் அந்த துஆவில் இடம் பெற்றிருக்கையில் நம் அனைவருக்கும் 'ரப்பாகிய' வல்ல அல்லாஹ் பிறைகளை பற்றி அல்குர்ஆனில் 10:5, 2:189, 55:5, 36:39, 6:96 போன்ற வசனங்களில் கூறியுள்ளவற்றை என்றாவது சிந்தித்ததுண்டா? அவற்றை தற்போதாவது நடைமுறைப்படுத்த தயாரா?
5. பிறைக்கும் நமக்கும் ரப்பாகிய அல்லாஹ்தான் ஒரு மாதத்தில் புறக்கண்களால் பார்க்க இயலும் பிறையின் இறுதி படித்தரத்தைப் பற்றிக் கூறியுள்ளான். அந்த 'உர்ஜூஃனில் கதீம்' என்ற அந்த ஹிலாலைப் பார்க்கும் போதும் மேற்படி துஆவை ஓதலாமா?
6. தேய்பிறையின் இறுதி நாளான 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலுக்கும் மேற்படி துஆ பொருந்தும் என்றால், அதற்கு அடுத்தநாள் சங்கமதினம் என்ற பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும் நாள் என்பதையும், அந்த சங்கம தினத்திற்கு அடுத்தநாள்தான் புதிய மாதத்தின் முதல்நாள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
7. இல்லை 'உர்ஜூஃனில் கதீம்' என்ற ஹிலாலைப் பார்க்கும் போது மேற்படி துஆவை ஓதக்கூடாது என்றால், ஏன் ஓதக்கூடாது? உர்ஜூஃனில் கதீம் என்ற பிறைப்படித்தரம் பிறையே இல்லையா? சந்திரனின் அப்படித்தரம் பிறையில் சேராது என்பதை ஆதாரங்களுடன் விளக்கத் தயாரா?
8. பிறை பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும், பிறையைப் பார்த்தால் துஆவும் ஒத வேண்டும் என்று வாதிக்கின்றனர். நீங்கள் யாராவது பிறையைப் பார்த்தால் டவுண் காஜியிடமோ, எங்கள் இயக்கத்தின் தலைமைக்கோ, பிறை கமிட்டியிடமோ அறிவிக்கவும் என்றும் விளம்பரப் படுத்துகின்றார்கள். அப்படி பிறந்த பிறையைப் பார்த்து தகவலை அறிவிக்கும் போது நீ முதலில் பிறை துஆவை ஓதிவிட்டாயா? என்று எந்த டவுண்காஜி கேட்கிறார்? டவுண் காஜிகளுக்கு இவ்வாறு தலைப்பிறையை பார்த்து துஆ ஓதக்கூடிய பாக்கியம் என்றாவது கிடைத்துண்டா? பிறைத் தகவலை அளிப்பவருக்கு இந்த துஆ அவசியம் தெரிந்திருக்க வேண்டுமா? இந்த துஆவை ஒதத் தெரியாதவர்கள் பிறையைப் பார்த்து விட்டு ஒருவேளை அறிவிக்கும் போது அவரின் அந்தத் தகவலை ஏற்று அமல் செய்யலாமா?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நம்மால் எழுப்ப இயலும். இருப்பினும் மேற்படி துஆ சம்பந்தப்பட்ட அறிவிப்பு யாரும் மறுக்க இயலாத வகையில் அமைந்துள்ள 'ழயீஃபான - பலவீனமான' செய்தியாக இருப்பதால் அதுபற்றிய சுருக்கமாக தகவல்களை மட்டுமே இங்கு சமர்ப்பித்துள்ளோம்.
கடந்த 2000-ஆம் ஆண்டு நெல்லை ஏர்வாடியில் பிறை விவாதம் ஒன்று நடைபெற்றது. அவ்விவாதத்தில் அவரவர்கள் தத்தமது பகுதியில்தான் பிறை பார்க்க வேண்டும் என்று ஒரு சாராரும், சர்வதேசப் பிறை கொள்கைதான் சரி என்ற மற்றொரு அணியாகவும் இருந்து விவாதித்தனர். அந்த விவாதத்தைத் துவங்கும் போது சர்வதேசப்பிறை கொள்கை தரப்பில் இருந்தவர்கள், ஹிலாலைப் பார்த்து ஒதும் மேற்படி துஆவை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். அப்போது ' ஆரம்பிக்கும் போதே பலவீனமான ஹதீஸா' என்று தத்தமது பிறை கொள்கையினர் கேலி செய்தனர்.
அவ்வாறு கேலிசெய்த தத்தமதுபகுதி பிறையினர் பின்பு ஒருநாள் அவர்களின் இதழ் ஒன்றில் இதே துஆ ரிவாயத்தை பிரசுரித்திருந்தார்கள். அப்போது சர்வதேசப் பிறை கொள்கையினர் பதிலுக்கு அவர்களை கேலிசெய்தனர். சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தை இங்கு பதிவு செய்கிறோம். தற்போது மக்களின் மறதியைப் பயன்படுத்தி தங்களுடைய பிறை கொள்கையை நிலைநாட்டிட வேறு வழியில்லை என வரும்போது இவ்வாறான பலவீனமான ஹதீஸ்களையும் தூக்கி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளோம்.