பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும் அவை மக்களுக்கு நாட்காட்டியாகவும் (காலண்டர்), இன்னும் ஹஜ்ஜூக்கும் உள்ளன. அல்குர்ஆன் (2:189)
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக சந்திரனாகிய அதற்கு மாறிமாறி வரும் பல தங்குமிடங்களை விதியாக்கினான். அல்குர்ஆன் (2:189)
சந்திரனின் வளர்ந்து தேயும் நிலைகள் அனைத்தையும் கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனித்து அறிந்து ஒவ்வொரு மாதங்களையும் துல்லியமாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தையும் ஆரம்பிக்க வேண்டும். குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் துல்லிய விஞ்ஞான கணக்கீட்டு முறையில் அமைந்த இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்று ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பிரச்சாரம் செய்தும் பின்பற்றியும் வருகிறோம். ஹிஜ்ரி கமிட்டியின் பிறை நிலைப்பாட்டிற்கு குர்ஆனின் வசனங்களையும், ஸஹூஹான ஹதீஸ்களையும் நேரடி ஆதாரங்களாக சமர்ப்பித்துள்ளோம்.
இந்நிலையில் முஸ்லிம்கள் ரமழான் மாதத்தைத் துவங்கவும், நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களைத் தீர்மானிப்பதற்கும், பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்தே முடிவெடுக்க வேண்டும். இதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை என்ற தவறான சிந்தனை மக்கள் மனதில் மிகமிக ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்பிறை பிரச்சனையை மையமாக வைத்து நம் முஸ்லிம் சமுதாயம் பல்வேறு குழுக்களாக இன்று பிரிக்கப்பட்டும் விட்டது.
இவ்வாறு சந்திர மாதத்தின் 29-வது நாளன்று பிறையைப் புறக்கண்ணால் பார்த்து, அதன் பின்னர்தான் நோன்பு அல்லது பெருநாள் போன்ற மார்க்கக் கடமைகளை செய்ய வேண்டும், இதுதான் நபிவழி என்பதும் நம்மில் பலரது நம்பிக்கை. இந்நம்பிக்கைக்குக் காரணம் பிறைகள் குறித்த நபிமொழிகளுக்குத் தவறான விளக்கங்களும், மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் பல ஆண்டுகளாக போதிக்கப்பட்டதே. அத்தகைய நபிமொழிகளை குர்ஆன் சுன்னா வழியில் ஆய்வு செய்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலைத் தெரிவிப்பதே பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தின் நோக்கம்.
சந்திர மாதத்தின் 29-வது நாளன்று, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பிறையை புறக்கண்களால் பார்த்த பின்னரே புதிய மாதத்தைத் தொடங்கிட வேண்டும் என்பது மாற்றுக் கருத்தினரின் அசைக்க முடியாத நம்பிக்iகை. ஆனால் ஒவ்வொரு சந்திர மாதத்திலும் 29-ஆம் நாளன்று பிறையை மேற்குத் திசையில் பார்க்க இயலாது. மாறாக தேய்பிறைகளின் இறுதி நாட்களான 28, 29 ஆகிய தினங்களில் பிறையை கிழக்குத் திசையில்தான் பார்க்க இயலும். அதுவும் அதிகாலை (ஃபஜ்ரு) நேரத்தில்தான் பார்க்க முடியும். சந்திரனை அன்றாடம் பார்த்து வருபவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். இந்த இயற்கையின் நீதிக்கு எதிரான கருத்தை இயற்கை மார்க்கம் இஸ்லாம் போதித்து இருக்குமா? சிந்தியுங்கள்..!
அப்படியானால் சந்திர மாதத்தின் 29-வது நாளன்று, மேற்குத் திசையில், மஃரிபு நேரத்தில் பிறை பார்த்த பின்னரே நோன்பையும், பெருநாளை முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்து எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? இதன் பிண்ணனி என்ன? போன்ற கேள்விகளுக்கு பிறையும் புறக்கண்ணும் என்ற இந்த ஆய்வுப் புத்தகம் உங்களுக்கு விடை பகரும்.
இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட, முழுமையான, முறைபடுத்தப்பட்ட வாழ்க்கை நெறியே தீனுல் இஸ்லாம். நபி (ஸல்) அவர்களது காலத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரால் 'பித்அத்துகள்' எனும் நூதனச் செயல்கள் முஸ்லிம்களிடம் ஏற்படுத்தப்பட்டது உண்மையே. அத்தகைய நூதனச் செயல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் தவறான விளக்கங்களும் மொழியாக்கங்களும் கொடுக்கப்பட்டு, அவற்றையே மார்க்கம் என்றும் போதிக்கப்பட்டன. அதனால்தான் பிற்காலத்தில் தோன்றிய ஒவ்வொரு வழிதவறிய பிரிவினர்களும் தங்களின் கொள்கைகளுக்கு ஆதாரமாக சில குர்ஆன் ஆயத்துகளையும், ஹதீஸ்களின் பெயரால் புனையப்பபட்ட செய்திகளையுமே சுட்டிக் காட்டினர் என்பது வரலாறு.
தவறான மொழியாக்கத்துடன் விளக்கப்பட்ட அல்லது இட்டுக்கட்டப்பட்ட அத்தகைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டே மார்க்கத்தின் பெயரால் இடைச்செறுகள் செய்யப்பட்டன. அத்தகைய நூதனங்களையும், கருத்து வேறுபாடுகளையும் களைவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இதை சிந்தனைவாதிகள் எவரும் மறுக்க மாட்டார்கள். மேற்படி 'பித்அத்து'களைக் களைவதற்கு அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனும், ஸஹீஹான சுன்னாவும் மட்டும்தான் அடிப்படையும், உரைகல்லும் ஆகும்.
அதனால்தான் வல்ல அல்லாஹ் தனது திருமறையில் (4:59) உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் உங்களுக்கு மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும் என்று மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளான். இதை முதலில் நினைவில் கொள்ள வேண்டுகிறோம்.
முக்கியமாக அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) அவர்களும் இந்த உம்மத்திற்கு பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று கட்டளை இடவில்லை. ஒரு மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை அது மறையும் வேளையில் மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்த்துவிட்டு அடுத்த நாளை முதல்நாளாகக் கொள்ள வேண்டும் என்று நமது மார்க்கம் வலியுறுத்த வில்லை. ஒரு சந்திர மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை மேற்குத் திசையில் பார்க்க இயலாது. மாறாக தேய்பிறைகளின் இறுதி நாட்களான 28, 29 ஆகிய தினங்களில் பிறையை கிழக்குத் திசையில்தான் பார்க்க இயலும். அதுவும் அதிகாலை (ஃபஜ்ரு) நேரத்தில்தான் பார்க்க முடியும்.
மாதத்தில் 29-ஆம் நாளன்று பிறையை பார்க்கும் நிலைபாட்டில் நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக ஒரு மாதம் எப்போது முடியும்? என்பதை முற்கூட்டியே அறிந்த நிலையில் இருந்தாhகள். இவற்றை தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,
• நபியின் (ஸல்) வழியே நம்வழி,
• பிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுறையும்,
• பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இமாம்கள்,
•யூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்.
போன்ற தலைப்புகளில் மக்கள் மத்தியில் இன்னும் எடுத்துச் சொல்லப்படாத பிறைகள் குறித்த வரலாற்றுச் சுவடுகளும், குர்ஆன் சுன்னாவின் ஆதாரங்களும் விளக்கப்பட்டுள்ளன. பிறைகள் குறித்து இஸ்லாம் கூறும் உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள இந்த ஆய்வுப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்தறிய வேண்டுகிறோம்.
தீனுல் இஸ்லாம் எனும் நமது மார்க்கம் மட்டும்தான் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்று நம்புகிறோம். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான கருத்துகள் நிறைந்த இறை மார்க்கம் என்றும் பிறரிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துகிறோம். மார்க்கம் காட்டித்தராத எச்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான் என்பதையும் நாம் அறிவோம். பிறைகள் குறித்து பல நூதனங்களையும், தவறுகளையும் மார்க்கத்தின் பெயரால் மக்கள் விளங்கி வைத்துள்ளனர். எனவேதான் 'பிறையும் புறக்கண்ணும்' என்ற இந்த ஆய்வுப் புத்தகத்தை விருப்பு வெறுப்பின்றி படியுங்கள் என்று மீண்டும் தங்களிடம் கோருகிறோம்.
மாதத்தில் 29-ஆம் நாளன்று சூரியன் மறைந்த பின்னர் (மஃரிபில்) பிறையை மேகம் மறைத்தால் அந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது என்றும் பிறை தெரிந்தால் புதிய மாதம் தொடங்கி விடும் என்றும் மாற்றுக் கருத்தினர் நம்புகின்றனர். அப்படியானால் ஒரு மாதம் எத்தனை நாட்களில் முடியும்? என்பதை அந்த மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபில்தான் நம்மால் அறிந்து கொள்ள முடியும்..! ஆக 29-ஆம் நாளன்று பிறையை மேகம் மறைக்குமா? மறைக்காதா? என்று அறியாத நிலையில் ஒரு மாதத்தைக்கூட முற்கூட்டி கணக்கிட முடியாது என்ற நிலை. இதுதான் மார்க்கம் என்றால் 10:5 வது வசனம் குறிப்பிடும் ஆண்டுகளைக் கணக்கிட முடியும்? சுமார் 200 கோடி முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறோம். நபி (ஸல்) அவர்களின் உம்மத்ததை ஒரு காலண்டர் இல்லாத சமுதாயமாகவா அல்லாஹ் வைத்திருப்பான்? என்பதை சிந்தியுங்கள்.
இப்புத்தகத்தைத் தூய நோக்கோடு படிக்கும்போது, இதுநாள்வரை நம்பியிருந்த பிறை கோட்பாடுகளை தற்போது எப்படி மாற்றிக் கொள்வது? என்ற சிந்தனை தங்களுக்கு ஏற்படலாம். அல்லது இக்கருத்துக்கள் சரியானதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் போது நமது சமுதாய மக்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது? என்ற தயக்கம்கூட ஏற்படலாம். சத்தியத்தை உளப்பூர்வமாக உணர்ந்து மேற்படி சிந்தனையில் நீங்களும் இருந்தால், தாங்கள் நிதர்சனமாக விளங்கிக் கொண்ட சத்தியத்தை துணிந்து உரைக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.
உண்மையை உணர்ந்து வெளிப்படுத்துவோரும், தவறை திறுத்திக் கொள்வோரும்தான் உத்தமர்கள், உயர்ந்தவர்கள், இறை உவப்பைப் பெற்றவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். சத்தியப்பாதையில் இருக்கும் ஒரு முஃமின் எதிர்ப்புகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சிவிடக் கூடாது. நேரான வழியில் நடப்பதற்கும், சத்தியத்திற்கு சான்று பகர்வதற்கும் தயங்கிடவே கூடாது என்று நமது மார்க்கம் நமக்குப் போதிக்கிறது. சத்தியப்பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்த, சத்தியத்தை உரக்கச் சொல்லிட எங்களோடு புறப்பட்டு வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறோம். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது இஸ்லாமாக இருக்கட்டும் என்ற சிந்தனையோடு வீழ்த்தப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியை நிலைபெறச் செய்ய எங்களோடு கைகோத்து செயல்பட உங்களையும் அழைக்கிறோம்.
உங்களின் வேலைப் பளுவிற்கு மத்தியில் சற்று நேரம் ஒதுக்கி தூய சிந்தனையுடனும், திறந்த மனதுடனும் இப்புத்தகத்தை முழுவதுமாகப் படித்துச் சிந்திக்குமாறு மிக்க அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நாம் முன்னுரையில் விளக்கியுள்ள விஷயங்களை தங்கள் சிந்தனையில் நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டு 'பிறையும் புறக்கண்ணும்' என்ற ஆய்வுக்குள் உங்களையும் அழைக்கிறோம்.