حدثنا أبو العباس محمد بن يعقوب ، ثنا أبو البختري عبد الله بن محمد بن شاكر ، ثنا الحسين بن علي الجعفي ، ثنا زائدة ، عن سماك بن حرب ، عن عكرمة ، عن ابن عباس ، قال : جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم ، فقال : إني رأيت الهلال - يعني هلال رمضان - ، فقال : " أتشهد أن لا إله إلا الله ؟ " قال : نعم ، قال : " أتشهد أن محمدا رسول الله ؟ " قال : نعم ، قال : " يا بلال أذن في الناس أن يصوموا غدا " تابعه سفيان الثوري ، وحماد بن سلمة ، عن سماك بن حرب. *(المستدرك على الصحيحين للحاكم - كتاب الصوم حديث : 1477).
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். நான் நிச்சயமாக பிறையைக் கவனித்தேன் என்று அவர் கூறினார். நீ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நீ சாட்சி கூறுகிறாயா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கிராமவாசி) ஆம் என்றார். பிலாலே! நாளை நோன்பு நோற்க மக்களிடம் நீர் அறிவிப்பு செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவித்தவர் : இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: ஹாக்கிம் 1477.
மேற்படி அறிவிப்பை காரணம் காட்டி பார்த்தீர்களா ஒருகிராமவாசி பிறையைப் பார்த்து அவர் மட்டும் தனித்து வந்து சாட்சி சொன்னதற்கே நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். நோன்பு வைப்பதற்கு மக்களுக்கு கட்டளையிடுமாறு பிலால் (ரழி) அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள் பாருங்கள் என்று கூறி இந்த அறிவிப்பு பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்குரிய ஆதாரம் என்று வாதம் வைக்கின்றார்கள்.
இந்த ஹதீஸில் ஸிமாக் பின் ஹர்ப் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறும்போது ''ழயீஃபுல் ஹதீஸ்', 'முள்தரபுல் ஹதீஸ்', 'மனன ஆற்றலில் மோசமானவர்' என்று விமர்சிக்கின்றனர். மேலும் குறிப்பாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் அவரைப் பற்றி கூறும்போது இக்ரிமா இடமிருந்து இவர் கூறும் ஹதீஸ்களில் அதிக முள்தரபுகள் இடம் பெற்றிருக்கும். மேலும், இவரின் மனன ஆற்றல் கடைசி காலத்தில் மோசமாகி விட்டது. ஆகையினால் இக்ரிமாவிடமிருந்து இவர் அறிவிக்கும் ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப் படாது என்று திட்ட வட்டமாக கூறியுள்ளார்கள். மேற்படி ஹாக்கிமின் 1477-வது அறிவிப்பையும் ஸிமாக் பின் ஹர்ப் அவர்கள் இக்ரிமாவிடமிருந்துதான் அறிவித்துள்ளார்.
இதே ரிவாயத்து அபூதாவுதில் 2006-வது அறிவிப்பாகவும், திர்மிதியில் 659-வது அறிவிப்பாகவும் இடம்பெறுகின்றன. அந்த ஸனதுகளில் 'வலீது' என்பவர் இடம்பெறுகிறார். அவரைப்பற்றி ஹதீஸ்கலை வல்லுனர்கள் 'பலவீனமானவர்', 'கத்தாப் - பொய்யர்', 'சரியில்லாதவர்' என்றெல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்து உள்ளனர். அவர் ரிவாயத்து செய்யும் அறிவிப்பை 'ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வளவு கடுமையாக விமர்சனங்கள் செய்யப்பட்ட, பலவீனமான அறிவிப்பாளர்களைக் கொண்ட மேற்படி அறிவிப்புகள் பிறந்த பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதற்கு எப்படி ஆதாரமாகும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். எனவே பிறையைக் பார்த்து அதன் தகவலைக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ரழமான் நோன்பை ஆரம்பித்ததாக வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகவே உள்ளன.
குறிப்பாக பிறை மறையும் மேற்குத் திசையில் மஃரிபு வேளையில் அதைப் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாள்தான் மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறுபவர்கள், நபி (ஸல்) அவர்கள் பிறையை நேரடியாகப் பார்த்ததாக ஒரு ஹதீஸைக்கூட தரமுடிவில்லையே ஏன்? யாரோ பிறையைப் பார்த்தாகவும், அவர்கள் தகவல் அளித்ததாகவும் வரும் பலவீனமான செய்திகளையே புறக்கண் பார்வைக்கு ஆதாரமாக வைப்பது ஏன்? இதையும் சற்று கவனிக்க வேண்டுகிறோம்.